உள்கட்சி பிரச்னைக்காக – உள்ளாட்சி அமைப்புகளை முடக்கும் முயற்சிக்கு மாநில தேர்தல் ஆணையம் இடமளிக்காமல் உயர் நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்த வேண்டுமென தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தல்சென்னை | 05/09/2017


செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, நவம்பர் 17 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்”, என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தலைமையிலான அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்பதோடு, உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உயர்நீதிமன்றத்தின் இந்த மிக முக்கியமான தீர்ப்பு திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசின் அடாவடிப் போக்கிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது என கழக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். மேலும்,உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையைப் பயன்படுத்தி ஏகோபோக அராஜகத்திற்கும், ஊழலுக்கும் அதிகாரிகளை உடந்தையாக்க, உள்ளாட்சித்துறை அமைச்சரோ, முதலமைச்சரோ இந்தத் தேர்தல் நடத்துவது பற்றி அக்கறை காட்டவில்லை. அதற்கு மாறாக திடீரென்று, ‘உள்ளாட்சித் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம்’, ஒன்றை அவசரமாக அமைத்து, உள்ளாட்சித் தேர்தலை மேலும் தாமதம் செய்ய, புதிதாக ஒரு காரணம் தேடினார்கள். பொறுப்புள்ள எதிர்கட்சியாக இதை திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் எதிர்த்துள்ளது. வெளிநடப்பும் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். உள்ளாட்சி ஜனநாயகத்தை மேலும் முடக்கும் ‘குதிரை பேர’ அரசின் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இடமளிக்காமல், உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


Share this News: