ஜி.எஸ்.டி. கவுன்சிலை ஒவ்வொரு முறையும் கூட்டி வரி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், இனி அதிகபட்ச வரியே 18 சதவீதம் என்பதை உருவாக்க வேண்டுமென கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தல்சென்னை | 11/11/2017


ஜி.எஸ்.டி. கவுன்சிலை  ஒவ்வொரு முறையும் கூட்டி வரி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், இனி அதிகபட்ச வரியே 18 சதவீதம் என்பதை உருவாக்க வேண்டும் என கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”213 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைத்து நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவித்திருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் அவசரகதியில் அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், வணிகர்கள், சிறு மற்றும் குறு தொழில் செய்வோர் அனைவரும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பியபோதெல்லாம் அமைதி காத்தது மத்திய பா.ஜ.க அரசு. ஏன், தி.மு.க.,வின் சார்பில், ”ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதை மூன்று மாதம் தள்ளி வைத்து, முறையாக திட்டமிட்டு பிறகு செயல்படுத்துங்கள்” என்று நான் மத்திய நிதியமைச்சருக்கு விடுத்த வேண்டுகோளையும் கூட ஏற்கவில்லை.   இந்த ஐந்து மாத காலத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டு ஜி.எஸ்.டி.யில் உள்ள 28 சதவீத வரி விதிப்பை (புகையிலை தவிர) அடியோடு ரத்து செய்து விட்டு இனி அதிகபட்ச வரி 18 சதவீதம் மட்டுமே என்ற முடிவினை மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு எடுக்க உடனடியாக முன் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் ஜி.எஸ்.டி. கவுன்சிலை கூட்டி வரி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், இனி 18 சதவீத வரியே அதிகபட்ச வரி என்ற நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய பா.ஜ.க. அரசு  எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


Share this News: