Announcement - DetailPage - DMK
header_right
அரசு எழுதித் தந்திருக்கக்கூடிய failure paper-களை ஆளுநர் சட்டமன்றத்தில் படிக்கிறார்” - கழகத் தலைவர் குற்றச்சாட்டு

பதிவு: 03 Jan 2019, 13:30:18 மணி

“அரசின் எல்லாத் துறைகளிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது அ.தி.மு.க அரசு; அரசு எழுதித் தந்திருக்கக்கூடிய failure paper-களை ஆளுநர் சட்டமன்றத்தில் படிக்கிறார்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குற்றச்சாட்டு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் எல்லா நிலைகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கும் அ.தி.மு.க அரசைக் கண்டித்தும், ஆளுநர் உரையை புறக்கணித்தும் சட்டமன்றத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசவிருந்த உரையின் விவரம் பின்வருமாறு:

இன்று (02-01-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான “கஜா புயல் பேரிடர் 15.11.2018 நள்ளிரவில் நிகழ்ந்தது. மத்திய அரசிடமிருந்து பேரிடர் நிதியாக 15,000 கோடி ரூபாய் கேட்டும், கஜா பேரிடர் நிதியாக 46 நாட்கள் கழித்து - அதுவும் உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மத்திய அரசு 1,146 கோடியே 12 லட்சம் ரூபாய் மட்டும் அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக கேட்ட 1500 கோடியைக் கூட பெற முடியாமல்" அதிமுக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.வி உதயகுமார் தோல்வி அடைந்துள்ளார். இதைக் கேட்டுப் பெறுவதற்கான துணிச்சல் இல்லாமல் முதலமைச்சர் நாற்காலியில் அமரத் தகுதி இல்லாதவராக எடப்பாடி பழனிசாமி ஆகிவிட்டார்.

"அமைச்சரவையில் கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடத்தவறியதால்" இன்றைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அதிமுக அரசின் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு சம்பத் தோல்வி கண்டிருக்கிறார். "காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதத்திற்கு மேலாகியும் அதற்கு நிரந்தர தலைவர் நியமிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமலும்", "தமிழக விவசாயிகளுக்கு பெரும் கேடு விளைவித்து, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு இதுவரை ஸ்டே பெற முடியாமல்- மத்திய அரசு அனுமதியை திரும்பப் பெற வைக்க முடியாமலும்" பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி தோல்வி அடைந்திருக்கிறார்.

"புதிய எச்.ஐ.வி தொற்றை தடுப்போம்" என்று கூறிய அதிமுக அரசு இன்றைக்கு அரசு மருத்துமனையிலேயே எச்.ஐ.வி ரத்தத்தை கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்திய கொடுமை அரங்கேறி சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் சி விஜயபாஸ்கர் படு தோல்வி அடைந்திருக்கிறார். "கார்ப்பரேசன் ஆபிசா அல்லது கரெப்சன் ஆபிசா" என்று உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு தாண்டவமாடும் ஊழலால் உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு வேலுமணி தோல்வியடைந்து நிற்கிறார்.

"விளை நிலங்கள் வழியாக மின்கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசி தீர்வு காண முடியாமல்" மின்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி தோல்வியடைந்து விட்டார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் தலைமை வகிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ அரசு நிர்வாகத்தை நடத்த முடியாமல் - மத்திய அரசிடம் மாநில உரிமையை பாதுகாத்திட முடியாமல் - குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ.யில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரைக் கூட நீக்க முடியாமல் - சட்டம் ஒழுங்கை அறவே காப்பாற்ற முடியாமல் - டெண்டர் ஊழல் மட்டும் என் பணி என்ற அளவில் முதலமைச்சர் பொறுப்பிலேயே முற்றிலும் தோல்வியடைந்து விட்டார். ஒரு நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் மீதும் பல்வேறு புகார்கள் எழுந்து நிற்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பால் எடுக்கப்பட்ட பதவிப்பிரமாணத்துக்கு முரணான வகையில் செயல்பட்டு வருகிறது இந்த அமைச்சரவை. இவை அனைத்துக்கும் மேலாக தங்கள் கட்சித் தலைவரை இந்த நாட்டுக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைக் காக்கத் தவறி இருக்கிறார்கள். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நான் அப்போதே சொன்னேன். இன்றைக்கு சட்ட அமைச்சராக இருக்கக் கூடிய சி.வி.சண்முகம் அவர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான ராம்மோகன் ராவ்/ தற்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதாவையே காப்பாற்ற முடியாத இவர்கள், கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை எப்படிக் காப்பாற்ற போகிறார்கள்? இப்படி எல்லாத் துறைகளிலும் தோல்விடைந்து விட்ட அமைச்சர்களும், முதலமைச்சரும் அடங்கிய அதிமுக அரசின் ஆளுநர் உரையால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. பதிலாக தமிழகத்தின் முன்னேற்றமும், வளர்ச்சியும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிமுக அரசின் இந்த ஆளுநர் உரையைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்பு செய்கிறோம்.

வெளிநடப்பு செய்த பின்னர் கழகத் தலைவர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முழுவிவரம் பின்வருமாறு:

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க அரசின் சார்பில் சட்டமன்றத்தில் இன்று [02-01-2019] தாக்கல் செய்யப்பட இருக்கக்கூடிய கவர்னர் உரையை, நாங்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கின்றோம். வெளிநடப்பு செய்வதற்கான காரணங்களைப் பொறுத்த வரையில், இந்த அரசு எல்லா நிலையிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. Totally failure government ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கஜா புயல் உதவித் தொகையாக இந்த அரசு மத்திய அரசிடம் கேட்டத்தொகை 15,000 கோடி ரூபாய் ஆனால், இதுவரையில் 1,500 கோடி ரூபாய் வரையில் கூட இந்த மத்திய அரசு வழங்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு போட்டதாக இந்த எடுபிடி அரசு சொல்லுகின்றது. ஆனால், அதனைத் திறக்கச் சொல்லி பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவு போட்டிருக்கின்றது. அதேபோல், மேகதாது அணை பிரச்னையைப் பொறுத்தவரையில் மத்திய அரசு கொடுத்திருக்கும் அனுமதியைக் கூட திரும்பப்பெற வேண்டும், அதை ரத்து செய்ய வேண்டும் என்று அழுத்தம் தர முடியாத நிலையில் இந்த கேடுகெட்ட அரசாங்கம் இருந்து கொண்டிருக்கின்றது.

அதேபோல், அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி இரத்தத்தைச் செலுத்தி ஒரு மோசமான சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கின்றது. அதேபோல், விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து அந்தப் பகுதி விவசாயப் பெருமக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை அழைத்து இந்த அரசு பேசுவதற்குக்கூட வக்கற்ற வகையற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. குட்கா புகழ் விஜயபாஸ்கருக்கு பல நெருக்கடிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே, அவருடைய கம்பெனி, அலுவலகத்தில், வீட்டில் ரெய்டுகள் நடந்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, வருமான வரித்துறை அவரை அழைத்து விசாரணை நடத்தியிருக்கின்றது. இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர், ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து இந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கக்கேடான செயலாகும்.

அதேபோல், முதலமைச்சராக இருந்தாலும், துணை முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீதெல்லாம் நீதிமன்றத்திலே ஊழல் வழக்குகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அனைத்துக்கும் மேலாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இறப்பில் மிகப்பெரிய மர்மம் இருக்கிறதென்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் பகிரங்கமாக – ஆக்ரோஷமாக – ஆத்திரமாக – ஆவேசமாக பத்திரிகையாளரிடத்தில் பேட்டி தந்திருக்கின்றார். இதனால் தான் நாங்கள் அவர் இறந்தவுடனே இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை வைக்க வேண்டும் என்று தி.மு.கழகத்தின் சார்பில் நாங்கள் அப்பொழுது எடுத்துச் சொன்னோம். எனவே, அதைத்தொடர்ந்து இப்பொழுதும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கக்கூடிய ஆளுநர் உரையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல் எனவே, அரசு எழுதித் தந்திருக்கக்கூடிய failure paper-களை ஆளுநர் இப்பொழுது சட்டமன்றத்தில் படித்துக் கொண்டிருக்கின்றார். எனவே, அதை நாங்கள் கண்டித்து அவருடைய உரையை புறக்கணித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளிநடப்பு செய்திருக்கின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.