Announcement - DetailPage - DMK
header_right
கீழடி கண்டேன், கிளர்ச்சி மிகக் கொண்டேன்! - கழகத் தலைவர் மடல்

பதிவு: 30 Sep 2019, 13:43:59 மணி

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். கீழடியில்தான் நின்றிருந்தேன். மனதோ வியப்பிலும் பெருமிதத்திலும் புவியீர்ப்பு விசை கடந்த சந்திரயான் விண்கலம் போலே வான் வரை பறந்து உயர்ந்து சென்றது. உங்களில் ஒருவனான எனக்கு மட்டும் கிடைத்திருக்கும் பெருமை அல்ல இது. உங்கள் ஒவ்வொருவருக்குமான பெருமை. தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் தரணி போற்றும் பெருமை. அகமென்றும் புறமென்றும் வாழ்க்கையினை அழகாக வகுத்துக்கொண்டு அன்றுதொட்டு அந்த இலக்கணம் மாறாமல் வாழ்ந்து வருகின்ற இனம்- வளமார் நம் திராவிட இனம்-தமிழ் இனம்தான் என்று ஆயிரங்காலத்துப் பயிராக நமக்கு வாய்த்த ஆன்றோர் செய் இலக்கியங்கள் சான்று கூறும்! என ‘சங்கத் தமிழ்’ காவியம் படைத்த நம் ஆருயிர்த் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் எடுத்துக் காட்டியதுபோல, இலக்கியங்கள் காட்டிய தொல்தமிழர் பெருமை பற்றிய சான்றுகள் அகிலத்தார்க்கு மெய்ப்பித்திருக்கின்றன கீழடி அகழ்வாய்வுகள். ஆண்டுகளாலும் ஆழ்ந்த அறிவாலும் உலகின் மூத்த இனம் நம் இனம் என்பதற்கான அரிய சான்றுகள் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. கீழடியில் நான்காம் கட்ட ஆய்வினை மேற்கொண்ட தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை வெளியிட்ட அறிக்கையினை உடனடியாகப் பாராட்டியதுடன், தொல்தமிழர் பெருமையைப் பறைசாற்றும் அகழ்வாய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன். இது நம் மொழி-இன-பண்பாட்டு- நாகரிகப் பெருமை என்பதுடன், தமிழர்தம் பொருள் பொதிந்த வாழ்வியல் குறித்த வரலாற்று உண்மைகள் மண்மூடி மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே முதன்மையானதாகும். அதனால்தான் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கண்டறிந்து மகிழும் ஆவல் முகிழ்த்தது. நேற்று, (27-9-2019) அன்று மதுரை செல்வதற்கு ஆயத்தமானபோதே, அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,கீழடி ஆய்வுகளை வெளிக்கொண்டு வந்து வெளிச்சம் பாய்ச்சிட வெகுவாகப் பாடுபட்டு வருபவருமான, சாகித்ய அகாடமி விருது பெற்ற சான்றாண்மை மிக்க எழுத்தாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருமைச் சகோதரர் சு.வெங்கடேசன் அவர்களிடம் விவரம் தெரிவித்தேன். அது கேட்ட அவரும் கீழடிப் பயணத்தில் எனக்குத் துணையாக உடன் வந்தார். கீழடியில் காலடி வைத்தபோது கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமாகத் திரண்டிருந்தனர். தமிழ்நாடு தொல்லியல்துறையின் துணை இயக்குநர் டாக்டர் ஆர்.சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர் பி.ஆசைத்தம்பி ஆகியோரின் உதவியுடன், கீழடி ஆய்வுகளின் சிறப்புகளை அறியும் சீரிய வாய்ப்பு அமைந்தது. வெட்ட வெளியில் தோண்டப்பட்டிருந்த குழிகள், தென்னஞ்சோலையில் மேற்கொள்ளப்பட்டிருந்த அகழ்வாய்வுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாக விளக்கி, அங்கு கிடைத்திருந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த முகாமுக்கும் அழைத்துச் சென்று அவற்றின் நேர்த்தி பற்றித் தெளிவாக விளக்கினர். கி.மு.6ஆம் நூற்றாண்டில் அதாவது, 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிறப்பான நகர நாகரிகத்தைக் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ்ந்ததைக் காண முடிந்தது. சுட்ட செங்கற்களால் ஆன வீடுகள், சுவர் அமைப்பதற்கு சுண்ணாம்புப் பூச்சு, உறுதியான மேற்கூரை, தண்ணீர் வருவதற்கும் வெளியேறுவதற்குமான வசதிகளுடன் கூடிய உயரிய நீர் மேலாண்மை என வியக்கவும் வியந்து போற்றவும் வைக்கும் வகையில் தமிழர்கள் வாழ்ந்திருப்பதை கீழடியில் காண முடிந்தது. வைகை ஆற்று வாடாத நாகரிகத்தில் கிடைத்த பானை ஓடுகளில் கறுப்பு-சிவப்பு வண்ணமும் அதில் கீறல் எழுத்துகளும் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டி, தமிழர்கள் அந்தக் காலத்திலேயே எழுத்தறிவு பெற்றிருந்ததை அதிகாரிகள் விளக்கினர். பானையில் வைக்கப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக வடிகட்டும் துளைகளுடன் கூடிய பானைகளைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இயந்திரங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் இவை எளிதாக சாத்தியமாகும். ஆனால், தமிழர்கள் தங்கள் கை வண்ணத்தாலேயே புதிய தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிந்தது. வேளாண்மை போற்றிய சங்கத் தமிழர்கள் பசு, எருமை, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்திருப்பதையும், உணவுக்காக விலங்குகளைப் பயன்படுத்தியிருப்பதையும் ஆய்வுகளில் அறிய முடிந்திருக்கிறது. இரும்பினால் ஆன பொருட்கள், தங்கத்தால் ஆன அணிகலன்கள் அனைத்திலுமே கலை மிளிரும் வேலைப்பாடுகள் மிகுந்திருந்தன. இன்றைக்கு chess எனச் சொல்லப்படும் சிந்தனைக்கு வேலை தரும் சதுரங்க விளையாட்டை அன்றைய காலகட்டத்திற்கேற்ப தமிழர்கள் விளையாடியிருக்கிறார்கள் அந்த விளையாட்டுக்கான காய்களை அவர்களே செய்திருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது. ஒவ்வொன்றையும் காணும்போதும் மகிழ்ச்சி, பெருமிதம் உயர்ந்து கூடிக்கொண்டே இருந்தது. அந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அப்படியே தமிழர்கள் அனைவருக்கும் உரியது. அதனால்தான் பொதுமக்கள் அதிக அளவில் கீழடிக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். அதுபோலவே, கல்லூரி மாணவர்கள் திரண்டு வருகிறார்கள். அவர்களில் பலர் என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டியதுடன், கீழடி ஆய்வுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தினர். பொதுமக்களில் சிலர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் இல்லாத நிலைமை, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத சூழல் ஆகியவை குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் அளித்தனர். நாம் எதிர்க்கட்சிதான். ஆனாலும் மக்கள் நம்மீது மாறாத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்றும் அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக நமது கடமையைத் தொடர்ந்து செம்மையாக நிறைவேற்றி வருகிறோம். கீழடியிலும் நமக்கான கடமைகள் நிறைய இருக்கின்றன. சிந்துசமவெளி நாகரிகம் பற்றி ஹரப்பா-மொகஞ்சாதாரோ அகழ்வாய்வுகள் வாயிலாக, இந்தியா முழுவதும் தொன்மையான திராவிட நாகரிகம் மூவாயிரம் ஆண்டுகள் முன்பே பரவியிருந்ததை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். அதன் தொடர்ச்சியாக தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் குறித்த ஆதிச்சநல்லூர் ஆய்வுகளும் வெளிப்பட்டன. எனினும், தமிழரின் பெருமைகளை வெளிப்படையாகக் கூறுவதற்கு தொல்பொருள் அகழ்வாய்வுத்துறை தயக்கம் காட்டி வருவதும் போராடிப் போராடி அதனை வெளிக்கொண்டு வருவதும் தொடர்ந்து நமது கடமையாக அமைந்துள்ளது. தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தருவதற்கு பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்கள் 100 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளையும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களால்தான் நிறைவேற்ற முடிந்தது. இடையில் எத்தனையோ தமிழச்சான்றோர்களின் போராட்டம்! அத்தனையையும் மனதில்கொண்டு, தனது உறுதியால்-செல்வாக்கால்-எல்லாவற்றும் மேலாக தமிழ் மீது கொண்ட பாசத்தால்,பற்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைத்திடச் செய்தார் தலைவர் கலைஞர். இதோ இந்தக் கீழடி ஆய்வுகளும் அத்தனை எளிதாக வந்துவிட்டனவா? முழுமையாக வந்துவிட்டனவா? இது குறித்து எத்தனை முறை வலியுறுத்தவும், நினைவூட்டவும் வேண்டியிருந்தது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலையொட்டி தி.மு.கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் “கீழடியில் தொல்லியில் ஆய்வுகள் தொடரப்படும்.அங்கு கிடைத்துள்ள பல்வேறு அருங்கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட அங்கே அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும்” என உறுதி அளிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், 6-1-2016 அன்று, கீழடி அகழ்வாய்வைத் தொடரவும் நிதி ஒதுக்கீடு செய்திடவும் வலியுறுத்தி மாண்புமிகு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் மகேஷ் சர்மா அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். அதில் கீழடியில் ஆய்வுப் பணிகளை நிறுத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை முடிவு செய்திருப்பதையும், அந்த முடிவை மாற்றி, ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் தம் நாகரிகம் உலகறியச் செய்யத் தேவையான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். இக்கடிதத்தைத் தொடர்ந்து, கீழடி ஆய்வுப் பணிகள் தொடரும் என மத்திய கலாச்சாரத்துறை உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்ததுடன், 20-2-2017 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் இது பற்றிக் குறிப்பிட்டேன். அதுபோலவே, 22-06-2017 அன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஆற்றிய உரையில், “தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ள கீழடி அகழ்வாய்வுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த அகழ்வாய்வில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வந்த ஆய்வாளர்கள் திடீரென மாற்றப்படும் நிலையும் தொடர்கிறது. கீழடியில் கிடைத்த பழஙகால பொருட்களை அண்டை மாநிலத்தில் உள்ள மைசூருக்கு மாற்றும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை அந்தக் கல்வெட்டுகள் செப்பேடுகள் உலகத்துக்கு எடுத்துக்காட்டக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன. எனவே மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து அவற்றை எல்லாம் தமிழகத்திலேயே பேணிப் பாதுகாக்கின்ற வகையிலான எல்லாவித முயற்சிகளையும் இந்த அரசு எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளேன். கீழடி அகழ்வாய்வில் முக்கியப் பங்காற்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் திடீரென மாற்றப்பட்டு, அகழ்வாய்வுப் பணிகள் முடக்கப்பட்ட சூழல் உருவானபோது, அது குறித்து 25-09-2017 அன்று கண்டன அறிக்கை வெளியிட்டேன். அதேபோல், 5-2-2019 அன்று ஊராட்சி சபைக் கூட்டம் கீழடி கிராமத்தில் நடைபெற்றது. அதுபோது, நான் அகழ்வாழ்ய்வு நடைபெற்ற இடத்தை பார்வையிட்டேன். அப்போது அங்கிருந்த மக்கள், அகழ்வாய்வு பணிகள் நிறுத்தப்பட்டதற்கு வேதனை தெரிவித்தும், தொடர்ந்து விரிவான ஆய்வு நடத்திட வலியுறுத்தியும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். நானும், அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், கழகத்தின் 2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், “கீழடியில் அகழ்வாய்வு தொடரவும், அருங்காட்சியகம் அமைக்கவும் தேவையான நிதியுதவிகள் மத்திய அரசு தந்திட தி.மு.கழகம் பாடுபடும்” என தெரிவித்திருந்தோம். ஒவ்வொரு கட்டத்திலும் கீழடிக்காக தி.மு.கழகம் தொடர்ந்து உரிமைக் குரல் எழுப்பி வந்துள்ளது. திராவிட நாகரிகத்தின் தொட்டிலாக சங்கத் தமிழர்களின் புகழ் கூறும் வைகை ஆற்றங்கரையில் வளர்ந்த கீழடி நாகரிகத்தையும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்திட வேண்டும். அதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு மிக முக்கியம். அதனால்தான், கீழடிக்குப் பிறகு ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உத்தரபிரதேசம் மாநிலம் “சனோவ்லி “ என்ற இடம் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதுபோல கீழடியும் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம். கீழடியுடன் ஆய்வு தொடங்கப்பட்ட குஜராத் மாநிலம் “வாட் “ என்ற இடத்தில் சர்வதேசத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கீழடியிலும் அதே போன்ற உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதுடன், இந்த வைகை ஆற்று நாகரிகத்தின் தொடர்ச்சியான ஆய்வுகளுக்காக மதுரையில் ஓர் அலுவலகமும் அமைக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தங்கை கனிமொழி அவர்கள் இது குறித்து, பல முறை பேசியதுடன், தற்போது மக்களவை உறுப்பினராகவும் வலியுறுத்தி வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் அனுப்பிய கோரிக்கை மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களும்,அவருடன் இந்திய தேசிய காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோரும் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு தனிப் பொறுப்பு வகிக்கும் இணையமைச்சர் திரு.பிரகலாத் சிங் பாட்டீல் அவர்களைச் சந்தித்து அளித்திருக்கிறார்கள். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மாநில அரசிடம் இடம் ஒதுக்கித் தருமாறு மத்திய அரசு கேட்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கான இடவசதியை மாநில அரசு விரைந்து உருவாக்கித் தரவேண்டும். அதே நேரத்தில், கீழடியில் இதற்கு முன்பாக மத்திய தொல்லியல் துறை நடத்தியுள்ள 3 கட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட வேண்டும். தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்திட வேண்டும். மாநில அரசின் தொல்லியல்துறை மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு போதிய நிதியுதவி இல்லாத நிலையில், மத்திய தொல்லியல் துறை இதில் அலட்சியம் காட்டுவது தமிழர்களை வஞ்சிக்கும் செயல் மட்டுமல்ல, பண்டைச் சரித்திரத்தைப் பாழ்படுத்தும் செயலாகிவிடும்.. கீழடி மட்டுமின்றி, ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆதிச்சநல்லூர் குறித்த முடிவுகளையும் தொல்லியல் துறை வெளியிடவேண்டியயது கட்டாயமாகிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் முனைப்பினால், கங்கைகொண்ட சோழபுரம், பரிகுளம், மாங்குளம், செம்பியன்கண்டியூர், பூம்புகார், அழகன்குளம், ராஜக்கமங்கலம், தேரிருவேலி, தலைச்சங்காடு, நெடுங்கூர் உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2010ல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, சோழமன்னன் இராசாதிராசன் ஆட்சிக்கால செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டு, மாநாட்டுக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டன. தொல்தமிழர் பண்பாடு உலகின் மூத்த பண்பாடு, மனித இனத்தின் முழுமுதல் பண்பாடு ஆகும். அதனை திராவிடப் பண்பாடு என வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுவதைக் கேட்கும் போது, செவிகளில் இன்பத் தேன் பாய்கின்றது. தமிழ் என்ற சொல் “த்ரமிட” என்றாகி, “த்ராவிட” என்றும் திராவிட என்றும் மருவியுள்ளது என மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தொடங்கி இக்காலக் கவிஞர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் வரை சுட்டிக்காட்டுகின்றனர். அதுபோலவே மொகஞ்சாதாரோ-ஹரப்பா அகழ்வாய்வுகள் நடத்தப்பட்ட பகுதிகளில் தொல்தமிழரின் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் பேசப்பட்டதையும் ஆவணப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கீழடியாக இருந்தாலும் சிந்துசமவெளி நாகரிகமாக இருந்தாலும் அது தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சி-நீட்சி என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த ஆய்வுகள் ஒரு பேருண்மையை உணர்த்துகின்றன. அதாவது, இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனைத் தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. கீழடியில் மட்டுமல்ல, நம்முடைய தமிழர்கள் பல பகுதிகளிலும் சிறப்பான நாகரிகத்தையும் செவ்விய பண்பாட்டையும் கடைப்பிடித்து, உலகத்திற்கே முன்னோடியாக விளங்கியவர்கள். அந்தப் பண்பாட்டுப் பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, அதனைப் பாதுகாப்பதும் கடமையாகும். பாதுகாக்க வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அதை வலியுறுத்துவோம்! பாதுகாக்கின்ற பொறுப்பை மேற்கொள்ளும் காலமும் கனிந்து வரும்; அப்போது அகிலம் அகம் மிக மகிழ்ந்திடும் வண்ணம் அந்தப் பொறுப்பை ஆற்றலுடன் நிறைவேற்றுவோம்! என்று அவர்களது மடலில் குறிப்பிட்டுள்ளார்.