பெங்களூர் ரிசார்ட்டில் ரெய்டு நடத்தும் வருமானவரித்துறை கூவத்தூரில் ஏன் நடத்தவில்லை? தளபதி மு.க.ஸ்டாலின் கேள்விசென்னை | 02/08/2017


குஜராத் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள இடங்களில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை - கூவத்தூர் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கைப் பார்த்தது ஏன்?” என செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  கர்நாடக மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள விடுதிகளிலும், அது தொடர்பான காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளிலும் ரெய்டு செய்யும் வருமான வரித்துறை, சென்னை கூவத்தூர் விடுதியில் 120க்கும் மேற்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது வேடிக்கைப் பார்த்தது ஏன் என்ற கேள்வி இப்போது எழுகிறது. அதேபோல, புதுச்சேரியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர், முதலமைச்சர் போட்டியிடுவதற்காக தன் பதவியிலிருந்து விலகினார். வருமான வரித்துறை உடனே அவரது வீட்டுக்குச் சென்று ரெய்டு செய்தது. ஆனால், தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்கள், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடைபெற்ற பேரம், ஏன் சில வாரங்களுக்கு முன்பு திடீரென்று எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவிய சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி ஆகியோர் மீதெல்லாம் வருமான வரித்துறைக்கு எந்தச் சந்தேகமும் எழுவதில்லை. இவர்களிடம் ரெய்டு நடத்துவதில்லை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். ஆகவே, வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் போக்கினை  பிரதமர் நரேந்திரமோடி தடுத்து நிறுத்திட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


Share this News: