Announcement - DetailPage - DMK
header_right
newimg
கற்றுயர நம் அண்ணா, கனிவுடன் அழைக்கின்றார்! - கழகத் தலைவர் அவர்களின் மடல்

பதிவு: 30 Oct 2019, 12:15:30 மணி

‘கற்றுயர நம் அண்ணா, கனிவுடன் அழைக்கின்றார்!’

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

நேற்று (அக்டோபர் 22) காலையில், கழகத்தின் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு.வில்சன் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். இனிய செய்தியைப் பகர்ந்தார்.

ஆம்; தலைவர் கலைஞர் அவர்களால், அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பெற்ற, ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமை கொண்ட , அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கான மிகப் பெரும் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவினையடுத்து, உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்படுவதற்கான அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்ற செய்தியைத்தான் வில்சன் அவர்கள் என்னிடம் பகிர்ந்தார்.

"இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே" என்பது போன்ற உணர்வினை அந்தச் செய்தி எனக்கு ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், இந்த நற்செய்தியைக் கேட்பதற்கு, தலைவர் கலைஞர் அவர்கள் நம்மிடம் இல்லையே! என்ற ஏக்கமும் ஏற்பட்டது.

எங்கே போய்விட்டார் நம் தலைவர்? அண்ணாவுக்குப் பக்கத்திலேதானே இப்போதும் இருக்கிறார்!

அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று சொன்னால், அந்த அழகான கட்டடத்தினூடேயும், அங்கிருக்கும் நூல்களினூடேயும் தலைவர் கலைஞர் அவர்களும் இருக்கிறார் என்ற உணர்வுடன், சென்னை - கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு உடனடியாகப் புறப்பட்டேன். என்னுடன் கழக நிர்வாகிகள் ஆ.ராசா, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் வந்தனர்.

அடடா, எத்தனை பிரம்மாண்டமான அறிவுத் திருக்கோவில் அது!

3 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடியில் 8 அடுக்குகளுடன் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்த தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களால் 15-9-2010ஆம் நாள் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நூற்றாண்டையொட்டி, அதன் நினைவாகத் திறக்கப்பட்டது.

நூலகத்தின் வாசலில் ‘அண்ணா’ படித்துக் கொண்டிருந்தார். “நீயும் படிக்க வா தம்பீ!” என்று அவருக்கே உரிய காந்தக் குரலில் அழைப்பது போல, அது இருந்தது.

நூலகத்தின் வாயிலில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். உள்ளம் நெகிழ்ந்தது; மெய் சிலிர்த்தது.

தலைவர் கலைஞர் அவர்களின் சிந்தனையில் உதயமான அந்த அறிவுத் திருக்கோவிலுக்குள் நுழைகிறோம் என்கிற பெருமிதம் ஒருபுறம் ; தமிழ்நாட்டுக்கே உலகளாவிய பெருமை சேர்க்கின்ற மாபெரும் நூலகத்தை, கழக ஆட்சிக்குப் பிறகு வந்த ஆட்சியாளர்கள் தங்களின் காழ்ப்புணர்வால் சிதைத்தார்களே, அதுவும் அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் கொடியிலும் வைத்துக்கொண்டே , நடமாடும் நூலகமாக விளங்கிய அண்ணாவின் பெயரிலான நூற்றாண்டு நூலகத்தை குப்பைத் தொட்டி போல ஆக்கிவிட்டார்களே என்ற வேதனையும் கோபமும் மறுபுறம்!

2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற அம்மையார் ஜெயலலிதா, அந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்தார்.

குழந்தைகள்கூட புத்தகங்களை சட்டெனக் கிழிப்பதில்லை. அதில் உள்ள வண்ணப்படங்களை ரசிக்கும். புரட்டிப் புரட்டி சிரிக்கும். ஆனால், குழந்தைகளின் பெயரால் அம்மையார் ஜெயலலிதாவோ, புத்தகங்கள் நிரம்பிய மாபெரும் நூலகத்தையே கிழித்தெறியத் துணிந்தார். அவரது செய்கைக்கு மாநிலம் முழுவதுமிருந்தும் கண்டனங்கள் !

அரசியல் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு அறிஞர்கள்- எழுத்தாளர்கள்-கவிஞர்கள்-புத்தக ஆர்வலர்கள்-மாணவர்கள் எனப் பல தரப்பினரும் ஜெயலலிதா அரசின் நடவடிக்கையை எதிர்த்தனர். அவரோ, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதுபோல இறுமாப்புடன் இருந்தார்.

அவரது ஆட்சிக்காலத்தில் தமிழகம் வந்த அமெரிக்க நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அவர்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பங்கேற்றபோது, நூலகத்தின் அமைப்பையும், அவர் பங்கேற்ற அரங்கத்தின் சர்வதேசத் தரத்தையும் மெச்சிப் பாராட்டினார். இதனைத் தமிழகத்திற்கான பெருமையாகப் பார்க்க அம்மையார் ஜெயலலிதாவுக்கு மனது வரவில்லை. தலைவர் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட நூலகத்தை அமெரிக்க அமைச்சர் பாராட்டுவதா என்ற எரிச்சலும் சேர்ந்துகொள்ள, அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்திட நினைத்தார். அதனைத் தடுத்திட முனைந்தார் தலைவர் கலைஞர்.

மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்களிடம், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க தலைவர் கலைஞர் அவர்கள் உத்தரவிட்ட நிலையில், ஆசிரியை மனோன்மணி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதன் காரணமாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்க நினைத்த ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத எண்ணத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், ஆட்சியாளர்களின் காழ்ப்புணர்ச்சி மாறிடவில்லை.

"நூலகத்தில் உள்ள அரங்கத்தினை அறிவு சார்ந்த நிகழ்வுகளுக்கே ஒதுக்கிட வேண்டும்" என்ற விதியினை மீறி, வடமாநிலத்தைச் சேர்ந்த பெரும்பணக்காரர் ஒருவரின் திருமண வரவேற்பு விழாவுக்கு வாடகைக்கு விட்டு, எச்சில் இலைகளை வீசும் குப்பைத் தொட்டியாகவும், வெற்றிலை - பீடா எச்சிலைத் துப்பும் இடமாகவும் மாற்றினர். இந்தக் காட்சியை ஊடகங்கள் வாயிலாக அறிந்து பதறிய தலைவர் கலைஞர் அவர்கள், மீண்டும் மூத்த வழக்கறிஞர் வில்சன் வாயிலாக உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு அதனைக் கொண்டு சென்றார்.

வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், இது தொடர்பான விரிவான ஆய்வுக்காக வழக்கறிஞர்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்தனர். அவர்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முழுமையாகப் பார்வையிட்டு ஆய்வு செய்து 2015-ல் அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

அதில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் போதுமான அளவில் புத்தகங்கள் வாங்கப்படவில்லை; தேவையான அளவில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை; கழிவறைகளைக்கூட தூய்மையாக வைத்திருக்கவில்லை; கணினி உள்ளிட்ட சாதனங்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை; அரங்குகள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை; குளிர்சாதன வசதி முறையான பராமரிப்பில் இல்லை என்பது உள்ளிட்ட அனைத்துச் சீர்கேடுகளையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியதையடுத்து, 24-8-2015 அன்று உயர்நீதிமன்ற நீதியரசர்கள், "அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும்!" என உத்தரவிட்டு, அதனைக் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற முயற்சித்த ஜெயலலிதா அரசின் உத்தரவை ரத்து செய்தனர். தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளச் செய்தனர்.

நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், ஆட்சியாளர்களின் அலட்சியம் தொடர்ந்த நிலையில், ஆசிரியை மனோன்மணி அவர்கள் மீண்டும் மீண்டும் மனுச் செய்ததன் விளைவாகவும், அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நிரந்தர நூலகர் உள்பட எந்த நியமனமோ, பராமரிப்புப் பணிகளோ, புத்தகக் கொள்முதலோ நடைபெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதாலும், அது தொடர்பான வாதங்களை கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எடுத்து வைத்ததன் காரணமாகவும், "நூலகத்தைப் பராமரிக்க வேண்டும் எனவும்", "உறுப்பினர் சேர்க்கை நடைபெறவேண்டும்" எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து, உறுப்பினர் சேர்க்கைக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

நீண்ட நெடிய இந்தச் சட்டப்போராட்டத்தில் கிடைத்த வெற்றியின் மகிழ்வுடன், புகழ்மிக்க அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் என்னை உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

நூலகத்தின் முதல் உறுப்பினர், தலைவர் கலைஞர் அவர்கள். அவர் பதிவு செய்து கொண்ட பிறகு, பணிகள் முழுமையுற்ற நிலையில், ஆட்சி மாறிய காரணத்தால், வேறு எவரையும் உறுப்பினராகச் சேர்க்க அம்மையார் ஜெயலலிதா அரசு அனுமதிக்கவில்லை.

தற்போது நீதி கிடைத்த நிலையில், தலைவர் கலைஞர் அவர்களைத் தொடர்ந்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் இரண்டாவது உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளும் பெருமைமிகு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. என்னுடன் வந்த மூவரும் தங்களையும் நூலக உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொண்டனர்.

நூலகத்தின் உறுப்பினர் என்ற பதிவு, அந்த எட்டு அடுக்கு அறிவுப் பெட்டகத்தினைத் திறந்து பார்க்கக்கூடிய திறவுகோல் அல்லவா?

அந்தத் திறவுகோலுடன் உள்ளே நுழைந்தபோது, தரைத்தளத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிப்பதற்கான பிரெய்லி முறையிலான புத்தகங்கள் நிறைந்திருந்தன. அங்கிருந்த ஓர் அரங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்கள் ஆர்வமுடன் வரவேற்க, அவர்களை வாழ்த்தி, அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டேன்.

முதல் தளத்தில், பலவிதமான போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள், தங்களின் புத்தகங்களை வைத்துப் படிப்பதற்கான வசதியுடன் கூடிய அறை இருந்தது. நிறைய மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். சிலர் தரையில் அமர்ந்திருந்தனர்.

நாள்தோறும் மாணவர்களின் வருகை அதிகரிப்பதால், இடவசதி போதவில்லை என்பது புரிந்தது. அவர்களுக்கான இடவசதியினை அதிகப்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு, ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.

அங்கிருந்த மாணவர்கள், தலைவர் கலைஞர் அவர்கள் கட்டிய நூலகத்தின் சிறப்பையும், அதனால் தங்களுக்குக் கிடைக்கும் பலன்களையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.

தற்போதைய பதிவின் மூலம், கௌரவ உறுப்பினராகும் வாய்ப்பு அமைகிறது. அதன் மூலம், புத்தகங்களை எடுத்து வந்து படிப்பது, மின்நூலகத்தைப் பயன்படுத்துவது, தேவையான தரவுகளைப் பெறுவது, விரைவில் அமையவிருக்கும் வைஃபை வசதியைப் பயன்படுத்திக்கொள்வது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காக தனி நபருக்கு ரூ.200, குடும்பத்திற்கு ரூ.500, முதியவர்களுக்கு ரூ.100, மாணாக்கர்களுக்கு ரூ.150 என, முதல்முறைப் பதிவுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவைதவிர, ஆண்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணாக்கர்களுக்கான முதன்முறைக் கட்டணம் 150 என்பதையும், ஆண்டுக் கட்டணம் 75 என்பதையும் குறைக்க வேண்டும் என நூலகத்தில் இருந்த மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

குழந்தைகளுக்கான நூலகப் பகுதியும் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை நேரில் பார்க்கும்போது அறிய முடிந்தது.

அதுபோலவே, கணினி வசதிகள் தொடங்கி, மின்நூலகம், குளிர்சாதனம், கருத்தரங்கக் கூடங்கள், உணவகம், கழிவறை வரை அனைத்திற்கான வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலையில்தான் உள்ளன.

இந்த மாபெரும் நூலகத்தில் போதுமான அளவில் அவ்வப்போது புத்தகங்கள் வாங்கப்படவில்லை. நன்கொடையாக வழங்கப்பட்ட புத்தகங்களுக்கான இடத்தில், தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிய அவரது படைப்புகள், மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைக் கண்டேன்; நெகிழ்ந்தேன்!

நூலக ஊழியர்கள் ஆர்வமுடன் வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டு, தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

நிரந்தர வேலை, பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகள் அவற்றில் அடங்கியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், இவை அனைத்தையும் இந்த அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, ஆவன செய்ய வலியுறுத்தும் பொறுப்பு இருப்பதை உணர்கிறேன். ஆட்சியாளர்கள் கவனிப்பார்கள் என நம்புகிறேன்.

அவர்கள் அலட்சியப்படுத்தினால், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்தவும், படிக்க விழைவோர்க்கு நன்கு பயன்படவும், அதன் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடவும், அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு விரைந்து அமைந்து, அனைத்தையும் நிறைவேற்றும் என்ற உறுதியினையும் வழங்குகிறேன்.

அறிவுத் திருக்கோவிலாம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உலகத்தரத்தில் அமைத்த தலைவர் கலைஞர் அவர்கள், அது சிதைக்கப்படாமல் காப்பாற்றப்படுவதற்காகவும் அயராது சட்டப் போராட்டத்தை மேற்கொண்டார். அந்தப் போராட்டங்களுக்கு நீதி கிடைத்துள்ளது.

மரணத்திலும் தனக்கான இடத்தைப் பெறும் போராட்டத்தில் வென்ற தலைவர் கலைஞர் அவர்கள், இறப்பிற்குப் பிறகும் தன் இலட்சியப் போராட்டங்களில் வெற்றி பெற்றே வருகிறார்.

9 ஆண்டுகளுக்குப் பின் உயிர் பெற்றிருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம். தனது அன்புத் தம்பி அமைத்த நூலகத்தில் உறுப்பினராகச் சேருமாறு பேரறிஞர் அண்ணா நம்மை அழைக்கிறார்!

அறிஞர் அண்ணாவும் தலைவர் கலைஞரும் காலந்தோறும் நமக்குப் பாடமாக இருந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் உறுப்பினராகி, தொடர்ந்து அறிவை விசாலமாக்குவோம்!

தி.மு.கழக மாணவரணியினர், குறிப்பாக சென்னையில் இருப்போர், உடனடியாக நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்வதுடன், அனைத்து மாணவர்களும் உறுப்பினராவதற்கான இயக்கத்தினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணா நூலகம் நாள்தோறும் வளர வேண்டும்; அதன் பயன்களைப் பெற்று தமிழ்ச் சமுதாயம் தொடர்ந்து மேன்மையுற வேண்டும்!

அன்புடன்

மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் ஆண்டு 2050, ஐப்பசி 06,

23-10-2019