Announcement - DetailPage - DMK
header_right
newimg
முன்னறிவிப்பு ஏதுமின்றி எதேச்சதிகாரப் போக்கில் விவசாயிகளின் சொந்த நிலங்களில் உயர் மின்னழுத்த மின்பாதை அமைப்பது கண்டனத்திற்குரியது

பதிவு: 25 Dec 2018, 21:46:24 மணி

முன்னறிவிப்பு ஏதுமின்றி எதேச்சதிகாரப் போக்கில் விவசாயிகளின் சொந்த நிலங்களில் உயர் மின்னழுத்த மின்பாதை அமைப்பது கண்டனத்திற்குரியது : தமிழக முதலமைச்சர் போராடுகின்ற விவசாயிகளை உடனடியாக நேரில் அழைத்துப் பேசி அவர்களின் ஆலோசனைகளின் படி செயல்படுத்திட வேண்டும். -கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை

முன் அறிவிப்பு ஏதுமின்றி, விவசாயிகளின் முன் அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாகவும், எதேச்சதிகாரமாகவும் மத்திய அரசின் “பவர் கிரிட் நிறுவனமும்” தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழகமும் இணைந்து கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக உயர் மின்னழுத்த மின் பாதை அமைக்கும் திட்டங்களை மேற்கொள்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளை நிலங்களில் நுழைவதற்கு நில உரிமையாளரிடம் அனுமதி பெறாமலும், நில உரிமையாளருக்கு முன் கூட்டியே தெரிவிக்காமலும் விளை நிலங்களுக்குள் அத்துமீறி பிரவேசித்து மின் கோபுரங்களை அராஜகமாக அமைப்பது மேற்கண்ட மாவட்டங்களில் விவசாயத்தை அடியோடு பாதிப்பது மட்டுமின்றி, விவசாயிகளுக்கும் தாங்க முடியாத பேரிழப்பினை ஏற்படுத்தும் மிகப்பெரிய அபாயமாக மாறியிருக்கிறது. குறிப்பாக மின்கோபுரங்கள் அமையும் பகுதியில் மக்களின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு கொடிய நோய்கள் வருவதற்கும் காரணமாக இருக்கிறது என்று மின் கோபுரங்கள் அமைக்கும் பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் அச்சம் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், விவசாயத்திற்கு பேரிழப்பு ஏற்படுத்தும் வகையிலும் வலுக்கட்டாயமாக மேற்கொள்ளப்படும் இந்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து “காத்திருப்பு போராட்டம்” “தூக்குக் கயிற்றில் தொங்கும் போராட்டம்” “சாகும் வரை உண்ணாவிரதம்” “வெட்டப்பட்ட தென்னை மரங்களை வைத்து ஓப்பாரி வைக்கும் போராட்டம்” “பாடை கட்டி போராட்டம்” “5 அடி குழியை தோண்டி தண்ணீர் நிரப்பி அதில் விவசாயிகள் மூழ்கி கவன ஈர்ப்பு போராட்டம்” “பிச்சை எடுக்கும் போராட்டம்” போன்ற பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளில் ஐந்து பேர் மயக்கம் அடைந்து, உடல்நிலை மிகவும் மோசமாகி சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அதிமுக அரசின் மின்துறை அமைச்சரோ, வேளாண் துறை அமைச்சரோ விவசாயிகளை சந்தித்து அவர்களுடைய அச்சத்தைப் போக்கவோ, அல்லது “மின்கோபுரம் அமைக்கும் பணிகள் நடக்காது” என்று விவசாயிகளை நேரில் சந்தித்து உத்திரவாதம் கொடுத்தோ போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முன் வரவில்லை. முதலமைச்சர் திரு பழனிச்சாமி தீவிரமாக உயிரை துச்சமாக நினைத்துப் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை அழைத்து ஒரு பேச்சுவார்த்தை நடத்துவதற்குக் கூட தயாராக இல்லை. ஏற்கனவே மின்கோபுரம் அமைக்கப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கும் சட்டப்படி தர வேண்டிய வருடாந்திர வாடகை கட்டணத்தைக் கூட வழங்க மறுத்து அராஜக போக்குடன் அதிமுக அரசும், மத்திய பா.ஜ.க. அரசும் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. உயர் அழுத்த மின்சாரத்தை நிலத்துக்கடியில், கேபிள் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் முன் வைக்கும் கோரிக்கையையும் காது கொடுத்து இந்த அரசு கேட்கவில்லை என்பது “பொறுப்பற்ற ஆட்சியில்” மக்கள் எந்த அளவிற்கு “பொல்லாத துயரங்களை” அனுபவிக்கிறார்கள் என்ற அலங்கோலத்தை வெளிப்படுத்துகிறது.

ஆகவே விளை நிலங்கள் வழியாக மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை முதலமைச்சர் திரு பழனிச்சாமி உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களின் ஆலோசனையான நிலத்துக்கடியில் கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லும் வழிமுறைகளை தீவிரமாக ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே மின்கோபுரங்கள் அமைக்கப்பட்ட நிலங்களுக்குரிய வருடாந்திர வாடகை கட்டணத்தை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு அளிப்பதுடன், போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூக தீர்வு எட்டப்படும் வரை, விளை நிலங்கள் வழியாக புதிதாக மின் கோபுரங்கள் அமைக்கும் அனைத்துப் பணிகளையும் 13 மாவட்டங்களிலும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.