Announcement - DetailPage - DMK
header_right
newimg
பாசிச பா.ஜ.க ஆட்சியையும், ஊழல் அ.தி.மு.க ஆட்சியையும் ஒரே நேரத்தில்...

பதிவு: 19 Nov 2018, 22:37:11 மணி

“பாசிச பா.ஜ.க ஆட்சியையும், ஊழல் அ.தி.மு.க ஆட்சியையும் ஒரே நேரத்தில் நாட்டை விட்டு அப்புறப்படுத்த தயாராவோம்”

இன்று (08-11-2018) பெரம்பலூரில் பாசிச பா.ஜ.க மற்றும் ஊழல் அ.தி.மு.க அரசுகளை வீழ்த்தும் ஜனநாயக அறப்போரின் தொடக்கமாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார். அதன் முழு விவரம் பின்வருமாறு:

மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தினுடைய தலைவர் பெரம்பலூர் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் குன்னம் ராஜேந்திரன் அவர்களே, தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்று மகிழ்ந்திருக்கக்கூடிய அரியலூர் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் அருமை நண்பர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களே, கழகத்தினுடைய கொள்கை பரப்புச் செயலாளர் மத்திய முன்னாள் அமைச்சர் அருமை சகோதரர் ராசா அவர்களே, மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு அவர்களே, முனைவர் பொன்முடி அவர்களே, எ.வ.வேலு அவர்களே, எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களே, சகோதரர் மதிவாணன் அவர்களே, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்திருக்கக்கூடிய மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர்கள், துரை சந்திரசேகரன் அவர்களே, மஸ்தான் அவர்களே, கணேசன் அவர்களே, ராஜேந்திரன் அவர்களே, தியாகராஜன் அவர்களே, சி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களே, நிவேதா முருகன் அவர்களே, செல்லபாண்டியன் அவர்களே மற்றும் மேடையிலே வீற்றிருக்கக்கூடிய கழகத்தினுடைய முன்னோடிகளே சட்டமன்றத்தினுடைய முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே, தோழமைக்கட்சியினைச் சார்ந்திருக்கக்கூடிய தோழர்களே, ஒன்றியக் கழக, நகரக் கழக, பேரூர் கழக, கிளைக் கழக நிர்வாகிகளே மாநில இளைஞர் அணியின் நண்பர் சுபா சந்திரசேகர் அவர்களே, தம்பி அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே, கழகத்தின் துணை அமைப்புகளாம் தொழிலாளர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, இளைஞர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி, ஆதி திராவிடர் நலக்குழுவைச் சார்ந்திருக்கக் கூடிய நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத்தினுடைய ஆற்றல் மிக்க செயல்வீரர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

நிறைவாக நன்றியுரை ஆற்றவிருக்கும் வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் அவர்களே, பெரம்பலூர் - அரியலூர் மாவட்டங்களின் சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் கண்டன பொதுக்கூட்டம் மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் – பெருமைப்படுகிறேன் – பூரிப்படைகிறேன். மகிழ்ச்சி மட்டுமல்ல - பெருமை மட்டுமல்ல - பூரிப்பு மட்டுமல்ல நீங்கள் எல்லாம் எப்படி உணர்ச்சியோடு பங்கேற்றிருக்கிறீர்களோ அதேபோல தான் நானும், அதே உணர்ச்சியோடு இந்தக் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன் என்பதை முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம் என்னவென்று சொன்னால், மத்தியிலே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய பாசிச பாரதிய ஜனதா ஆட்சியையும், தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஊழல் நிறைந்த அ.தி.மு.க ஆட்சியையும் ஒரே நேரத்தில் நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்ற அந்த உணர்வோடு ஒரு ஜனநாயகப் போரினை இந்த பெரம்பலூரில் நான் தொடங்கி இருக்கிறேன்.

ஒரு காலத்தில் மிக அடர்ந்த பகுதியாக இருந்த இந்த பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதிதான் இப்பொழுது பெரம்பலூர் என்று அழைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. வரலாற்று ஏட்டிலே ஆதாரங்களோடு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பாசிச விலங்குகளையும் ஊழல் கிருமிகளையும் வேட்டையாடுவதற்கு அறைகூவல் விடுக்க ஒரு களமாக இந்த களத்தை நாம் அமைத்திருக்கிறோம். அதற்கு இந்த பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தை நாம் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

பெரம்பலூர் மாவட்டக் கழகமும், அரியலூர் மாவட்டக் கழகமும் ஒருங்கிணைந்து இந்தக் கூட்டத்தை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெரம்பலூர் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் குன்னம் இராஜேந்திரன் அவர்களும், அரியலூர் மாவட்டக் கழக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களும், அவர்களுக்கு உறுதுணையாக இந்த இரண்டு மாவட்டங்களின் செல்லப்பிள்ளையாக விளங்கிக்கொண்டு இருக்கக்கூடிய நம்முடைய கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருமைச் சகோதரர் ராசா அவர்கள், இதை முன்னின்று நடத்தக்கூடிய வகையில் இந்தக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதைக் கண்டன பொதுக்கூட்டமாக நான் கருதவில்லை. இந்தக்கூட்டத்தை நான் எப்படி கருதிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், இது ஏதோ ஒரு மாவட்ட அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய மாநாடா என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பக்கத்திலே மழை மிரட்டிக்கொண்டிருந்தாலும் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் திரண்டிருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தை பார்க்கிறபோது, விரைவில் நிச்சயமாக – உறுதியாக – பாசிச மத்திய ஆட்சியையும், ஊழல் மிகுந்த இந்த மாநில ஆட்சியையும் விரட்டி அடிப்பதற்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு மாவட்டங்களுக்கு பல்வேறு நேரங்களில், பல்வேறு காலகட்டங்களில் நான் வந்திருக்கிறேன். இளைஞர் அணியில் பொறுப்பேற்று பணியாற்றிய நேரத்தில் இந்த இரண்டு மாவட்டங்களில் கொடியேற்றுவிழா நிகழ்ச்சிகளுக்கு பலமுறை நான் வந்ததுண்டு. பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுண்டு. பாசறை கூட்டங்கள் நடைபெறக்கூடிய அந்தச் சூழலில் கூட கலந்துகொள்ள வந்ததுண்டு. இப்படி, நான் பலமுறை இந்த மாவட்டங்களுக்கு வந்து சென்றாலும் அதை எல்லாம் மிஞ்சக்கூடிய – விஞ்சக்கூடிய அளவிற்கு இன்று நடைபெற்றுக் கொண்டிருக்ககூடிய இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிற நேரத்தில் நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்வதைவிட என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது என்பதையும் புலங்காகித உணர்வோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

திருச்சி செல்லும் போதெல்லாம் இந்த பெரம்பலூரைத் தாண்டித் தான் செல்ல வேண்டும். திருச்சி எப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டையாக விளங்கிக் கொண்டிருக்கிறதோ, அந்தக் கோட்டையினுடைய வாசல் தான் இந்த பெரம்பலூர் என்பதை நாம் மறந்துவிட முடியாது. அதிலும் குறிப்பாக உங்களில் ஒருவனாக இருக்கக்கூடிய நான் இந்த மாபெரும் இயக்கத்தினுடைய தலைவராக பொறுப்பேற்றதற்குப் பின்னால் முதன் முதலாக இந்த மாவட்டத்திலே பங்கேற்கக்கூடிய கூட்டமாக இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது. அதனால்தான் சொன்னேன் இது மறக்க முடியாத கூட்டம்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கழகத்தை வளர்ப்பதற்கு கலைஞரின் பெருமையை சேர்த்துத் தருவதற்கு அயராது பாடுபட்டிருக்கூடிய வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி உழைக்கக்கூடிய இந்தக் கழகத்தினுடைய தியாகச் சீலர்களை எல்லாம் நான் ஒரு கனம் எண்ணிப்பார்க்கிறேன். அவர்களுடைய நினைவுகள் எல்லாம் இன்றைக்கு என்னுடைய மனக்கண் முன்னால் வந்து போய்க்கொண்டு இருக்கிறது. உதாரணத்திற்கு, நான் சிலரை உங்களுக்கு அடையாளம் காட்ட விரும்புகிறேன் "காசோ பணமோ, கனகமாலை வைரமாலையெனக் கணக்கில்லா உயரமாலை குவிந்தா எங்கள் கா.சொ.கணேசன் எனும் கழக மாலையை கடவுளே பிறந்துவரினும் மாற்றமுடியாது.” என்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டதை நான் நினைத்துப்பார்க்கிறேன்.

இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும், விலைவாசி போராட்டமாக கழகம் நடத்தக்கூடிய எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்க வீரர், ஒன்றியக் கழகத்தினுடைய செயலாளராக ஒன்றியப் பெருந்தலைவராக ஏன் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று, மக்களுக்கும் இயக்கத்திற்கும் தொண்டாற்றியிருக்கக் கூடிய கழகத்தினுடைய மாமணி தான் கா.சொ.கணேசன் அவர்கள்.

அதேபோல் இன்று உடல் நலிவுற்று ஓய்வு நிலையில் இருக்கக்கூடிய எஸ்.எஸ். என்று அன்போடு நம்மால் அழைக்கப்படும் சிவசுப்ரமணியம். நானும் என்னுடைய மறைந்த ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி மாவட்டக் கழக துணைச் செயலாளராக இருந்த நேரத்தில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் செல்லாத கிராமங்கள் என்று ஒன்று இருக்கமுடியாது.

அப்போது எங்களை எல்லா கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று கழகப்பணி ஆற்றி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த அந்த உன்னத தொண்டர் இன்றைக்கு ஓய்வெடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார். மாவட்டச் செயலாளராக, ஒன்றியச் செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்து பணியாற்றி கழகத்திற்கும், தலைவர் கலைஞருக்கும் பெருமை சேர்த்தவர் தான் அன்புக்குரிய எஸ்.எஸ். அவர்கள்.

அதேபோல் பெரம்பலூர் ஜெ.எஸ்.ராஜூ அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பொறுப்பில் இருந்திருக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியிருக்கிறார். இந்த இரண்டு மாவட்டங்களைப் பொறுத்தவரையில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லுகிறபோது ஜெ.எஸ்.ராஜூவை யாரும் மறந்து விட முடியாது. அதேபோல் வேப்பந்தட்டை செல்லக்கருப்பண்ணன். ஐந்து முறை ஒன்றியக் கழகத்தினுடைய செயலாளராக இருந்து பணியாற்றியிருக்கிறார். இந்த மேடையிலே அமர்திருக்கக்கூடிய ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 1982 முதல் இன்றுவரை ஒன்றியக் கழகத்தினுடைய செயலாளராக இருந்து, தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். உடல் நலிவுற்று இருக்கக்கூடிய நேரத்தில் கூட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இதுவரையில் கழக நிகழ்ச்சி என்று பட்டியலெடுத்து பார்க்கின்ற பொழுது அதில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்த நிகழ்ச்சி என்று எதையும் சொல்ல முடியாது.

அதேபோல் திருமானூர் எஸ்.ராமசாமி அவர்கள் 1962-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியிருக்கிறார். இருபத்தைந்து ஆண்டுகாலம் ஒன்றியக் கழகத்தினுடைய செயலாளராக இருந்து பணியாற்றியிருக்கிறார். இப்படி ஒரு மிகப்பெரிய பட்டியலை இந்த இரண்டு மாவட்டங்களைப் பொறுத்தவரையில் நான் எடுத்து வைக்க முடியும். அதேபோல் மறைந்த நம்முடைய அரியலூர் ஆறுமுகம் அவர்கள் பெருந்தலைவராக சட்டமன்ற உறுப்பினராக தலைவருடைய அன்புக்கு அடிமையாக இருந்து பணியாற்றியிருக்கக்கூடிய ஆற்றலுள்ளவராக விளங்கியவர் ஆவார். இப்படி கழகத்தை வளர்த்தவர்கள் இன்னுமும் வளர்த்துக்கொண்டு இருக்கக்கூடியவர்கள் அவர்களையெல்லாம் நான் இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

இன்றைக்கு இந்தக் கூட்டம் இங்கே நடைபெறுகிறது என்று சொன்னால், இது வழக்கமாக நடைபெறுகிற கூட்டம் என்று யாரும் கருதிட வேண்டிய அவசியமில்லை. நான் இன்னும் வெளிப்படையாக சொல்லுகிறேன், அகில இந்திய அளவில் கவனிக்கவேண்டிய ஏன் கவனித்துக் கொண்டிருக்கக் கூடிய கூட்டமாக இந்தக் கூட்டம் இங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

நம்முடைய இந்திய தேசத்திற்கு ஒரு புதிய பிரதமரை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தினுடைய தேர்தலை நாமெல்லாம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தல் மாத்திரம் வருகின்றதா அல்லது நாமெல்லாம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து வரப்போகிறதா அது எந்த நிலையில் வந்தாலும், எப்படிப்பட்ட சூழலில் வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும், அதை நாம் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று அறிவிக்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. இன்றைக்கு தமிழ்நாட்டிலே ஊழல் நிறைந்த ஆட்சியாக அ.தி.மு.க ஆட்சியையும், மத்தியிலே பாசிச பாரதிய ஜனதா ஆட்சியையும் ஒரேயடியாக இந்த நாட்டை விட்டு விரட்டக்கூடிய வல்லமை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தான் உண்டு என்பதை அறிவிக்கின்ற கூட்டம் தான் இந்தக் கூட்டம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

இந்த நாளை இன்றைக்கு நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று சொன்னால் அதிலும் ஒரு விஷயம் இருக்கிறது. இன்று ஒரு முக்கியமான நாள். இந்த நாளை நாம் மறந்துவிட முடியாது, மறந்து விடவும் கூடாது. டிமானிடைசேஷன் என்று சொல்லுகிறோமே அது அறிவிக்கப்பட்ட நாள் 2016 ஆம் ஆண்டு இதே நவம்பர் 8ஆம் நாள். இந்தியாவில் இருக்கக்கூடிய 120 கோடி மக்களையும் ஒரே நேரத்தில் முட்டாள் ஆக்கினாரே மோடி அவர்கள், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். அறிவித்தது மட்டுமல்ல அதற்கு என்ன காரணம் என்பதற்காக சில சில புது விளக்கங்களை எல்லாம் மோடி அவர்கள் தந்தார்கள். என்ன சொன்னார்?

1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில் மோடி சொன்ன விளக்கங்கள், கருப்பு பணம் ஒழியும்! ஊழல் அடியோடு ஒழிக்கப்படும்! கள்ளநோட்டு குறையும்! தீவிரவாதம் அடக்கப்படும்! ஏதோ மோடி மஸ்தான் வித்தை என்று சொல்வார்களே அதுபோல மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இன்றோடு இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில், இந்த மேடையில் இருந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கேட்கின்ற கேள்வி, இன்றைக்கு நாட்டில் கருப்பு பணம் இல்லையா? ஊழல் இல்லையா? கள்ளநோட்டு இல்லையா? தீவிரவாதம் ஒழிந்து விட்டதா? இதனால் என்ன சாதித்தார் மோடி? ஒன்றுமே கிடையாது. நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்புப் பணத்தை எல்லாம் கொண்டு வந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அவருடைய பெயரில் அவருடைய வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் நான் வழங்குவேன் என்று மோடி அறிவித்தாரா இல்லையா? இதுவரை யாருக்காவது 15 லட்சம் ரூபாய் இல்லை, 15,000 ரூபாய் இல்லை, வெறும் 15 ரூபாயாவது போடப்பட்டிருக்கிறதா? நான் கேட்கிறேன். யாராவது தைரியம் இருந்தால் சொல்லுங்கள் 15 லட்சம் ரூபாய் என் வங்கிக் கணக்கிலே மோடி போட்டிருக்கிறார் என்று, அப்படி சொன்னால் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். சரி கருப்பு பணத்தையாவது வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்து சேர்த்து கணக்கு வெளியிட்டு இருக்கிறீர்களா, பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறதா அதுவும் கிடையாது.

கிராமத்தில் ஒரு கதை சொல்வார்கள் என்ன கதை என்று கேட்டால், 365 நாள் கழித்து நான் ஒரு மலையைத் தூக்க போகிறேன் என்று ஒருவன் சொல்கிறான். அவன் சொன்னதைக் கேட்ட அந்த கிராம மக்கள் எல்லாம் உண்மை என்று நம்பி ஏமாந்து உடனடியாக அவனுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து தருகிறார்கள். அந்த ஓராண்டு முழுவதும் அவனுக்கு சாப்பாடு போடுகிறார்கள். அந்த 365 வது நாள் வருகிறது. அந்த கிராம மக்கள் அத்துனைபேரும் ஒன்று சேர்ந்து நீ சொன்னபடி 365 நாள்கள் முடிந்துவிட்டது, எப்போது இந்த மலையை தூக்க போகிறாய் என்று ஊர் மக்கள் எல்லோரும் கேட்ட நேரத்திலே அவன் சொல்லுகிறான். எல்லோரும் சேர்த்து மலையை தூக்கி என் தோல் மீது வையுங்கள் நான் சுமக்கிறேன் என்று சொன்னான். அதுபோலதான் மோடி அவர்கள் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதைப்பற்றி கவலைப்படாத வகையிலே என்ன ஆயிற்று அந்த வாக்குறுதிகள் என்று இந்திய நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

அண்மையில் மத்தியில் கப்பல் போக்குவரத்துத்துறையில் அமைச்சராக இருக்கக்கூடிய நிதின் கட்கரி ஏற்கனவே பி.ஜே.பியினுடைய அகில இந்திய தலைவராக இருந்தவர். அவர் ஒரு நிருபருக்கு பேட்டி தருகிற போது சொல்லுகிறார். இப்படி எல்லாம் வாக்குறுதிகள் தந்தீர்களே என்று நிருபர் கேட்ட போது, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாங்கள் அந்த உறுதிமொழியைத் தந்தோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தெரிந்திருந்தால் அந்த வாக்குறுதியை தந்திருக்க மாட்டோம் என்று வெளிப்படையாக வெட்கத்தை விட்டு, மானம் சூடு சொரனையெல்லாம் விட்டு விட்டு ஒரு அமைச்சர் பேட்டி தருகிறார். அவர் மட்டுமா இன்றைய அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவராக இருக்கக்கூடிய அமித்சா சொல்லவில்லையா? நாங்கள் தேர்தலுக்காக சொல்லுகிற வாக்குறுதி என்று.

இதே, மோடி என்ன சொன்னார் இனி இந்தியாவில் பசியிருக்காது, பட்டினி இருக்காது, பஞ்சம் இருக்காது என்று சொல்லவில்லையா? பஞ்சம் இருக்காது என்று சொன்னார், கருப்பு பணம் இருக்காது என்று சொன்னார், ஊழல் இருக்காது என்று சொன்னார்.

இது எல்லாமே இப்போது இந்தியாவில் இருக்கிறது! ஆனால், பிரதமர் மோடிதான் இந்தியாவிலேயே இருப்பதில்லை. வெளிநாடு வாழ் இந்தியர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வெளிநாடு வாழ் பிரதமர் என்று நாம் என்றாவது கேட்டதுண்டா? அதுதான் மோடி இவர் பிரதமராகி நான்காண்டு காலத்தில் எத்தனை முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் தெரியுமா? இன்றோடு 84 நாடுகளுக்கு! நான் புள்ளிவிவரத்தோடு சொல்கிறேன். ஆதாரத்தோடு சொல்கிறேன். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசமாட்டேன் ஆதாரத்தோடு தான் பேசுவேன்.

காரணம் நான் கலைஞருடைய மகன்.

4 ஆண்டுகளில் 84 நாடுகளுக்கு சென்றுவிட்டு வந்திருக்கிறார் பிரதமர். அந்த நாடுகளுக்கு சென்று வந்திருக்கக்கூடிய வகையில் செலவின் தொகை எவ்வளவு தெரியுமா 1484 கோடி ரூபாய். யார் வீட்டு பணம் உங்க அப்பன் வீட்டுப் பணமா? நான் கேட்கிறேன். மக்களுடைய வரிப் பணம், உலக அளவிலே அதிக வெளிநாடுகளுக்குச் சென்று இருக்கக்கூடிய பிரதமர் என்று பார்க்கின்ற பொழுது மோடி தான் முதலிடம். இதுதான் அவருடைய மிகப்பெரிய சாதனை. வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிய மோடி அவர்களை பார்த்து நான் கேட்கிறேன். பெட்ரோல் விலையையும் டீசல் விலையையும் ஏற்றியது தான் வளர்ச்சியா? காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் ஜிஎஸ்டி என்கிற அந்த சட்டத்தை எதிர்த்தீர்களே எதிர்த்துப் போராட்டம் நடத்தினீர்களே ஆனால், நீங்கள் பிரதமர் ஆனதற்குப் பிறகு இரவோடு இரவாக அந்த ஜிஎஸ்டியை நிறைவேற்றிக் கொண்டு வந்திருக்கிறீர்களே, ஏன்?

காங்கிரஸ் ஆட்சியிலே ஆதார் அட்டை தேவையில்லை என்று வாதம் செய்தீர்களே, ஆனால் அதை இன்றைக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறீர்களே ஏன்? விஜய் மல்லைய்யாவை அருண் ஜெட்லி மூலமாக தப்ப வைத்ததுதான் மோடியினுடைய சாதனை! லலித்மோடியை சுஸ்மா சுவராஜ் மூலம் காப்பாற்ற வைத்ததுதான் நம்முடைய மோடியின் மிகப் பெரிய சாதனை! நீரவ் மோடியை இன்று வரை காப்பாற்றுவதுதான் மிகப்பெரிய சாதனை!

வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்று கூறினீர்களே? நான் கேட்கிறேன், அஜீஸ் பிரேம்லி அகில இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகம். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கிறது. அந்தப் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் இந்தியாவில் தான் அதிகம் என்று ஆதாரத்தோடு கணக்கெடுத்து சொல்லியிருக்கிறார்கள். இதுதான் மோடி ஆட்சியினுடைய லட்சணம். மோடி தலைமையில் இருக்கக்கூடிய இந்த பி.ஜே.பி ஆட்சியை வீழ்த்திட நாமெல்லாம் தயாராக வேண்டும், தயாராகி விட்டோம் என்பதை எடுத்துக்காட்டத் தான் இந்தக் கூட்டம் என்பதை மீண்டும் மீண்டும் நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

அதனுடைய முன்னோட்டமாகத்தான் அதனுடைய வெளிப்பாடுதான் அண்மையிலே ஆந்திர மாநிலத்தினுடைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். இன்று அதே சந்திரபாபு நாயுடு அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சரை, முன்னாள் பிரதமர் தேவகவுடா அவர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார். நாளைய தினம் தமிழ்நாட்டுக்கு வருகிறார் சந்திரபாபு நாயுடு அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக இருக்கக்கூடிய என்னையும் சந்திக்க இருக்கிறார். அதேபோல் பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் இன்றைக்கு ஒருங்கிணைகிறார்கள் என்று சொன்னால் ஏதோ தனிப்பட்ட மோடியின் மீது இருக்கக்கூடிய தனிப்பட்ட பிரச்சனையல்ல, தனிப்பட்ட பகையல்ல, மோடி அவர்களால் இந்திய மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது, எனவேதான் அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை வீழ்த்த வேண்டும் என்று நாம் சொல்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் என்னைப் பொறுத்தவரையில் நான் குறிப்பிட விரும்புவது, மாநில உரிமையை என்றைக்கும் அண்ணா வழியிலே, தலைவர் கலைஞர் வழியிலே விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அதற்காக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றேன். அதையேதான் இங்கேயும் வழிமொழிய விரும்புகிறேன்.

நாளைய தினம் சந்திரபாபு நாயுடு அவர்கள் வருகிறபோது பேச்சுவார்த்தை நடைபெறுகின்ற நேரத்தில் நிச்சயமாக, உறுதியாக சொல்லுகிறேன் மாநில உரிமையை எந்தநிலையிலும் எப்படிப்பட்ட சோதனைகள் வேதனைகள் வந்தாலும் நாம் அந்த உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்ற செய்தியை தான் நாம் நிலைநாட்ட இருக்கிறோம். ஆகவேதான், மாநில கட்சிகள் அத்தனையும் ஒன்று சேர வேண்டும் என்ற அந்த நிலை இன்றைக்கு உருவாகி வந்துகொண்டிருக்கிறது.

காரணம் என்ன? மாநிலங்களை மதிக்காதவர் மோடி, யாருடைய ஆலோசனையும் கேட்காதவர் மோடி, நாடாளுமன்றத்திற்கு தொடர்ந்து செல்லாதவர் மோடி, நாடாளுமன்றத்தினுடைய விவாதங்களிலே பங்கேற்காதவர் மோடி, உச்சநீதிமன்றத்திலே தகராறு, சி.பி.ஐ.யுடன் பிரச்சினை, ரிசர்வ் வங்கியோடு தகராறு, அரசியல் சட்டமைப்பே மதிக்காதவர் மோடி, இந்தியா முழுவதும் இன்றைக்கு மோடியினுடைய பாசிச ஆட்சி தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், தமிழ்நாட்டில் அதிமுக என்கின்ற இந்த ஊழல் மிகுந்த இந்த ஆட்சி தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

‘திருடன் கூட திருடுகிற நேரத்தில் கொஞ்சம் பயப்படுவான் மாட்டிக்கொள்வோமோ என்று யாராவது பார்த்துவிடுவார்களோ என்று. ஆனால் எந்தப் பயமும் இல்லாமல் எந்த அச்சமும் இல்லாமல் திருடுகிற பாணி யார் தெரியுமா? எடப்பாடி பாணி! அந்த ஊழலை கண்டுபிடித்து சொன்னால் எடப்பாடியிடம் பதற்றமே இல்லை, எந்த பயமும் இல்லை, டெண்டர் விட்டதிலும், ஒப்பந்தம் விட்டதிலும் ரூ 3 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடந்திருக்கிறது. அவருடைய உறவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

உறவினர்களுக்கு தரக்கூடாது என்று நாம் ஆதாரத்தோடு எடுத்துச் சொன்னால் பதில் சொல்லவேண்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்லுகிறார்? தமிழகம் முழுவதும் எனக்கு உறவினர்கள் இருக்கிறார்கள். உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கின்றதே நீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் என்ற நிலை வந்திருக்கிறதே, டெல்லிக்குச் சென்ற நேரத்தில் அங்கே இருக்கக்கூடிய பத்திரிக்கை நிருபர்கள் இந்த விஷயத்தைப் பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடத்திலே கேட்கிறார்கள். அப்போது அவர் சொல்கிறார். மானமுள்ள முதலமைச்சராக இருந்திருந்தால் நியாயமாக என்ன சொல்லியிருக்க வேண்டும்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதை நான் ஏற்றுக்கொண்டு ராஜினாமா செய்யத் தயார் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதைச் சொல்லாமல் என்ன சொல்லுகிறார் என்று சொன்னால், புகார்கள் வரத்தான் செய்யும் அப்படிப் பார்த்தால் இந்தியாவிலேயே யாரும் பதவியில் இருக்க முடியாது என்று பதில் சொல்கிறார். இந்த நிலையிலேதான் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி தந்திருக்கிறாரே தவிர வேறல்ல!

அனைத்து ஆதாரங்களைத் திரட்டி புள்ளிவிவரங்களோடு அவருடைய உறவினர்கள் யார் யார் என்பதையெல்லாம் தெள்ளத்தெளிவாக எடுத்துச் சொல்லி தி.மு.கழகம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் தருகிறோம். வழக்கம் போல, அந்தத் துறை அதைக் கண்டும் காணாமல் இருக்கிறது. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுகிறோம், வழக்கு போடுகிறோம். சென்னை உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு தருகிறது என்றால் முகாந்திரம் இருக்கிறது. அவர் முதலமைச்சராக இருக்கிறார். அதிகாரம் அவரது கையில் இருக்கிறது, எனவே, இதை சி.பி.ஐக்கு மாற்றிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெள்ளத் தெளிவாக தீர்ப்புத் தருகிறது.

முகாந்திரம் இருக்கிறது என்று தீர்ப்பு தந்ததற்கு பிறகு முதலமைச்சராக இருக்கக்கூடிய பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும் என்று சொன்னால், பதவியை இராஜினாமா செய்து அந்த வழக்கை சந்திக்கிற நிலையை அவர் எடுத்திருக்க வேண்டும். ஆனால், என்ன செய்தார் மேல்முறையீட்டிற்கு சென்றிருக்கிறார். மேல் முறையீட்டிற்கு செல்லுகிற போது சொல்லுகிறார். என்னுடைய மடியிலே கனம் இல்லை என்கிறார். நான் கேட்கிறேன் செய்யாதுரை வீட்டில் எடுக்கப்பட்ட பணம் கனமானது இல்லையா? சேகர் ரெட்டி வீட்டில் எடுக்கப்பட்ட தங்கக் கட்டிகள் எல்லாம் கனமானது இல்லையா? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கர் வீட்டில் எடுக்கப்பட்ட 89 கோடி ரூபாய் பணம் கனமாக இல்லையா? டெண்டர் விதிகளை எல்லாம் தளர்த்தி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறீர்களே அதெல்லாம் கனமானது இல்லையா? மடியில் கனம் இருக்கின்ற காரண்த்தால் தான் இன்றைக்கு நீங்கள் அப்பீலுக்கு போயிருக்கிறீர்களே தவிர இன்றைக்கு வேறென்ன.

ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய ஒரு முதலமைச்சர் சி.பி.ஐ விசாரணையில் சிக்கியிருப்பது இதுதான் இந்தியாவில் முதன்முதல்! இதைவிட வெட்கக்கேடு தமிழ் நாட்டிற்கு வேறெதுவும் வந்து சேரப்போவதில்லை. அதுமட்டுமல்ல, துணை முதலமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர் செல்வம், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையிலே சிக்கி இருக்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரித்துறையிடம் சிக்கியிருக்கிறார். அமைச்சர்களாக இருக்கக்கூடிய வேலுமணி, தங்கமணி அவர்கள் மீது விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் இன்னும் கேட்கிறேன். உயர் நீதிமன்றத்தால் உச்ச நீதிமன்றத்தால் சி.பி.ஐயினால் வருமானவரித்துறையினால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கக்கூடிய ஒரு கிரிமினல் கேபினெட் தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. ஒரு நாள் கூட அவர்கள் பொறுப்பில் இருப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை.

கொசு எப்படி டெங்குவை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறதோ, அதேபோல கோட்டையிலே இருக்கக்கூடிய இவர்கள் ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் நிறைந்த அந்தக் கொசுக்களை விரட்டுவதற்கு மருந்து யாரிடத்தில் இருக்கிறது என்றால், உங்களிடத்தில் தான் இருக்கிறது, மறந்து விடக்கூடாது.

நீட் தேர்வா கவலையில்லை? 7-பேருக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய தூக்குதண்டனை பிரச்சனையா அதைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமில்லை. இந்தியை திணிக்கிற முயற்சியா கவலைப்படவில்லை. மதச்சார்பு நடவடிக்கையா அதைப்பற்றி நாங்கள் என்றைக்கும் கவலைப்பட மாட்டோம் என்று மூலையிலே போய் அடிமையாக உட்கார்ந்து கொண்டு மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு!

மத்திய அரசு செய்வது என்ன? எடப்பாடி அரசு திருடுவதற்கு அனுமதியைக் கொடுத்துவிட்டு அவர்கள் மாநிலத்தில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், அது தான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் கொள்ளையடிப்பதை நீங்கள் தடுக்காமல் இருந்தால் போதும், நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம், நாங்கள் மண்டியிட்டு சரணாகதியாக இருக்கத் தயார் என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, தான் இந்த இரு ஆட்சிகளையும் அகற்ற நாம் உறுதியேற்க வேண்டும்.

மதவாதத்திற்கு எதிராக ஒரு போர், அடக்குமுறைக்கு எதிராக ஒரு போர், ஆணவ நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு போர், விலைவாசிக்கு எதிராக ஒரு போர், இந்தி திணிப்புக்கு எதிராக ஒரு போர், ஊழலுக்கு எதிராக ஒரு போர், லஞ்சத்துக்கு எதிராக ஒரு போர், சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒரு போர். இப்படி தனித்தனி போர் நடத்திக் கொண்டிருப்பதை விட ஒரே ஒரு போர் பாசிச பா.ஜ.க ஆட்சிக்கும், ஊழல் நிறைந்த அ.தி.மு.க ஆட்சிக்கும் நடத்துகின்ற போர்.

டெல்லி செங்கோட்டையில் இருக்கக்கூடிய ஆட்சியையும், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய அதிமுக ஆட்சியையும் ஒரே நேரத்திலே வீழ்த்துவோம்! அந்தப் போருக்கு இந்த பெரும்புலியூர் எனப்படும் இந்த பெரம்பலூர் தொடக்கமாக இருக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நான் தொடக்கத்திலே இந்த இரண்டு மாவட்டங்களில் கழகத்தினுடைய வளர்ச்சிக்காக சிலரை அடையாளம் காட்டுகின்ற நேரத்தில் இன்னொருவரை நான் குறிப்பிட்டுச் சொல்லி இருக்க வேண்டும். அது யார் என்று கேட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்திலே பேச்சாளர் என்றால் எப்படி பேசிட வேண்டும், எந்த நயத்தோடு பேசிட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய வகையில் விளங்கிய நம்முடைய ஆருயிர் அண்ணன் வெற்றிகொண்டான் அவர்கள் நான் அவரையும் எண்ணிப் பார்க்கிறேன். அந்த வெற்றிகொண்டான் இன்றைக்கு இல்லை. அவர் இல்லை என்று சொன்னாலும் மேடைதோறும் முழங்கி இருக்கக்கூடிய முழங்கங்கள் நம்முடைய உணர்வில் கலந்து இருக்கிறது. ஆகவே அதை நாம் கையிலே ஏந்தி தொடர்ந்து போராட, பணியாற்ற உறுதி எடுக்கக்கூடிய நாளாக இந்த நாளை நீங்கள் அத்தனை பேரும் கருதிட வேண்டுமென்று கேட்டு இந்த மாபெரும் கூட்டத்தை ஒரு மாநாடு போல் நடத்திக்காட்டி இருக்கக்கூடிய அரியலூர், பெரம்பலூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் அத்துணை பேரையும் மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் நம்முடைய சிவசங்கர் அவர்கள், ராஜேந்திரன் அவர்கள், அதற்கு மேலாக நம்முடைய மத்திய முன்னாள் அமைச்சர் கொள்கை பரப்புச் செயலாளர் நம்முடைய அருமை சகோதரர் ராசா அவர்கள் அவர்களுக்கு துணை நின்றிருக்கக்கூடிய கழக நிர்வாகிகள் அத்துனை பேருக்கும் என்னுடைய சார்பிலே, தலைமைக் கழகத்தினுடைய சார்பிலே இதயபூர்வமான நன்றியை வாழ்த்துகளை பாராட்டுகளை மீண்டுமொருமுறை தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்!

நன்றி வணக்கம்!

இவ்வாறு அவர் பேசினார்.