Announcement - DetailPage - DMK
header_right
தமிகத்தில் அந்நிய முதலீடு 21% சரிவு; பல கோடி ரூபாய் வீண் செலவு… மக்களை ஏமாற்றி நாட்டை குட்டிச் சுவாராக்கி வரும் மத்திய - மாநில அரசுகளை விரட்டியடிப்போம் - கழகத் தலைவர்

பதிவு: 06 Feb 2019, 17:38:21 மணி

“தமிழகத்தில் அந்நிய முதலீடு 21% சரிவு; பல கோடி ரூபாய் வீண் செலவு செய்து இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அ.தி.மு.க அரசு நடத்தியது இதற்குத் தானா? மக்களை ஏமாற்றி நாட்டை குட்டிச் சுவாராக்கி வரும் மத்திய - மாநில அரசுகளை விரட்டியடிப்போம்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேச்சு

இன்று (06-02-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அண்ணா நகர் வடக்கு பகுதி செயலாளர் ச.பரமசிவம் அவர்களின் மகன் திருமணத்திலும், வியாசர்பாடி J.M.H திடலில் நடைபெற்ற திரு.வி.க நகர் வடக்கு பகுதிச் செயலாளர் செ. தமிழ்வேந்தன் அவர்களின் மகள் திருமணத்திலும் கலந்துகொண்டு தலைமையேற்று நடத்தி வைத்தார்.

பின்னர், கொளத்தூர் மேற்கு பகுதி 67-வது வட்டப் பகுதி பிரதிநிதி சஞ்சீவி அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு மணக்களை வாழ்த்திப் பேசினார்.

கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் முழு விவரம் பின்வருமாறு:

சீரோடும், சிறப்போடும் நடைபெற்று முடிந்திருக்கின்ற சீர்திருத்த திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தி அமர்ந்துள்ள கழகத்தின் மாவட்டச் செயலாளர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தின் சார்பு அணிகளில் இருக்கக்கூடிய நிர்வாகிகளே, மணமக்களே, மணமக்களின் பெற்றோர்களே, அவர்களின் உற்றார் உறவினர்களே, என் உயிரோடு கலந்து இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

இங்கே நடந்தேறியிருக்கின்ற திருமணம் சுயமரியாதை திருமணமாக அரங்கேறி இருக்கிறது. இந்த சுயமரியாதை திருமணத்தின் வரலாற்றை எல்லாம் நான் பல மேடைகளில் பேசியது உண்டு. அந்தத் திருமணங்கள் எவ்வாறு நடக்கும் என்பதையெல்லாம் நான் விரிவாக எடுத்துரைத்து இருக்கிறேன். வைதீக திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களுக்கு எப்படி டிமாண்ட் இருக்குமோ அதேபோல இதுபோன்ற சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்க எங்களைப் போன்றவர்களுக்கு அதிக டிமாண்ட். வைதீக முறையில் நடைபெறக்கூடிய திருமணங்கள் எப்படி நடக்கும் என நான் உங்களிடத்தில் விவரித்தால், ஸ்டாலின் திருமண விழாவில் வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தைப் பற்றி இப்படிப் பேசி விட்டாரே என சிலர் நாளைக்கே வாட்ஸ் ஆப்பில் அதையெல்லாம் சித்தரித்து, ஜோடித்து அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. நாம் மீடியாக்களையோ, பத்திரிகைகளையோ எதிர்பார்த்து அரசியல் நடத்தியது கிடையாது. தமிழ்நாட்டு மக்களை நம்பித் தான் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறோம். அப்படித்தான் இனியும் அரசியல் நடத்துவோம். அதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.

நான் மாநகராட்சி மேயராக இருந்து பணியாற்றிய காலத்தில், இந்த மேடையில் இருக்கின்ற சிலர் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போது எனக்கு பல சிறப்புகள், பெருமைகள் எல்லாம் கிடைத்திருக்கிறது. அது தனிப்பட்ட ஸ்டாலின் என்கிற மேயருக்கு கிடைத்தது அல்ல. என்னோடு உடன் இருந்து பணியாற்றிய மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். அப்படி பட்டியல் எடுத்துப் பார்த்தால், அதில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருப்பார் திரு.வி.க நகர் வடக்கு பகுதிச் செயலாளர் செ. தமிழ்வேந்தன் அவர்கள். அந்த அளவிற்கு என்னோடு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர் அவர். மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பல சிக்கல்கள், விவாதங்கள் வரும். அந்த சமயத்தில் அதனை எதிர்க்க, சதியை முறியடிக்க நான் யாரைப் பயன்படுத்துவேன் என்றால் செ. தமிழ்வேந்தனை தான். அந்தளவிற்கு மிகச்சிறப்பாக தன்னுடைய கடமையை நிறைவேற்றியவர் அவர். எதையும் அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக எடுத்து வைக்கக்கூடியவர். அவருடைய இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திருமணம் இது. இங்கு நான் அரசியல் பேசாமல் போய் விட்டால், நீங்கள் என்னை மன்னிக்கிறீர்களோ இல்லையோ, தமிழ்வேந்தன் மன்னிக்க மாட்டார். ஏனென்றால், தமிழகத்தில் மிகமோசமானதொரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஊழல் ஆட்சி அண்மையில் கூட இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். அவர்கள் யார் படத்தை தன்னுடைய சட்டப்பையில் வைத்து ஊரை ஏமாற்றி வருகிறார்களோ அவர் கூட முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார்கள். அம்மையார் ஜெயலலிதா முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை இரண்டு நாட்கள் நடத்திய பின்னர், 2.42 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டார்கள்.

இதனால் பல தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகப் போகிறது, தமிழ்நாட்டில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கப்போகிறது என்றெல்லாம் உறுதிமொழி கொடுத்தார்கள். இதுவரைக்கும் அது நடந்ததா என்றால் இல்லை. ஜெயலலிதா மறைந்ததற்குப் பிறகு இவர்களும் ஒரு மாநாடு என்கிற நாடகத்தை நடத்தினார்கள். முதல் மாநாடு நடத்திய போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்னவென்றே தெரியாத நிலையில், இதுவரை எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது? என்பது குறித்த புள்ளி விவரங்களுடன் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென நான் தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வலியுறுத்தினேன். ஆனால் இதுவரையில் வைக்கவில்லை.

ஜெயலலிதா எப்படி முதல் மாநாட்டை ஆடம்பரமாக செலவு செய்து நடத்தினாரோ, அதைவிட அதிக செலவு செய்து வீண் விளம்பரம் செய்து இரண்டாவது மாநாட்டை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. அந்த மாநாட்டுக்கு ரோடுகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு கோட் சூட் அணிவித்து கட்டாயப்படுத்தி வரவழைத்து இருக்கிறார். வங்கிகளில் கடன் வாங்கி நோட்டீஸ் பெற்ற கம்பெனிகளின் முதலாளிகளும் அதில் அடக்கம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. சட்டமன்றத்தை கூட்டட்டும், ஆதாரத்தோடு அதனைச் சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். அம்மையாரை விட நாங்கள் அதிக முதலீடு நாங்கள் வாங்கி விட்டோம் எனச் சொல்லி, மூன்றரை இலட்சம் கோடி முதலீடு வாங்கியிருக்கிறோம் என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது எடப்பாடி அரசு.

நேற்றைக்கு மத்திய அரசு ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு பத்திரிகைகளில் நீங்கள் அதனை படித்து இருப்பீர்கள். அது என்னவென்றால், அந்திய முதலீடுகளைப் பொறுத்த வரைக்கும் தமிழகம் 21 சதவீதம் குறைவாகப் போய்விட்டது என்ற அபாயகரமான செய்தி. இதுதான் உங்கள் ஆட்சியின் லட்சணமா? தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். திட்டங்கள் என்ற பெயரில் நாடகம் நடத்துவதோடு நாட்டைக் குட்டிச் சுவராக்கும் முயற்சியிலே இவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை நீங்கள் மனதிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 12,617. அங்கெல்லாம் நம்முடைய கட்சிகளின் நிர்வாகிகள் சென்று ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அங்கு மக்கள் தங்களுடைய குறைகளை எங்களிடத்திலே முன்வைப்பதை எல்லாம் நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி, கடைசியில் சசிகலாவுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதை மக்கள் இன்றைக்கு நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியின் அராஜக ஆட்சியின் அவலங்களையும், மக்கள் விரோத பாசிச பாஜக ஆட்சியின் அவலங்களையும் நம் கழகத்தின் தோழர்களை விட மக்கள் நன்கு உணர்ந்து புரிந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு ஆட்சிகளையும் அகற்ற வேண்டுமென்பதில் பொதுமக்கள் தான் உறுதியோடு இருக்கிறார்கள்.

ஆனால், என்னைப் பார்த்து எடப்பாடி கேட்கிறார், இதுவரை ஸ்டாலின் கிராமங்களுக்குச் சென்றது உண்டா? ஏன் புதிதாக கிராமத்திற்குச் செல்கிறார் எனக் கேட்கிறார். நான் போகாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் எல்லாம் அதிக கொடியேற்றிய ஒரு தலைவர் என்றால், அது நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான். அதற்கடுத்து யார் என்று கேட்டீர்கள் என்றால், நான் நெஞ்சு நிமிர்த்து சொல்வேன். அவருடைய மகனான நான் தான் இருக்கிறேன் என்று. என்னைப் பார்த்து எடப்பாடி சொல்கிறார் நான் கிராமத்துக்கு சென்று பஞ்சாயத்து செய்கிறேன் என்று, ஆனால், நீங்கள் கமிஷனுக்கு போய் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறீர்கள். இதுதான் உங்களுடய நிலைமை.

ஆகவே, இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற நிலைகள் எல்லாம் மக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அந்தத் தேர்தலை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது. நிச்சயம் வந்தே தீரும். அந்தத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே, இந்த மதவாதம் பிடித்த பாஜக அரசுக்கும், கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன் அ.தி.மு.க அரசுக்கும் தக்க பாடம் புகட்டுகிற வகையில் வரக்கூடிய தேர்தலை நீங்கள் பயன்படுத்திக்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் கூட்டணிக்கும் வெற்றியைத் தேடித்தர வேண்டுமென உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு, மணக்கோலம் பூண்டிருக்கின்ற மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.