எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு விழாக்களில் தி.மு.க.,வை விமர்சிக்கும் ‘குதிரை பேர’ அரசைக் கண்டிக்கிறேன் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கைசென்னை | 18/09/2017


மறைந்த 'புரட்சி தலைவர்' எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அரசு பணத்தை செலவு செய்து, தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து, முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும், துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வமும் அரசு விழாக்களில் அரசியல் பேசி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  கழக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களின் புகழைப் பாடுவதற்கு பதிலாக தங்களின் புகழ் பாடவும், உட்கட்சி பிரச்னை தொடர்பான தரம்தாழ்ந்த விமர்சனங்களை எடுத்து வைக்கவும், தி.மு.க.,வை விமர்சிப்பதற்கும் அரசு விழாக்களை பயன்படுத்தி, அரசியல் அநாகரீகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அதிமுகவின் கட்சி பணத்தில் கூட்டம் போட்டுப்பேச வேண்டியவற்றை எல்லாம், அரசு விழா என்ற பெயரில் அரசாங்க பணத்தில் “கட்சி பொதுக்கூட்டங்கள்” போல் போட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் நாகரீகத்திற்கும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்றரீதியில், அரசு விழாக்களைப் பயன்படுத்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார். திமுகவின் “உட்கட்சி சண்டை” குறித்த பிரசாரத்திற்கும், தி.மு.க.,வை திட்டுவதற்கும் அரசு பணத்தை ஒதுக்கீடு செய்யும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், விரயமாகிக் கொண்டிருக்கும் அரசு பணத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டிய நிலை கட்டாயம் வரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Share this News: