Announcement - DetailPage - DMK
header_right
ஹெலிகாப்டரில் ஆய்வு நாடகத்தை நடத்தி வந்திருக்கும் முதலமைச்சர்...

பதிவு: 21 Nov 2018, 00:20:10 மணி

“ஹெலிகாப்டரில் ஆய்வு நாடகத்தை நடத்தி வந்திருக்கும் முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காதது ஏன்? மக்களை சந்திக்காமல், பாதிப்புகளை ஆராயாமல் நிவாரணம் அளிப்பது நியாயமா?!” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி

இன்று (20-11-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு:

செய்தியாளர்: எதிர்க்கட்சிகள் குறைகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டுகிறார். அது பற்றிய உங்கள் கருத்து?

கழகத் தலைவர்: எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருக்கக்கூடிய முதலமைச்சருக்கு எந்த விளக்கமும் நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. முதலில் மக்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டிற்கு மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதில் சொல்லட்டும். அதற்குப் பிறகு எதிர்க்கட்சி மீது குற்றம் சொல்லக்கூடிய முதலமைச்சருக்கு நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.

டெல்டா மாவட்டப் பகுதிகளில் கஜா புயலால் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு பல உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான வீடுகள் இடிந்து நொறுங்கி இருக்கிறது. தென்னை மரங்கள், வாழை மரங்கள், பயிர்கள், முழுமையாக நாசமாக்கப்பட்டு இருக்கிறது. அழிந்து போய் இருக்கும் அந்த 8 மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்கள் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி, குடிக்க தண்ணீர் இன்றி மிகுந்த கொடுமைகளுக்கு ஆளாகி நடுத்தெருவிலே நின்று கொண்டிருக்கக்கூடிய ஓரு அக்கிரமம், ஒரு கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் உடனடியாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளை பார்வையிட சென்றிருக்க வேண்டும். ஆனால் அதை தவிர்த்துவிட்டு சேலத்திலே ஆடம்பரமாக மிகப்பெரிய கொண்டாட்டமாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு செல்லாமல் அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செய்து விட்டார். கடந்த2 நாட்களாக முதலமைச்சர் ஏன் செல்லவில்லை, ஏன் செல்லவில்லை என்று உங்களைப் போன்ற ஊடகங்கள், எங்களைப் போன்ற பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள், அதையும் தாண்டி அந்த 8 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்கள் எழுப்பிய அந்தக் கேள்விக்கு பயந்து 5வது நாளான இன்று எடப்பாடி பழனிசாமி அவர்கள் புறப்பட்டார்.

சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சியில் இறங்கி அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏறி குறிப்பிட்ட இரண்டு - மூன்று இடங்களுக்கு மாத்திரம் சென்று அதுவும் ஆளும் கட்சிக்காரர்கள், அமைச்சர்கள் புடைசூழ, காவல்துறை காவலர்கள் புடைசூழ எங்கு முதலமைச்சர், எங்கு முதலமைச்சர் என்று மக்கள் கேட்கின்ற நேரத்தில் இங்குதான் இருக்கிறார், இங்குதான் இருக்கிறார் என்று அங்கிருக்கக்கூடிய போலீஸ்காரர்களும், அதிகாரிகளும் சொல்லக்கூடிய நிலையிலே எங்கே அவர் இருக்கிறார் என்று பார்க்கமுடியாத நிலையிலே ஆளும் கட்சிக்காரர்களே சூழ்ந்துகொண்டு ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார். அதேபோல், ஏற்கனவே செட்டப் செய்து வைத்திருந்த ஆளும் கட்சிகாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாத்திரம் மீடியாக்களுக்காக விளம்பரத்திற்காக அதை கொடுத்துவிட்டு மீண்டும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஏறி திருச்சிக்கு புறப்பட்டு வந்து சேர்ந்திருக்கிறார். திருச்சியில் இருந்து இன்று சென்னை வர இருக்கிறார். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. எனவே எதிர்க்கட்சிகாரர்களை பார்த்து கேள்வி கேட்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து நான் கேட்கின்ற கேள்வி? முதலமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களை போய் சந்திக்காமல் இதுவரை இருப்பதற்கு என்ன காரணம்? அதற்கு அவர் முதலில் பதில் சொல்லட்டும்.

செய்தியாளர்: அரசு அதிகாரிகள் வரவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்ற நிலையில் சேதங்களின் உடைய புள்ளி விவரங்களை அரசு வெளியிட்டு அதற்கான நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார்களே?

கழகத் தலைவர்: அரசு அதிகாரிகள் மட்டுமல்ல அமைச்சர்களும் அங்கு செல்ல முடியவில்லை, முதலமைச்சரும் போகவில்லை நிர்வாகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. எந்த முயற்சிகளிலும் இந்த அரசாங்கம் ஈடுபடவில்லை என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு.

செய்தியாளர்: பிரதமர் இதுவரைக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை வந்து பார்க்கவில்லை. உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துவார்களா?

கழகத் தலைவர்: நிச்சயமாக வலியுறுத்துவோம். ஏற்கனவே எங்களுடைய அந்த பகுதியில் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லா பகுதிகளுக்கும் சென்று முடிந்தவரை என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்கிறது. என்னென்ன சேதாரங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று கணக்கெடுத்து கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க பொருட்களையெல்லாம் நாங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் அதை நாங்கள் வழங்க இருக்கிறோம். ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க அறிவிப்பு செய்திருக்கிறோம். அதுமட்டுமல்ல எங்களுடைய தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அத்துனை பேருடைய ஒரு மாத ஊதியத்தையும் அந்த நிவாரண நிதிக்கு வழங்குவதாக முடிவு செய்து அதுவும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

செய்தியாளர்: முதலமைச்சர் 4 இடங்களை பார்வையிடாமல், மழையை காரணமாகச் சொல்லி 2 இடங்களை மட்டும் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். உங்கள் கருத்து?

கழகத் தலைவர்: மழையைக் காரணம் காட்டியதை வாதத்திற்காக நான் ஏற்றுக் கொள்கிறேன். இன்று தங்கி மழை விட்டதற்கு பிறகாவது அவர் பார்த்துவிட்டு வந்திருக்க வேண்டும் இது என்னுடைய வாதம்.

இவ்வாறு அவர் கூறினார்.