செவிலியர் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அதிமுக அரசு: தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்சென்னை | 29/11/2017


அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் புறக்கணிக்கும் அதிமுக அரசு, தனது அலட்சியத்தால் நோயாளிகளின் உயிருடன் விளையாடுவதாக கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  'செவிலியர் பணி என்பது உயிர் காப்பதில் துணை நிற்கும் மருத்துவப் பணி. அதனை ‘வேலை’ என்று சொல்வதை விட ‘சேவை’ என்பதே பொருத்தமானது. அத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அரசு செவிலியர்களின் கோரிக்கைகளை ‘குதிரை பேர’ அரசு தொடர்ந்து புறக்கணித்த காரணத்தால், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்துள்ள ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம் இரவு பகலாகத் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களின் ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை பலமுறை அரசுக்கு வலியுறுத்தியும், நிறைவேறாத காரணத்தினால், அவர்கள் போராட்டக் களத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மருத்துவத் துறையிலேயே அதிக பொறுமை காக்க வேண்டிய பணி, செவிலியர் பணி. அவர்களே பொறுமையிழக்கும் நிலையை ‘குதிரை பேர’ அரசு ஏற்படுத்தி உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த அவலநிலை நீடிக்காதபடி உடனடியாக செயல்பட்டு, செவிலியர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் வகையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட விஜயபாஸ்கர் நேரடியாக வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வழிவகை செய்து நோயாளிகளுக்குத் தடங்கலின்றி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Share this News: