ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டுமென தளபதி மு.க.ஸ்டாலின் கோரிக்கைசென்னை | 19/09/2017


ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு, ஒத்துழைக்க இலங்கை அரசு தொடர்ந்துப் பிடிவாதமாக மறுத்து வருவது கவலைக்கு உரியதாகவும், கண்டிக்கத்தக்கதாகவும் இருக்கிறது என கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேசிய மனித உரிமைக்குழு தலைவர் இலங்கை அரசின் மெத்தனத்தைச் சுட்டிக்காட்டி, “இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணையை எந்த நாட்டில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்”, என்று கூறியிருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. அந்தளவிற்கு இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஏற்க மறுத்து, சுதந்திரமான விசாரணைக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டு, ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈழத்தமிழர்கள் இலங்கையில் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், உரிய உரிமைகளுடனும் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவும், ஈழத்தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அடைவதற்கும், அவர்களின் விருப்பப்படிப் பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றே நிரந்தர அரசியல் தீர்வாக அமையும் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருப்பதாகவும், ஈழத்தமிழர்களின் கௌரவமான வாழ்க்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை மூலம் போதிய அழுத்தத்தை இலங்கை அரசுக்கு கொடுத்து, போர்க்குற்றங்களில் ஈடுபட்டோர் மீதான நடவடிக்கைகளை விரைவு படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.


Share this News: