உலக புகழ்பெற்ற சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர் சேர்க்கையை நிறுத்தியிருப்பது நீட் தேர்வின் பாதிப்புகளை வெளிப்படுத்தியுள்ளது - கழக செயல் தலைவர் தளபதி அவர்கள் அறிக்கைசென்னை | 06/09/2017


நீட்டை ஏற்க மறுத்து, உலக புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாணவர் சேர்க்கையை நிறுத்தி இருப்பது வேதனையளிப்பதாகவும், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றி வந்த இந்தக் கல்லூரி, இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு மத்திய அரசு திணித்த நீட் தேர்வு காரணம் ஆகிவிட்டது மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வால் தமிழக கிராமப்புற மாணவர்கள் எவ்வளவு மோசமான முறையில் பாதிக்கப்படுவர் என்பதற்கும், சமூகநீதி பாதிக்கப்படுவதற்கும் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் இந்த முடிவு வெளிப்படுத்தியிருப்பதாகவும், மருத்துவக் கல்வி பெறும் கனவில் மாணவர்களும், தங்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என்று பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகம் 160 இடங்களை இழப்பது என்பது தாங்க முடியாத கொடுமை என தெரிவித்துள்ளார். இதையெல்லாம், பெரும்பான்மையை இழந்த திரு. எடப்பாடி பழனிசாமியின் ‘குதிரை பேர’ அரசு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக் கேடானது. ஆகவே, நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும். உடனடியாக மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து, நீட் தேர்வை ரத்து செய்து, அடித்தட்டு மக்களுக்குப் பயன்படும் சி.எம்.சி. கல்லூரி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்கவும் வழிவிட்டு, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு உடனடியாக மாற்றவும், மத்திய அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Share this News: