எண்ணூர் முதல் முட்டுக்காடு வரை 49 கிலோமீட்டர் தூரம் உள்ள கால்வாயை தூர்வாரி இருந்தால் சென்னை மாநகரில் எங்குமே மழைநீர் தேங்கியிருக்காது - கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டிசென்னை | 31/10/2017


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். திருவிக நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், அன்னை சத்யா நகரில் உள்ள விநாயகர் கோயில் தெரு ஓடை, வார்டு எண் 64க்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஓடை, ரெட்டேரி ஓடை அம்பேத்கர் நகர் பிரதான சாலை ஓடை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். இதனையடுத்து, கொளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சென்னை மாநகரில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் காரணத்தினால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி, பொதுமக்களுக்கு பலவித தொல்லைகள் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி குடிநீர் வாரியம், மின்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்ற பல துறைகளின் அதிகாரிகளை எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் என்றமுறையில் அழைத்து, இன்று காலையில் மண்டல அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினேன். மேலும், எண்ணூரில் இருந்து முட்டுக்காடு வரையில், ஏறக்குறைய 49 கிலோமீட்டர் உள்ள கால்வாயை தூர்வாரி இருந்தால், சென்னை மாநகரில் எந்தவொரு இடத்திலும் தண்ணீர் தேங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், ’குதிரை பேர’ அரசு அதனை மேற்கொள்ளவில்லை.  முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும்,  அவர் தலைமையில் இயங்கும் பொதுப்பணித்துறையும் அதனை கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினார். அதேபோல, கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட தி.மு.க நிர்வாகிகளை எல்லாம் அழைத்து ஆலோசனை மேற்கொண்டு, மாநகராட்சி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளை நிறைவேற்ற அனைவரும் பக்கபலமாக இருந்து துணை நிற்க வேண்டுமென்றும், மக்களுடைய பிரச்சனைகளை அறிந்து உடனுக்குடன் அவற்றை போக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார்.


Share this News: