Announcement - DetailPage - DMK
header_right
newimg
பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவர் மறைவுக்கு கழக தலைவர் இரங்கல் தெரிவித்தார்...

பதிவு: 26 Nov 2018, 12:00:20 மணி

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தியில் "உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவருமான திரு. சந்தானம் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மறைவெய்தினார் என்பது எனக்கு துயரத்தையும் மிகுந்த வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் பார்வர்டு பிளாக் கட்சித் தொண்டர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்நாள் முழுவதும் பசும்பொன் தேவர் திருமகனாரின் ஆழ்ந்த சீடராகத் திகழ்ந்த திரு. சந்தானம் அவர்கள், ஒரு சமூக நீதிப் போராளி ஆவார். மேலும் தேவரின் கொள்கைகளை இறுதி வரை உறுதியாகக் கடைப்பிடித்தவர்; கட்டிக் காத்தவர். தலைவர் கலைஞர் அவர்களுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் மிக நெருங்கிய நட்பும், அளவற்ற பாசமும் கொண்ட அவர் தமிழக நலனுக்காக கழகத்திற்குத் துணை நின்றவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய பணிகள், சட்டமன்ற ஜனநாயகம் காக்கும் அவரது உயரிய பண்பு எல்லாம் என்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நிலைத்த உதாரணமாக விளங்கிடும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என்பதோடு அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் சமுதாய நல்லிணக்கத்தின் சிறப்பான முத்திரையாக மக்கள் மனதில் நீடித்து இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.