Announcement - DetailPage - DMK
header_right
newimg
கஜா புயலால் கொடுந் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் மக்களைக் காப்பாற்ற அரசு தூக்கத்தில்...

பதிவு: 19 Nov 2018, 22:28:43 மணி

“கஜா புயலால் கொடுந் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் மக்களைக் காப்பாற்ற அரசு தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு, மறு சீரமைப்புப் பணிகளை முடுக்கி விட வேண்டும்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்"

இரண்டு நாட்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கஜா புயல் பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அந்த அடிப்படையில் புதுக்கோட்டையில் புயல் பாதித்த இடங்களை இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர், விக்கிரவாண்டியில் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசிய விவரம் பின்வறுமாறு: கழகத் தலைவர்: கஜா புயல் தாக்கப்பட்டதில் குறிப்பாக டெல்டா பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எல்லாப் பணிகளையும் முடித்து விட்டோம், போர்க்கால அடிப்படையில் எல்லா நடவடிக்கைகளும் எடுத்திருக்கிறோம் என்று சொல்லி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெறும் அறிக்கை விட்டிருக்கிறார். இன்று காலையில் அவர் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட போகிறார் என்று சொல்லி நேற்று மாலையே பத்திரிகைகளில் செய்தி கொடுத்து இன்று எல்லாப் பத்திரிக்கைகளிலும் தலைப்புச் செய்தி அதுதான். அதுமட்டுமல்ல, அவரே வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேட்டி கொடுக்கிறபொழுது நாளைக்கு செல்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார். அப்படி சொன்னவர் இன்னும் வரவில்லை, வராததிற்கு காரணம் என்னவென்றால் எந்தப் பணிகளும் இங்கு நடக்கவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. குடிக்க தண்ணீர் இல்லை, பால் கிடையாது, குடிக்க தண்ணீர் வருவதற்கான வாய்ப்பே இல்லாத ஒரு சூழ்நிலை மின்சாரம் முழுமையாக தடைபட்டிருக்கிறது. மரங்கள் விழுந்திருக்கிறது. சாலைப் போக்குவரத்து கிடையாது, உயிரிழப்பு இதுவரைக்கும் 50-க்கும் மேல் தாண்டியிருக்கின்ற சூழ்நிலை. எந்தப் போக்குவரத்தும் இல்லாத சூழ்நிலையில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றைய தினம் நான் நாகப்பட்டினம், தரங்கம்பாடி, வேதாரண்யம் காரைக்கால், திருத்துறைபூண்டி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் எல்லாம் நேரடியாக சென்று மக்களை சந்தித்தேன். ஆறுதல் சொல்லியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்கிறேன். அப்பொழுது மக்கள் சொன்னது இதுவரைக்கும் எந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் வரவில்லை. முதலமைச்சரும் வரவில்லை, சம்பந்தப்பட்ட அமைச்சரும் வரவில்லை என அந்தப் புகார்களை எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஒரு முதலமைச்சர் வந்து உடனடியாக அங்கு சென்று ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்து இந்தப் பணிகளையெல்லாம் முடுக்கி விட்டிருக்கவேண்டும். ஆனால், வருவதற்கான சூழ்நிலை இல்லை. காரணம் எந்தப் பணிகளாக இருந்தாலும் மக்களினுடைய எதிர்ப்பு அதிகமாக இருப்பதால் எங்கு பார்த்தாலும் சாலை மறியலில் ஈடுபட்டு வெகுண்டெழுந்து அந்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை. ஆகவே, உடனடியாக அரசு இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் மெத்தனத்தை கைவிட்டுவிட்டு உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன். செய்தியாளர்: இன்றைக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காரை வழிமறித்து பொதுமக்கள் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து? கழகத் தலைவர்: அந்த செய்தி எனக்கு வரவில்லை, ஆனால் நேற்றைய தினம் அவர் கிராமப் பகுதிகளுக்கு உள்ளே போகாமல் வெளியில் சும்மா ‘ஷோ’ காட்டுவதற்காக முக்கியமான சாலைகளில் மட்டும், காரில் வந்து ஏதோ குறைகள் கேட்க வந்திருப்பதாக மக்கள் அங்கு வந்து அவரை வழி மறித்து கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் அவர் வந்த காரில் இருந்து அவரே இறங்கி காரையை நடுரோட்டில் விட்டுவிட்டு பக்கத்தில் இருந்த சுவர் ஏறி குதித்து காவல்துறை பாதுகாப்போடு தப்பித்து சென்றிருக்கிறார் என்று தான் செய்தி வந்திருக்கிறது. இன்று காலையில் கூட தினமலர் பத்திரிக்கையில் அந்த புகைப்படத்தோடு, ஆதாரங்களோடு வந்திருக்கிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை. இவ்வாறு அவர் கூறினார்.