Announcement - DetailPage - DMK
header_right
newimg
திராவிடத் தத்துவ ஆசான் பேராசிரியர் பெருந்தகையே; நூறாண்டுகள் கடந்து வாழ்க!

பதிவு: 19 Dec 2018, 11:26:17 மணி

“திராவிடத் தத்துவ ஆசான் பேராசிரியர் பெருந்தகையே; நூறாண்டுகள் கடந்து வாழ்க!”

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

திராவிட இயக்கத்தின் கொள்கைப் பேராசானாக, தெளிந்த தத்துவ வித்தகராக, மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை வரை அனைவருக்கும் இலட்சிய வகுப்பெடுக்கும் ஆற்றல் மிகுந்த கழகத்தின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள், 97வது பிறந்த நாளைக் கொண்டாடுவது நமக்கெல்லாம் பெருமையையும், பெரும் உந்துதலையும் உருவாக்குகிறது. நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் முக்கால் நூற்றாண்டுக் கால அனுபவம் என்பது ஆகப்பெரிய கொள்கைச் செல்வம். அந்தச் செல்வத்தை நமக்கெல்லாம் வாரி வாரி வழங்கி மேலும் பெருக்கி வாழ்ந்து வருபவர் நமது இனமானப் பேராசிரியர் அவர்கள்.

தந்தை பெரியாரின் தன்மானம் செறிந்த பகுத்தறிவு – சுயமரியாதை நெறியில், பேரறிஞர் அண்ணாவின் இனம் – மொழி, விடுதலை உணர்ச்சி தரும் வேகத்துடன் தலைவர் கலைஞர் அவர்களின் சமூக நீதி – சமத்துவக் கொடியை இந்தத் தள்ளாத வயதிலும், சிறிதும் தளராமல் தாங்கிப் பிடித்து ஓங்கி உயர்ந்து வருபவர் பேராசிரியர் அவர்கள். கலைஞர் அவர்களின் இளம் வயதில் திருவாரூரில் நடைபெற்ற சிக்கந்தர் விழாவில் பேரறிஞர் அண்ணா அவர்களுடன் வருகை தந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அன்றைய மாணவரான இன்றைய பேராசிரியர் அவர்கள் ஆற்றிய உரையும், அப்போது நடந்த சந்திப்பும் தலைவர் கலைஞர் அவர்களின் இறுதி மூச்சு இருக்கும் வரை கொள்கை உறவாக நீடித்து இயக்கத் தோழமையாகத் தொடர்ந்ததை தூயவரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டும்.

பொதுவுடைமைக் கொள்கையை நிலைநாட்டிய மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கிய ஏங்கல்ஸ் போல, சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டிட தலைவர் கலைஞர் அவர்களுக்கு உற்ற பெருந்துணையாக எப்போதும் உடன் இருந்தவர் பேராசிரியர் அவர்கள். இப்போதும் அந்தக் கொள்கையை உறுதிபடக் காத்திடவும், கழகத்தின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்தவும் உங்களின் ஒருவனான எனக்கு எப்போதும் தந்தையைப் போல் துணை நிற்கிறார்.

கழக மாநாடுகளில் பேராசிரியர் கம்பீரக் குரலில் நிகழ்த்திய கொள்கை உரை வீச்சு இளைஞரணியை வழிநடத்திய எனக்குள் இலட்சிய விதைகளை விதைத்தன. அந்த ஊக்கம் தான், இராணுவம் போன்ற கட்டுப்பாட்டுடன் வெள்ளைச் சீருடையில் கையில் இருவண்ணக் கொடியேந்தி பேரணியில் அணிவகுக்கும் வெற்றியினை இளைஞரணிக்குப் பெற்றுத் தந்தது. பேராசிரியர் வைத்த ஆரோக்கியமான போட்டியின் விளைவாகத் தான், தமிழகம் முழுவதும் பயணித்து கழகக் கொடிகளை ஏற்றியும், படிப்பகங்களைத் திறந்தும், தெருமுனைப் பிரசாரங்கள் முதல் பொதுக்கூட்டங்கள் வரை பங்கேற்றும் நிதி திரட்டி அன்பகத்தை இளைஞரணிக்குச் சொந்தமாக்க முடிந்தது.

தத்துவத்தையும், களப்பணியையும் சம விகிதத்தில் கலந்து, இயக்கத்தைக் கட்டிக்காக்கும் எடுப்பான பாடங்களை எனக்குக் கற்றுத் தந்தவர் பேராசிரியர். தலைவர் கலைஞரின் ஒரு கோடி உடன்பிறப்புகளும் இன்றும் கூட பேராசிரியரிடம் பாடம் பயின்று வருகின்றனர். அவருடைய மாணவர் என்று சொல்லிக் கொள்வது நம் ஒவ்வொருவருக்கும் மாறாப் பெருமையாகும்.

97 வயதிலும் உள்ளத்தில் உறுதி குறையாமல் உற்சாகம் தளராமல் பாடுபட்டு வரும் பேராசிரியர் அவர்கள், தலைவர் கலைஞர் மேல் வைத்துள்ள அளவற்ற பற்றையும், பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தான் ஊன்றுகோல் துணையுடன் மேடையேறி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவுக்கு முன்னிலை வகித்தார். தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழாவில் அவர் காட்டிய ஆர்வமும், அக்கறையும் அன்பின் வற்றாஊற்று.

தலைவர் கலைஞர் அவர்கள் உடலால் நம்மை விட்டுப் பிரிந்த நிலையில் நம் உணர்விலெல்லாம் அவரே கலந்திருக்கிறார். அந்த உணர்வுக்கு ஊக்கம் தரும் சக்தியாக பேராசிரியர் பெருந்தகை விளங்குகிறார். 97 வது பிறந்தநாளைக் காண்கின்ற வேளையிலும் பொதுமக்கள் நலனே முதன்மை என்ற எண்ணத்துடன் கஜா புயல் பேரிடரைக் கருதியும், தன்னுடைய முதுமையை கவனத்தில் கொண்டும் பிறந்தநாள் கோலாகலங்கள் வேண்டாம் – நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்க வேண்டுமென உங்களின் ஒருவனான நான் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டதுடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கழகத்தினர் ஏற்கனவே மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகளை, பேராசிரியர் பெருந்தகையின் பிறந்தநாளான டிசம்பர் 19 ஆம் தேதியன்று மேலும் கூடுதலாக மேற்கொண்டிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தேன்.

97 வயதிலும் தொண்டால் பொழுதளக்கும் பேராசிரியரின் பிறந்தநாளில் அவருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் புயல் பாதித்த இடங்களில் நிவாரணப் பணிகளையும், மற்ற இடங்களில் எளிய மக்களுக்கான நல உதவித் திட்டங்களையும் வழங்கி சிறப்பித்திடுவோம். தந்தை பெரியாரின் வயதையும் கடந்து வாழ்கின்ற திராவிடத் தத்துவ ஆசான் பேராசிரியர் அவர்கள், நூறாண்டு கடந்தும் நல்ல நலமுடன் வாழ்ந்து, நம் அனைவரையும் வழிநடத்திடும் விழிகளாக விளங்கிட விரும்புகிறேன்! வாயார வாழ்த்தி மனமார வணங்குகிறேன்!

அன்புடன்,

மு.க.ஸ்டாலின்