வேற்றுமையில் ஒற்றுமை காணும் மாபெரும் தலைவராக விளங்கியவர் தேவர் பெருமகனார் - கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டிமதுரை | 30/10/2017


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், தேவர் திருமகனார் அவர்களுக்கு மதுரை கோரிப்பாளையத்தில் மிகப்பெரிய சிலையை நிறுவியது மட்டுமல்லாமல், தேவர் திருமகனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகின்ற நேரத்தில், அவருக்கு மணிமண்டபத்தையும், அணையா விளக்கையும் ஏற்படுத்தித் தந்தவர் தலைவர் கலைஞர் என்றார். மேலும், வேற்றுமையில் ஒற்றுமையை காணுகின்ற மாபெரும் தலைவராக, ஏழை - எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், விவசாயப் பெருங்குடி மக்கள் என எல்லாத் தரப்பினருக்கும் குரல் கொடுக்கும் மாபெரும் தலைவராக விளங்கியவர் தேவர் பெருமகனார் என்றார். அப்போது, மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் அவர்களுடைய பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பபட்டு வருவது பற்றிக் கேட்டதற்கு, இந்த கோரிக்கை தொடர்ந்து பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. எனவே, இப்போது தமிழ்நாட்டில் ’குதிரை பேர’ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்த வேண்டும். இல்லையென்று சொன்னால், விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலரும் நேரத்தில் அதற்கு எல்லா வகையில் திராவிட முன்னேற்றக் கழகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்


Share this News: