Announcement - DetailPage - DMK
header_right
newimg
வருகின்ற தேர்தலில் பாசிச பாஜக அரசை அகற்றவும், ஊழல் அதிமுக அரசை விரட்டவும்...

பதிவு: 19 Nov 2018, 22:40:19 மணி

"வருகின்ற தேர்தலில் பாசிச பாஜக அரசை அகற்றவும், ஊழல் அதிமுக அரசை விரட்டவும் அனைவரும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்”

இன்று (09-11-2018) துறையூரில் நடைபெற்ற துறையூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார் திருமணத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்தார். பின்னர், மணமக்களை அவர் வாழ்த்திப் பேசிய உரையின் முழு விவரம் பின்வருமாறு:

மணவிழா நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்றுள்ள திருச்சி தெற்கு மாவட்டத்தினுடைய செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களே, தொடக்கத்திலே அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய திருச்சி வடக்கு மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் அவர்களே, வாழ்த்துரை வழங்கி அமர்ந்துள்ள விழுப்புரம் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர். பொன்முடி அவர்களே, முன்னாள் அமைச்சர் சட்டப்பேரவை உறுப்பினர் மதிவாணன் அவர்களே, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் அவர்களே,மாநில இளைஞர் அணியினுடைய துணைச் செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே, மற்றும் இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து, நேரமில்லா காரணத்தால் வாழ்த்துவதற்கு வாய்ப்பை இழந்த நிலையிலே ஆனால் அதேநேரத்தில் மனதார வாழ்த்துவதற்கு வருகை தந்திருக்கக்கூடிய கழக சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தினுடைய முன்னோடிகளே, பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்திருக்கக்கூடிய கழகத்தின் ஆற்றல்மிக்க செயல் வீரர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களே, மணமக்களுடைய பெற்றோர்களே, உற்றார் உறவினர்களே, என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன் பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

செல்லதுரை திருமதி பூபதி தம்பதியினுடைய அருமை மகன் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்களுக்கும்,திரு நாகராஜன் திருமதி மல்லிகா ஆகியோருடைய புதல்வி நா.சுபாஷினி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துக்களோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறி இருக்கிறது. இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்று மணவிழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். இந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய மணமக்களுக்கு மக்களுடைய குடும்பத்தாருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்றைக்கு நடைபெற்று இருக்கக்கூடிய இந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அந்த அங்கீகாரத்தோடு நடந்தேறியிருக்கிறது. இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம். இன்னும் பெருமையோடு சொல்லவேண்டும் என்று சொன்னால் இது ஒரு தமிழ் திருமணம். நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய நம்முடைய அழகு தமிழ் மொழிக்கு செம்மொழி என்கிற அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்த தலைவர் தான். அப்படிப்பட்ட பெருமைக்குரிய நம்முடைய தாய்மொழியாக இருக்கக்கூடிய இந்த அழகு தமிழ் மொழியில் இந்த திருமணம் நடந்திருக்கிறது. இங்கே பொன்முடி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்,மணமகன் பெயர் ஸ்டாலின் குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடியவர். என்னுடைய பெயரை அவர் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார். பெயரை வைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதில்தான் எல்லோரும் முக்கியமாக இருந்திட வேண்டும்.

நான் வந்தவுடனே அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தாலும், நான் பலமுறை அவரை சட்டமன்றம் நடக்கக்கூடிய நேரத்தில் அவரை சந்திக்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருந்தாலும் அல்லது அறிவாலயத்திற்கு வருகிறபோதெல்லாம் அவரைப் பார்க்கிற - சந்திக்கிற - பேசுகிற வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் அப்போதெல்லாம் நான் ஒரு கேள்வி அவரிடத்தில் கேட்டதில்லை.

ஆனால், இப்போது நான் மேடைக்கு வந்த உடனே அதுவும் மணமகனாக வீற்றிருக்கூடிய ஸ்டாலின் குமார் பக்கத்தில் அமர்ந்திருந்த நேரத்தில் எனக்குள் ஏற்பட்ட ஒரு சந்தேகத்தை அவரிடத்தில் கேட்டேன். ஸ்டாலின் குமார் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே, இரண்டு பெயர் வைத்திருக்கிறீர்களே. என்னுடைய நினைவாக அல்லது ஸ்டாலினுடைய பெயரை சூட்ட வேண்டும் என்று கருதியிருந்தால் வெறும் ஸ்டாலின் என்றுதானே வைத்திருக்க வேண்டும். அது என்ன பக்கத்திலே குமார் என்று அதையும் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் என நான் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் இல்லை – இல்லை. அந்த பெயரை வைக்கிற போது எல்லோரும் ஸ்டாலின் என்று கூப்பிட்டால் அது மரியாதையாக இருக்காது. பெயரை மாத்திரம் அப்படி வைத்துக்கொண்டு வீட்டில் எல்லோரும் கூப்பிடுவது குமார் என்று தான் என்னை கூப்பிடுகிறார்கள் என்று என்னிடத்தில் ஒரு விளக்கத்தை எடுத்துச்சொன்னார்.

ஆனால், அந்தப் பெயர் ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் அல்ல நான் ஏற்றுக் கொள்கிறேன். இது சொல்லுகிற போது உங்களுக்குகூட சந்தேகம் வரும். ‘நீ மட்டும் ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறாயே’ அது தமிழ் பெயரா? என்று நீங்கள் கேட்கக்கூடும், இல்லை என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஸ்டாலின் என்பது ஒரு காரணப்பெயர் அதை நீங்கள் மறந்துவிடக்கூடாது நான் பலமுறை பல நிகழ்ச்சிகளில் சொல்லியிருக்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் நெஞ்சுக்கு நீதியிலே அதை சுட்டிக்காட்டியிருக்கிறார். எனக்கு பிறந்திருக்கக்கூடிய குழந்தைகள் என்னுடைய பேரக்குழந்தைகள் அத்தனை பேருக்கும் நான் தமிழ் பெயரைத்தான் சூட்டியிருக்கிறேன் என்று பலமுறை கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், நான் மாத்திரம் தான் கொஞ்சம் விதிவிலக்கு. அந்த விதிவிலக்கு என்ன என்று சொன்னால் காரணப்பெயராக அது அமைந்திருக்கிறது. எங்களுடைய வீட்டில் என்னுடைய அண்ணன்கள் யாராக இருந்தாலும் முத்துவேல் என்னுடைய தாத்தா, தலைவருடைய தந்தை அவருடைய நினைவாக வைத்தபெயர் தான் மூத்த அண்ணனுக்கு வைத்த பெயர் மு.க.முத்து என்பது உங்களுக்கு தெரியும். அடுத்தது அழகிரி அவருக்கும் காரணம் உண்டு. பட்டுக்கோட்டை அழகிரியினுடைய அந்தப் பேச்சை பார்த்து தான் மேடையில் பேசத் தொடங்கினேன் என்ற தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய நினைவாகத்தான் அந்தப் பெயரை வைத்தார்கள்.

அதேபோல் வீட்டில் இருக்கக்கூடிய கனிமொழி ஆகட்டும், செல்வி ஆகட்டும், தமிழரசு ஆகட்டும். அவர்களுக்கு எல்லாம் தமிழ் பெயர்கள் சூட்டப்பட்டது. ஆனால், என்னுடைய பெயர் மாத்திரம் ஸ்டாலின் என்று சூட்டுவதற்கு என்ன காரணம் என்று கேட்டால். நான் பிறந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் எனக்கு என்ன பெயர் சூட்ட நினைத்திருந்தார்கள் என்று சொன்னால், அய்யாதுரை என்று தான் எனக்கு பெயர் சூட்ட நினைத்திருந்தார்கள். அதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அய்யாதுரை என்பது நம்முடைய ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை குறிக்கிற பெயர் அய்யா.

அண்ணாவினுடைய முழுப்பெயருக்குப் பக்கத்தில் துரை வரும். அதையும் சேர்த்து அய்யாதுரை என்று தான் பெயர் வைக்க நினைத்தார்கள். ஆனால், நான் பிறந்த நேரத்தில் ரஷ்ய நாட்டினுடைய அதிபர் கம்யூனிச கொள்கைகளை வித்திட்ட ஒரு மாமனிதர், ஒரு போராளி, அவருடைய நினைவு நாள் கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கட்சித் தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்று இரங்கல் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இரங்கல் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்திலே, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ரஷ்ய நாட்டின் அதிபர் ஸ்டாலின் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் இடையில் ஒருவர் வந்து தலைவர் இடத்திலே ஒரு சீட்டை கொடுக்கிறார். அந்தச் சீட்டில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னால், உங்களுக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்று செய்தி,அதாவது நான் பிறந்த செய்தியை சொல்லி இருக்கிறார்கள். அந்தச் செய்தியை படித்த உடனே அந்தக் கூட்டத்திலேயே தலைவர் கலைஞர் சொல்லுகிறார். எனக்கு ஒரு மகன் பிறந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது, இப்பொழுது இந்த மேடையிலே நான் சொல்கிறேன். அவனுக்கு ரஷ்ய நாட்டினுடைய அதிபராக விளங்கிய ஸ்டாலினுடைய பெயர் சூட்டுகிறேன் என்று அந்தக் கூட்டத்திலே அறிவித்தார்கள்.

அதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், கம்யூனிச கொள்கையின் மீது தலைவர் கலைஞர் அவர்கள் வைத்திருந்த பற்று. அந்தக் கொள்கையின் மீது அவருக்கு உணர்வு உண்டு. எனவே, அந்த நினைவோடு தான் அந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் அந்தப் பெயரை வைத்துக் கொண்ட காரணத்தால் நான் பல சிக்கல்களை சந்தித்தது உண்டு. என்ன காரணம் என்று கேட்டால் இந்தப் பெயரை சில வெளிநாடுகளில் நான் சென்று சொல்லுகிறபோது கொஞ்சம் ஆச்சரியத்தோடு, அதிசயத்தோடு பார்ப்பார்கள். அதுமட்டுமல்ல இன்னொரு செய்தியையும் நான் உங்களுக்கு சொல்லியாக வேண்டும். நான் சிறுவனாக இருந்தபோது என்னை கான்வென்டில் சேர்க்க வேண்டும் என்று, மத்திய அமைச்சராக இருந்து மறைந்தாரே நம்முடைய முரசொலி மாறன் அவர்கள் அவர்தான் எங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் எல்லாம், அண்ணன்கள் எல்லாம், தங்கைகளை எல்லாம், படிக்க வைப்பதற்கு பள்ளிகளை, கல்லூரிகளை தேர்ந்தெடுத்து கொண்டுபோய் சேர்ப்பார்கள்.

எனவே, பள்ளியில் என்னையும் என்னுடைய தங்கை செல்வியையும் ஒன்றாக கொண்டுபோய் ஒரு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று சென்னையில் இருந்த பழைய முரசொலி அலுவலகம், அந்த அலுவலகத்திற்கு எதிரே இருந்த சென்னையிலே பிரபலமான ஒரு பள்ளிக்கூடம் எது என்று கேட்டால் இப்பொழுது அல்ல அப்பொழுது சர்ச் பார்க் கான்வென்ட் என்ற ஒரு மிகப்பெரிய பள்ளிக்கூடம். அந்த காண்வென்டில் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்று முடிவு செய்து நம்முடைய முரசொலி மாறன் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டார்கள். பள்ளியில் கொண்டு போய் சேர்க்கின்ற நேரத்தில் அந்தப் பள்ளியினுடைய தலைமையாசிரியர் இடத்திலே கொண்டு போய் அறிமுகப்படுத்தினார்கள்.

அப்படி அறிமுகப்படுத்துகிறபோது அந்தப் பள்ளியினுடைய நிர்வாகிகள் நம்முடைய முரசொலி மாறன் அவர்களிடத்திலே ஒரு கோரிக்கை வைத்தார்கள். என்ன கோரிக்கை என்று கேட்டால் உங்கள் குழந்தைகளை நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம். அதில் எந்த மாறுபாடும் கிடையாது. ஆனால் ஸ்டாலின் என்ற பெயர் ரஷ்ய நாட்டிலே ஒரு சிக்கலான பெயராக இருக்கிறது, அங்கே இருக்கக்கூடிய சிலைகள் எல்லாம் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலே நாங்கள் இந்தப் பள்ளியிலே இந்தப் பெயரை வைத்துக் கொள்ள வாய்ப்பு இல்லை, எங்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டுவிடும். ஆகவே, ஸ்டாலின் என்ற பெயரை மாற்றி வேறு பெயர் வைத்தால் நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம் என்று ஒரு கோரிக்கை வைத்தார்கள். உடனே நம்முடைய மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அவர்கள் தலைவர் இடத்திலே தொடர்பு கொண்டு கேட்டார்கள். பெயரை மாற்றினால் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்வதாக சொல்கிறார்கள் என்ன செய்யலாம் என்று கேட்டார்.

முரசொலி மாறன் அவர்களுக்கு உடன்பாடு உண்டு, ஏனென்றால் அப்பொழுது பள்ளியிலேயே இடம் கிடைப்பதே கஷ்டம். எனவே, பெயரை மாற்றிவிடலாம் என்று சிபாரிசு செய்துள்ளார். யாரிடத்திலே நம்முடைய தலைவர் இடத்திலே. நம்முடைய தலைவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், நான் பள்ளிக்கூடத்தை மாற்றினாலும் மாற்றுவேனே தவிர என் மகனுடைய பெயரை மாற்ற மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் அங்கு எனக்கு சீட்டே கிடைக்காமல் போய்விட்டது, எனக்கு மட்டுமல்ல என்னோடு சேர்ந்து சேர்க்க இருந்த என்னுடைய தங்கை செல்வியை கூட அந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்காமல் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். அந்தப் பள்ளிக்கூடத்தில் நான் சேராமல் இருந்ததற்காக பிறகு நான் சந்தோஷப்பட்டேன் ஏனென்றால் ஜெயலலிதாவும் அந்தப் பள்ளிக்கூடத்தில் தான் படித்து வந்ததாக செய்தி வந்தது. அதிலே எனக்கு ஒரு நிம்மதி எதற்காக நான் சொல்கிறேன் என்றால், பெயரை எந்த அடிப்படையில் வைத்திருக்கிறோம் என்று கேட்டீர்கள் என்றால் கலைஞரைப் பொருத்த வரைக்கும் தமிழ்ப் பெயர்களாக - காரணப் பெயர்களாக - நாட்டிற்காக உழைத்திருக்கக்கூடிய உத்தமர்களின் நினைவுகளை போற்றக்கூடிய வகையிலே அன்றைக்கு சூட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த அடிப்படையில்தான் என்னுடைய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தவிர வேறல்ல.

இன்றைக்கு ஸ்டாலின் குமார் அவர்களைப் பொறுத்தவரையில் இன்றைக்கு அவர் கரம்பிடித்து இருக்கக்கூடிய துணைவியாருடைய பெயர் சுபாஷினியாக இருக்கலாம், அதனால் உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு இதுபோல வடமொழிப் பெயர்களோ - சமஸ்கிருத பெயர்களோ - ஆங்கில பெயர்களோ - நீங்கள் எந்த காரணத்தைக் கொண்டும் வைக்கக்கூடாது, வைக்க மாட்டீர்கள். என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் ஏனென்றால் தமிழுக்குரிய அந்தப் பெருமையை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டிருந்தால் தான் தமிழினம் என்ற உணர்வோடு, தமிழகத்திலே தன்மானத்தோடு நாம் வாழ்ந்திட முடியும் என்று அந்த வேண்டுகோளை நான் இந்த நேரத்திலே எடுத்து வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஸ்டாலின் குமார் அவர்களைப் பற்றி நான் அதிகம் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர், ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்று சொன்னால் ஏதோ பதவிக்காக அல்ல மக்களால் வழங்கப்படக்கூடிய அந்தப் பொறுப்பை பதவியாக பயன்படுத்தாமல் ஒரு பொறுப்பாக இருந்து பயன்படுத்தி அதற்கேற்ற வகையில் பணியாற்றிட வேண்டும். இங்கே கழகத்தின் சார்பில் பல சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் வந்திருக்கிறார்கள். எனவே அவர்களையெல்லாம் வைத்துக் கொண்டு நான் சொல்லுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நம்முடைய ஸ்டாலின் குமாரும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை, மிகச் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். என்னிடத்திலே வருகிறபோது ஒரு குறிப்பை கொடுத்தார்கள். ஸ்டாலின் குமார் அவர்கள் இந்த துறையூர் தொகுதியிலே சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைக்கு ஆட்சியில் இல்லை என்று சொன்னாலும், அதிகாரம் இல்லை என்று சொன்னாலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பைப் பயன்படுத்தி அவர் இந்தத் தொகுதிக்கு இந்த பகுதிக்கு ஆற்றியிருக்கக்கூடிய பல பணிகளையெல்லாம் என்னிடத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல வந்தவுடனே அவரிடத்திலே நான் கேட்டேன். நீங்கள் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தத் தொகுதிக்கு என்னென்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது வரிசையாக என்னிடத்தில் எடுத்துச் சொன்னார். எனக்கே ஆச்சரியமும் – பொறாமையும் வரும் அளவிற்கு அவர் செய்திருக்கிறார். உதாரணமாக, சமூக சேவை மன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றுகிறார். சட்டமன்றத்தில் அவர் பேச வாய்ப்பு கிடைக்கிற பொழுது அது மானியக்கோரிக்கைகளாக இருந்தாலும், கேள்வி நேர பகுதியாக இருந்தாலும், கவன ஈர்ப்பு தீர்மானம் வரக்கூடிய எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், சட்டமன்றத்தில் எடுத்து வைக்கக்கூடிய அழுத்தமான அந்தக் கருத்துக்களை எல்லாம் நான் கேட்கின்ற நேரத்தில் உள்ளபடியே பெருமைப்பட்டதுண்டு. இப்படிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் நமக்கு கிடைத்திருக்கிறார்களே, அதனால் தான் இன்றைக்கும் இந்தக் கழகத்தை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத நிலையிலே இந்தக் கழகம் இன்றைக்கு கம்பீரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று நான் உணர்வது உண்டு.

அது மட்டுமல்ல, இதே துறையூர் ஒன்றியத்தில் கொல்லம்பட்டி ஊராட்சியிலே குடிநீர் பிரச்சனை என்று கேள்விப்பட்டவுடன் உடனே, ஆழ்துளைக் கிணறு அமைத்து அந்தப் பகுதியின் மக்களுடைய குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கக் கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினர் தான் இன்றைக்கு இங்கே மணமகனாக வீட்டிற்றிருக்கிறார்கள்.

துறையூர் டெப்போ முதல் முசிறி வரை பயணம் செய்ய முடியாத அளவுக்கு இருட்டாக இருந்த பகுதி அந்த இடத்திலே மின்விளக்கு அமைத்து ஒரு மிகப்பெரிய சாதனையை நம்முடைய ஸ்டாலின் குமார் அவர்கள் செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல கிராமப்புற மாணவர்களுக்காக அவர்களுடைய கல்வியினுடைய மேம்பாட்டிற்காக ‘ஸ்மார்ட் கிளாஸ்’அதையும் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார் என்பதை கேள்விப்படுகிற பொழுது நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல் இளைஞர்களை ஊக்கப்படுத்த, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தக் கூடிய வகையிலே காதுகேளாதோர் விளையாட்டு போட்டிக்கு சென்று பரிசு வாங்கி வந்த இந்தப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை வீடு தேடி சென்று அவரைப் பாராட்டி அவருக்கு பரிசு தந்து விட்டு வந்திருக்கிறார் என்பதை நினைக்கிறபோது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் புயல் காற்று வீசிய நேரத்தில் ஒரு பெரிய மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இவரே அரசினுடைய தயவில்லாமல், தனிப்பட்ட முறையில் அப்புறப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அந்தப் பணியையும் செய்து முடித்திருக்கிறார் என்பதை நினைக்கிற போது நான் உள்ளபடியே அவரை நான் பாராட்டுகிறேன்.

அப்படிப்பட்ட சிறந்த செயல்வீரராக சட்டமன்ற உறுப்பினராக அவர் விளங்குவது உள்ளபடியே இந்த தொகுதிக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமையாகக்கூட நான் கருதவில்லை, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடைத்திருக்கக் கூடிய ஒரு பெருமையாக நான் கருதிக் கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும் நேற்றைய தினம் 500 ரூபாய் மற்றும்1000 ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் செல்லாது என்ற ஒரு திடீர் அறிவிப்பை மோடி அவர்கள் அறிவித்து இரண்டு வருடங்கள் முடிந்திருக்கிறது. அதனுடைய கண்டன கூட்டமாக நேற்றைய தினம் பெரம்பலூரில் நடைபெற்றக் கூட்டத்திலே பங்கேற்று நான் பேசுகிற பொழுது மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒரு அடிமை ஆட்சி, ஒரு அடிமை ஆட்சி மட்டுமல்ல ஊழல் நிறைந்திருக்கக் கூடிய ஆட்சி கமிஷன் - கரப்ஷன் - கலெக்ஷன் - என்று அதே கொள்கையாக வைத்துக்கொண்டிருக்க கூடிய ஆட்சி. அண்ணா நமக்கு கற்றுத் தந்தது கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு. ஆனால், இப்பொழுது அ.தி.மு.க ஆட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி இப்பொழுது உருவாக்கியிருப்பது கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு அல்ல கமிஷன் - கரப்ஷன் - கலெக்ஷன். அதுதான் இன்றைக்கு அவர்கள் உருவாக்கித் தந்து இருக்கிறார்கள்.

அந்த நிலையில் இருக்கக்கூடிய இந்த இரண்டு ஆட்சிகளை மத்தியில் இருக்கக்கூடிய மோடி ஆட்சியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று சொன்னால் விரைவிலே நாடாளுமன்றத்தினுடைய தேர்தல் வரவிருக்கிறது,நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரவேண்டும் என்று நாமெல்லாம் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அதுவும் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் வரக்கூடிய அந்தத் தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரக்கூடிய ஒரு சூழ்நிலையை நீங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து ஏற்படுத்தித் தரவேண்டும் என்று உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொண்டு, பொன்முடி அவர்கள் பேசுகிற போது எடுத்துச் சொன்னார்கள். இன்று மாலையில் ஆந்திர மாநிலத்தினுடைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் என்னை சந்திக்க வருகிறார்கள் என்று. என்ன காரணம் என்பது உங்களுக்குத் தெரியும். நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்திற்கு சென்று முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்களை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் குமாரசாமி அவர்களை எல்லாம் சந்தித்திருக்கிறார். இன்று என்னை சந்திக்க வருகிறார்.

மேலும், இரண்டு நாட்களுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய சீதாராம் எச்சூரி அவர்கள் சந்திக்க வருகிறார்கள் இப்படி ஒவ்வொரு தலைவர்களாக தமிழகத்திற்கு வந்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கட்சியோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும், கூட்டணி அமைத்துக் கொள்ள வேண்டுமென்று கலந்து ஆலோசனை செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கெல்லாம் காரணம் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கி தந்திருக்கக்கூடிய லட்சியத்தை தொடர்ந்து நாம் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு அடையாளம்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆகவே, மத்தியில் இருக்கக்கூடிய மதவெறி பிடித்து இருக்கக்கூடிய அந்த ஆட்சியை அப்புறப்படுத்த,அதேபோல் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய அநியாய அக்கிரம ஊழல் நிறைந்திருக்கக் கூடிய இந்த ஆட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதற்கு உறுதி எடுக்கக்கூடிய நாளாக இந்த திருமண நாளை நம்முடைய ஸ்டாலின் குமார் மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய இந்த நல்ல நாளில் உறுதி எடுப்போம் - சபதம் ஏற்போம் - அதற்கேற்ற வகையில் நம்முடைய கடமை ஆற்றுவோம் என்று சொல்லி மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்குத் தொண்டர்களாய் நீங்கள் வாழுங்கள் - வாழுங்கள் - வாழுங்கள் என்று மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.