சி . என் . அண்ணாதுரை

அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை 15.9.1909-ம் ஆண்டு பிறந்தார். சென்னை அருகில் உள்ள புகழ்பெற்ற நகரமான காஞ்சிபுரத்தில் நடுத்தரக் குடும்பத்திற்கும் குறைவான அந்தஸ்தில் வசித்த நடராஜன் -பங்காரு அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா உயர்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்ற அவர் உயர் கல்விக்காக சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். முதலில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டம் பெற்ற அவர் பொருளாதரத்திலும், அரசியலிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னையைச் சேர்ந்த ராணி என்பவரை மாணவனாக இருக்கும் போது அண்ணா திருமணம் செய்து கொண்டார். பிள்ளை இல்லை என்றாலும் அண்ணா தனது மூத்த சகோதரியின் நான்கு பேரக்குழந்தைகளை வளர்ப்புப் பிள்ளைகளாக எடுத்துக் கொண்டார்.

தமிழ் மொழியில் மிகுந்த புலமை பெற்றவர் என்பதால் அவர் “அறிஞர் அண்ணா” என்று அழைக்கப்பட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் பொதுச் செயலாளர் மட்டுமின்றி, முதன் முதலாக வந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் முதலமைச்சரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் என்ற விதையை முதலில் விதைத்தவர் அண்ணாதான். தன் இளம் வயதிலேயே அரசியல் ஆர்வம் கொண்ட அவர் தந்தைபெரியாரின் திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். அந்த இயக்கத்தில் உயர்ந்த இடத்திற்கு அவர் வளர்ந்தாலும், அவருக்கும் அவரது அரசியல் ஆசானுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்திலிருந்து அவர் விலக நேர்ந்தது. அரசியல் பத்திரிக்கைகளில் ஆசிரியராகப் பணியாற்றியதில் அவருக்குக் கிடைத்த அனுபவம், செய்தி துறையில் அவருக்கு இருந்த அறிவு எல்லாம் தனிக்கட்சி தொடங்குவதற்கு உரிய தைரியத்தை அவருக்குக் கொடுத்தது.

17.9.1949 அன்று கலைஞர் கருணாநிதி, வி.ஆர்.நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், கே. அன்பழகன், என் வி நடராஜன், ஈ.வி.கே. சம்பத் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அறிஞர் அண்ணா. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக அண்ணா தேர்வு செய்யப்பட, கலைஞர் கருணாநிதி கழகத்தின் கொள்கைகளைப் பரப்பும் செயலாளராக நியமிக்கப்பட்டார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது மட்டுமே மாநிலத்தை சீர்படுத்த உதவும் என்று அறிஞர் அண்ணா திடமாக நம்பினார். கழகம் துவங்கிய போது பல உன்னதமான இதயங்கள் இருந்தாலும், சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அறிஞர் அண்ணாதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்.

அறிஞர் அண்ணாவின் பேச்சுத்திறமைதான் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மிகப்பெரும் ஊக்கத்தைக் கொடுத்து, கழகம் வளர்ச்சி பெற பேருதவியாக அமைந்தது. “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்பது அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற முழக்கம். இன்றுவரை தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கத் தலைவர்களுக்கு எல்லாம் அறிஞர் அண்ணா ஆசானாகத் திகழ்கிறார்.