அறிஞர் அண்ணா 17.9.1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது, கழகத்தின் கொள்கைகள் ஏறக்குறைய திராவிடர் கழகத்தின் கொள்கை போன்றதே. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை காப்பாற்றுவது, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளைக் கடைப் பிடித்த அதே நேரத்தில், திராவிடர் கழகம் போல் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானமாக இருந்தது. தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தால்தான் மாநிலத்தை சீரமைக்க முடியும் என்று உறுதியாக தி.மு.க. நம்பியது. 1962ல் நடைபெற்ற சீனப் போருக்குப் பிறகு “திராவிட நாடு” வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியாவின் கரத்தைப் பலப்படுத்த மத்திய அரசுக்கு ஆதரவாக தி.மு.க. நின்றது.

அரசியலுக்குள் நுழைந்த நேரத்தில் அறிஞர் அண்ணா நாத்திகவாதியாக இருந்தாலும், அவரின் புகழ்பெற்ற “ஒன்றே குலம். ஒருவனே தேவன்” என்ற முழக்கம் அனைவரையும் கவர்ந்தது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் மதித்துப் போற்றுவதற்கு ஏற்ற முழக்கமானது. ஆனால் அண்ணாவிற்கு அடுத்து வந்திருக்கும் கலைஞர் நாத்திகத்தை கடைப்பிடிக்கிறார். உண்மையில் மதசார்பற்ற அமைப்பாக கழகம் திகழ்கிறது.

தமிழர்களின் கலாச்சாரம், மொழி ஆகியவற்றிற்கு பாதுகாப்புக் கேடயமாக தி.மு.க. விளங்குகிறது. இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிப்பதை கழகம் துவங்கப்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து எதிர்த்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக திராவிட முன்னேற்றக் கழகம் பல உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் கட்சி நிர்வாகிகள் ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு கட்சித் தொண்டரும் தங்களின் திறமையான செயல்பாடுகள் மூலம் கட்சித் தொண்டர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே கட்சியின் பொறுப்புகளுக்கு தேர்வு பெற்று வர முடியும்.