Announcement - DetailPage - DMK
header_right
newimg
மத்திய பா.ஜ.க அரசுக்கு பாதுகாப்பு மதிலாக இருப்பதை தவிர்த்து, உடனடியாக கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் பெற

பதிவு: 19 Dec 2018, 18:46:53 மணி

“மத்திய பா.ஜ.க அரசுக்கு பாதுகாப்பு மதிலாக இருப்பதை தவிர்த்து, உடனடியாக கஜா புயல் பாதிப்புக்கு உரிய நிவாரணம் பெற அ.தி.மு.க அரசும், அ.தி.மு.க எம்.பிக்களும் மத்திய அரசுக்கு பேரழுத்தம் கொடுக்க வேண்டும்”

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆங்காங்கே அனைத்துக்கட்சிக் குழுக்கள் அமைத்து அவர்கள் முன்னிலையில், நிவாரணம் வழங்கி பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தல்

“கஜா” புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வாழ்வாதாரத்திற்கான அனைத்து உடைமைகளையும் பறிகொடுத்து கண் கலங்கி மனம் வெதும்பி நிற்கும் காவிரி டெல்டா மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு ஒரு மாதத்திற்கு மேலாகியும் அவர்களுக்குரிய நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படாமலிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உயிர் வாழ்வதற்காக, அவர்களை வீதிக்கு வந்து போராட வேண்டிய அவல நிலைமையை அ.தி.மு.க அரசு உருவாக்கியிருப்பது வேதனையானதும், அவமானகரமானதுமாகும். நவம்பர் 15 ஆம் தேதி கோர தாண்டவமாடிய கஜா புயலுக்கு அ.தி.மு.க அரசு 19 ஆம் தேதி அறிவித்த எந்த நிவாரண உதவிகளும் அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரை முழுமையாகப் போய்ச் சேரவில்லை. வீடுகளை இழந்தவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் வேதனையின் விளிம்பிற்கே சென்று விட்டார்கள். படகுகளை பறிகொடுத்த மீனவர்களும் பரிதாபமாகக் கைபிசைந்து நிற்கிறார்கள். “அமைச்சர்கள் முகாமிட்டு நிவாரணப் பணியாற்றுகிறார்கள்” என்றெல்லாம் விளம்பரத்திற்கு பேசிய முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமியின் நிர்வாகத் திறமையின்மையால் விவசாயிகளும், பொதுமக்களும் ஆங்காங்கே முழுநேரத் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி கண்டு கொள்ளவும் அவருக்கு நேரமில்லை என்பது வெட்கக்கேடானது.

திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணப் பொருட்கள் வழங்கிட வேண்டும் என்று தினமும் நடக்கும் தீவிரப் போராட்டங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களே, “அனைத்து விவசாயிகளுக்கும் நவம்பர் 19 ஆம் தேதி அறிவித்த நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை” என்று குற்றம் சாட்டியிருக்கிறார். கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே அரசு அதிகாரிகளிடம் முறையிட்டாலும், “எங்களுக்கு நிதி வந்தால்தானே நிவாரண உதவிகளை வழங்க முடியும்” என்று கை விரிக்கிறார்கள்.

“காவிரி நீர் கடைமடைப் பகுதிக்கு இந்த ஆட்சியில் போகாதது போல்” கஜா புயலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இன்னும் போய்ச் சேரவில்லை. நிவாரணப் பணிகள் நிலை குலைந்தும், நிவாரண உதவிகள் ஸ்தம்பித்தும் கிடக்கின்றன. பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பிலும் அ.தி.மு.க அரசு செய்துள்ள குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் கிடைக்கப் போவதில்லை என்ற சந்தேகமும் மக்களின் இந்த தொடர் போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. வயிற்றுப் பசிக்கு போராடிய மக்களையும், வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களையும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்வதிலும், ஆலங்குடியில் போராட்டம் நடத்திய மக்களுக்கு நீதிமன்றமே வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் மனுப் போடுவதிலும் அக்கறை காட்டும் அ.தி.மு.க அரசு, மத்திய அரசிடம் “கஜா பேரிடர்” நிதி பெறுவதற்கு அரசியல் ரீதியாக ஒரு சிறிய அழுத்தத்தைக் கூட இதுவரை கொடுக்கவில்லை.

“கஜா பேரிடர் நிதியாக ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை” என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு பேட்டியளித்த பிறகும் முதலமைச்சர் அதுபற்றி மத்திய அரசுக்கோ அல்லது பிரதமருக்கோ எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் எதிர்க்கட்சிகளை தனக்கே உரிய பாணியில் அநாகரிகமாக அர்ச்சனை செய்ய அரசு விழாவை பயன்படுத்துகிறார்.

மத்திய பா.ஜ.க. அரசுக்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன் பாராளுமன்றத்தில் கலாட்டா செய்யும் அ.தி.மு.க எம்.பி.க்கள், கஜா புயல் குறித்த விவாதத்தின் போது கூட அவையில் இருந்து பேசி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தயாராக இல்லை. மத்திய குழு கஜா புயல் சேதங்களுக்காக முதலமைச்சரை சந்தித்து விட்டுச் சென்று 25 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த மத்திய குழு பரிந்துரைகள் கொடுத்ததாகவும் தெரியவில்லை. அந்த பரிந்துரையின்படி மத்திய அரசு எந்த கஜா பேரிடர் நிதியையும் ஒதுக்கவில்லை. ஆகவே, காவிரி டெல்டா மக்களைப் பழிவாங்கும் தொடர் நிகழ்வுகளாக மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு, அப்பாவி மக்களையும், விவசாயிகளையும் விரக்தியில் தள்ளிப் போராட வைப்பது மிகுந்த வேதனைக்குரியது.

ஆகவே, கஜா புயல் பாதிப்பில் சிக்கி அவதிப்படும் அப்பாவி மக்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உடனடியாக நிவாரண உதவிகள், ஆங்காங்கே அனைத்துக்கட்சிக் குழுக்கள் அமைத்து அவர்கள் முன்னிலையில், வழங்கிடவும், அந்த மாவட்டங்களில் விவசாயக் கடன் மற்றும் கல்வி கடன்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தங்களது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் அவ்வப்போது சந்திக்கும் முதலமைச்சரும், அ.தி.மு.க அமைச்சர்களும், கஜா பேரிடர் நிதியை உடனே பெறுவதற்கு உரிய பேரழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், பா.ஜ.க.விற்கு பாதுகாப்பு மதிலாக இருந்து பாராளுமன்றத்தை முடக்குவதற்குப் பதிலாக, கஜா புயல் பாதிப்பு பேரிடர் நிதியைப் பெற உருப்படியான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் திரு பழனிசாமியும், அ.தி.மு.க எம்.பி.க்களும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.