உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஊடக நண்பர்கள் தயக்கமின்றி செயல்பட வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 30/12/2016


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தனக்கும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிகிச்சையில் இருந்த முதல்வரை பார்க்க உறவினர்கள் யாரையும் மருத்துவமனையில் ஏன் அனுமதிக்கவில்லை, ஜெயலலிதா உடல்நிலை குறித்து முழுத் தகவலை ஏன் வெளியிடவில்லை, மத்திய அரசு ஏன் வாயே திறக்கவில்லை? என பல்வேறு கேள்விகளையும் நீதிபதி வைத்தியநாதன் எழுப்பியுள்ளார். மேலும், மனுவைத் தொடர்ந்து விசாரிக்கும் வாய்ப்பு அமைந்திருந்தால், புதைக்கப்பட்ட உடலைத்தோண்டி எடுத்து உடல் கூறாய்வு நடத்த உத்தரவிடுவேன் என்றும் அவர் கூறியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தகைய ஒரு நிலைக்கு இடம் தராமல் அ.தி.மு.க. அரசு முழுமையான தகவல்களை வெளியிட வேண்டியது கட்டாயமாகும் என்று கூறிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இதுகுறித்து முதல்வரையும் மற்ற அமைச்சர்களையும் ஊடக நண்பர்கள் சந்தித்து பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஊடக நண்பர்கள் தயக்கமின்றி செயல்பட வேண்டும் எனவும், தமிழக மக்களின் நலன் கருதி ஊடக நண்பர்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 


Share this News: