காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சீர்குலைத்து - தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் விதமாக செயல்படுவதை மத்திய பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கைசென்னை | 20/09/2017


நீண்டகால விசாரணைக்குப் பின்னர் வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையே சீர்குலைக்கும், கெட்ட நோக்கத்துடன், காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முன்பு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு வாதிட்டிருப்பது கண்டனத்திற்கு உரியதும், பேரதிர்ச்சியளிக்கக் கூடியதுமாக கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007-ல் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்து, அது அரசிதழிலும் வெளியிடப்பட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அமைக்காமல், அரசியல் நோக்கங்களுக்காக வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகின்ற மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது காவிரி இறுதித் தீர்ப்பையே தமிழகத்திற்கு முற்றிலும் விரோதமாக மாற்றும் வகையில் தனது வாதங்களை உச்சநீதிமன்றத்தின் முன்பு எடுத்து வைப்பது, ‘கர்நாடக மாநிலத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டும்’, என்ற குறுகிய நோக்கத்திற்காக தமிழகத்தின் நலனை, தமிழக விவசாயிகளின் நலன்களை  காவு கொடுக்கத் தயாராகி விட்டது என்பதை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படும் அளவிற்கு உச்ச நீதிமன்றத்தில் புதுப்புது சந்தேகங்களை எழுப்புவதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றமே இருமுறை மத்திய அரசைக் கண்டித்திருப்பதால், காவிரி மேலாண்மை வாரியத்தை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் அமைக்க, மனசாட்சிக்கு மதிப்பளித்து மத்திய அரசு முன் வர வேண்டுமே தவிர, காவிரி இறுதித் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் கர்நாடக மாநிலத்தின் முயற்சிக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு துணை போகக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.


Share this News: