Announcement - DetailPage - DMK
header_right
newimg
இது நிஜ பட்ஜெட் அல்ல. நிழல் பட்ஜெட்! ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயன் தராத உதவாக்கரை பட்ஜெட்!!” - கழகத் தலைவர்

பதிவு: 09 Feb 2019, 17:53:18 மணி

“எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் இரு நிதி நிலை அறிக்கைகளையும் பார்த்தால், “திரும்பத் திரும்ப” என்ற காமெடியை நினைவுபடுத்துகிறது; இது நிஜ பட்ஜெட் அல்ல. நிழல் பட்ஜெட்! ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயன் தராத உதவாக்கரை பட்ஜெட்!!”

- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை

“பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கி, கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வறுமையை ஒழிப்பதற்கான கடினமான சவாலை இந்த அரசு எதிர்கொண்டுள்ளது” என்று இமயமலை ஏறத் தயாராகிக் கொண்டிருப்பதைப் போல முதலில் கூறியிருக்கும் நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான மாண்புமிகு திரு ஓ. பன்னீர் செல்வம் அதற்கான எவ்வித நிதி ஒதுக்கீடுகளையும் நிதிநிலை அறிக்கையில் செய்யாமல், ஒப்பனையாகத் தொடங்கி உற்சாகமில்லாமல் படித்து விடைபெற்றிருக்கிறார். வெற்று உள்ளங்கையை முழங்கையால் கடைந்து, அப்பாவுக்கு, அண்ணனுக்கு, அக்காவுக்கு, தம்பிக்கு உணவு ஊட்டுவதைப் போல குழந்தைக்கு விளையாட்டுக் காட்டும் “அம்மா”வைப் போல ஒரு சில திட்டங்களைச் சொல்லி நிதி ஒதுக்கீடு என்ற பம்மாத்து செய்திருக்கிறார் நிதியமைச்சர்.

இளைஞர்களின் மருத்துவக் கனவை சிதைத்துள்ள நீட் தேர்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அனிதாவின் தற்கொலை அ.தி.மு.க அரசை மன்னிக்காது. விவசாயிகளுக்கு நெல் ஆதார விலையாக வெறும் 50 ரூபாய் கொடுத்திருப்பது ஒரு கண்துடைப்பு அறிவிப்பு. ஆனால், கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் ஆதாய விலை உயர்வு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘விவசாயக் கடன் தள்ளுபடி’ செய்வது குறித்த எந்த முன்னேற்றமும் அதில் தெரியாமல், விவசாயிகளின் முதுகில் மீண்டும் குத்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு. வறட்சி, மாநிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கின்ற கட்டத்தில் அவற்றை சமாளிக்க எவ்வித திட்டங்களும் இல்லை. ஏன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களிலும், 110 விதிகளிலும் அறிவிக்கப்பட்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களுக்கே நிதி ஒதுக்கீட்டை காணவே காணோம். கஜா புயலுக்கு மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்கவில்லை. அதுபற்றி நிதிநிலை அறிக்கையில் வாயே திறக்கவில்லை. அதே சமயத்தில் அறிவிக்கப்பட்டு நான்கு வருடம் கழித்து, நிதி ஒதுக்கப்படாமலேயே எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடத்தி நாடகம் போட்டுள்ளதற்கு பிரதமரை பாராட்டியுள்ள நிதிநிலை அறிக்கையில், உள்ளாட்சி நிதி, மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, ஜி.எஸ்.டி. இழப்பு உள்ளிட்டவற்றிற்கு மாநிலத்திற்கு தர வேண்டிய 14, 500 கோடி ரூபாயை இதுவரை மத்திய அரசு தராமல் இருப்பதற்கு ஒரு சிறிய கண்டனத்தைக் கூட தெரிவிக்க பயந்து நடுங்கியிருக்கிறார் திரு ஓ. பன்னீர்செல்வம். பா.ஜ.கவுடனான கூட்டணிப் பேச்சு அந்த அளவுக்கு அவரை பாடாய்ப் படுத்தியிருக்கிறது என்பது தெரிகிறது.

“பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த முடியாது” “ஊதிய முரண்பாடுகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது” “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது” என்று துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்தப் பிறகு, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான கமிட்டிகள் அளித்த அறிக்கைகள் அரசின் பரிசீலனையில் இருக்கிறது என்று இப்போது துணை முதலமைச்சர் நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பது ஏமாற்று வேலை மட்டுமல்ல - முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக்குள் உள்ள கருத்து வேறுபாட்டை காட்சிப் பொருளாக்கியிருக்கிறது.

ஸ்காட்லான்ட் யார்டுக்கு இணையானது தமிழக காவல்துறை. முதலமைச்சர் தனது துறையின் கீழ் உள்ள லட்சக்கணக்கான காவல்துறையினரை பலவீனப்படுத்திவிட்டார் என்பதை மறைமுகமாக எடுத்துக்காட்டும் வகையில் “கண்காணிப்பு கேமிராக்களை நிறுவியதன் மூலம் குற்றங்கள் நடைபெறுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்று நிதி நிலை அறிக்கையில் திரு ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பதே “அ.தி.மு.க ஆட்சி காவல்துறையைச் சீரழித்து விட்டது” என்பதற்கு அடையாளச் சின்னமாக இருக்கிறது.

வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை - எல்லாவற்றிற்கும் மேலாக எடப்பாடி திரு பழனிசாமியின் ஆட்சியில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 64 கோடி ரூபாய் அதிகக் கடன் வாங்கி நிதி மேலாண்மையை நிலைகுலைய வைத்து ஒரு “நிதி எமெர்ஜென்சி” ஏற்படுத்தி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 25 வருடங்களுக்கு பின்னால் இழுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். நிதி மேலாண்மையில் படு தோல்வி அடைந்து “திவாலான” கம்பெனி போல் தத்தளித்து நிற்கிறது இந்த அரசு. 2017-18 மற்றும் 2018-19 நிதி நிலை அறிக்கைகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாகும் என்ற அறிவித்த அரசு, இப்போது 8.16 சதவீதம்தான் பொருளாதார வளர்ச்சி என்று கூறி- எடப்பாடி திரு பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கி விட்டது என்பதை துணை முதலமைச்சரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, எடப்பாடி திரு பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் இரு நிதி நிலை அறிக்கைகளையும் பார்த்தால், “திரும்பத் திரும்ப” என்ற காமெடியை நினைவுபடுத்துவது போல் பல அறிவிப்புகளுக்கு “திரும்ப திரும்ப” நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை செலவழிக்கப்பட்டுள்ளதா என்பது நிதி நிலை அறிக்கையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இது நிஜ பட்ஜெட் அல்ல. நிழல் பட்ஜெட்! ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பயன் தராத உதவாக்கரை பட்ஜெட்!!