New - DetailPage - DMK
header_right
கழகத் தலைவர் அவர்கள், இன்று (03.04.2021) சென்னையில் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மதுரவாயல், விருகம்பாக்கம், தியாகராயநகர், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பதிவு: 04 Apr 2021, 11:56:29 மணி

கழகத் தலைவர் அவர்கள், இன்று (03.04.2021) சென்னையில் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மதுரவாயல், விருகம்பாக்கம், தியாகராயநகர், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அதுபோது கழகத் தலைவர் அவர்கள் பொதுமக்களிடையே ஆற்றிய உரைகளின் தொகுப்பு பின்வருமாறு:
சோழிங்கநல்லூர்
கடந்த 20 நாட்களாக தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் நான் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு 55 கூட்டங்களில் பேசியிருக்கிறேன். மாலையில் புதுச்சேரியில் 56 ஆவது கூட்டத்தில் பேசினேன். இந்த சோழிங்கநல்லூருக்கு 57-வது கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்.
நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் தான் இதோ உங்கள் முன் இருகரம் கூப்பி வாக்குகளை கேட்டு நிற்கின்ற நம்முடைய வேட்பாளர் அரவிந்த் ரமேஷ். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
கடந்த முறை உங்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சியில் வரிசையிலிருந்து, உங்களுக்காகப் பல பணிகளை சட்டமன்றத்தில் குறிப்பிட்டுச் சொல்லி அவர் ஆற்றிய பணிகளை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
சட்டமன்றத்தில் அவர் எடுத்து வைத்த உரைகள், இந்த தொகுதி மக்களுடைய கோரிக்கைகள், முன்னேற்றங்கள் பற்றியெல்லாம் அவர் பேசிய காட்சிகளை நானும் சட்டமன்றத்தில் உட்கார்ந்து பார்த்தவன், ரசித்தவன்.
எனவே சோழிங்கநல்லூர் தொகுதி ஒரு நல்ல சட்டமன்ற உறுப்பினரைப் பெற்றிருக்கிறது என்று நான் அவரை பலமுறை பாராட்டி இருக்கிறேன், வாழ்த்தி இருக்கிறேன். அதேபோல அவர் உங்களோடு இரண்டறக் கலந்து இருப்பவர்.
2017ல் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், நீராதாரத்தை அடிப்படையாக வைத்து குளங்கள், ஏரிகள் எல்லாம் தூர்வார வேண்டும் என்று சட்டமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்து அலுத்துப் போய்விட்டது. அவர்கள் செய்கிறார்களோ இல்லையோ நாம் செய்ய வேண்டும். அதில் குறிப்பாக ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் நம்முடைய கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த பணியைச் செய்ய வேண்டும் என்று நான் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.
அந்த வேண்டுகோளை ஏற்று, அதிகமான இடங்களில் அந்தப் பணியைச் செய்து முடித்தவர் தான் இங்கே இருக்கும் நம்முடைய வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் அவர்கள்.
இந்தத் தொகுதியில் 6 இடங்களில் அந்தப் பணியைச் செய்து முடித்திருக்கிறார். 1. ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள மூட்டைக்காரன் சாவடிக் குளம், 2. ஈசிஆரில் இருக்கும் ஈஞ்சம்பாக்கம் விநாயகர் கோயில் குளம், 3. ஜல்லன்டையான்பேட்டை ஜெயச்சந்திரா நகர் குளம், 4.உத்தண்டி குளம், 5.மடிப்பாக்கம் குளம், 6.கல்லுக்குட்டை குளம்.
இவற்றை அவருடைய சொந்த செலவில் செய்து முடித்திருக்கிறார். அந்தப் பணியை என்னுடைய வேண்டுகோளை ஏற்றுச் செய்த அவருக்குத் தலைவர் என்கிற முறையில் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதே போல எத்தனையோ பணிகள் இந்தத் தொகுதியில் மாநகராட்சி சார்பில் நிறைவேற்ற வேண்டிய பணிகளாக இருந்தாலும், அரசின் சார்பில் நிறைவேற்ற வேண்டிய பணிகளாக இருந்தாலும், ஆளுங்கட்சி ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும், அமைச்சர்கள் போதிய அளவிற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றாலும் அவர் மாநகராட்சி அதிகாரிகள் இடத்தில் அரசு அதிகாரிகள் இடத்தில் போராடி வாதாடி எத்தனையோ பணிகளை இந்த தொகுதிக்கு அவர் செய்து முடித்திருக்கிறார்.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போதே இவ்வளவு செய்து இருக்கிறார் என்றால் இப்போது நாம் ஆளுங்கட்சியாக வரப் போகிறோம். அவ்வாறு வந்த பிறகு அவர் எப்படி எல்லாம் செய்வார். அதை விடப் பத்து மடங்கு அதிகம் நிச்சயமாக உறுதியாக செய்வார். அவர் செய்யாவிட்டாலும் நான் விடமாட்டேன். எனவே அதை செய்வதற்கு உறுதுணையாக நீங்கள் எல்லாம் ஆதரவு தந்து அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
அது மட்டுமல்ல கொரோனா என்ற கொடிய தொற்றுநோய் வந்த போது அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை, எதிர்க்கட்சியாக இருந்த திமுக செய்தது. நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், இளைஞரணி, மகளிரணி அமைப்புகளில் இருப்பவர்கள், கழக முன்னோடிகள் எல்லாம் களத்தில் நின்றார்கள். ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு காய்கறிகள், மளிகைப் பொருட்கள், சமைத்த உணவு, பிற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு மருந்துகள் என தேவையானவற்றை வீடுகளுக்குக் கொண்டு போய்க் கொடுத்து வந்தனர். அந்த பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு கட்சிக்குப் பெருமை தேடித்தந்தவர்தான், இங்கு நிற்கின்ற வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் அவர்கள். அவருக்கே இடையில் கொரோனா தொற்று ஏற்பட்டு, தற்போது குணமடைந்து வந்திருக்கிறார். அப்படி உயிரையே பணயம் வைத்து மக்கள் பணியாற்றுபவன்தான் திமுககாரன் என்பதற்கு உதாரணமானவர் அரவிந்த் ரமேஷ். அப்படிப்பட்ட சிறந்த வேட்பாளரான அவருக்கு, நீங்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
மாநகராட்சி எல்லைக்குள் டோல்கேட் இருக்கக் கூடாது என வலியுறுத்தி திமுக சார்பில் பெரிய போராட்டத்தையே நடத்தினோம். இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநகராட்சி எல்லைகளுக்குள் இருக்கும் டோல்கேட்டுகள் அகற்றப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். அதன்படி நிறைவேற்றுவோம்.
இந்த சோழிங்கநல்லூர் தொகுதியில், தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் டைடல் பார்க் கொண்டு வந்தார். இது ஐடி பகுதியாக வளர்ச்சியடைந்தது. நான் தொழில்துறை அமைச்சராக இருந்த போது பல தொழில் நிறுவனங்களைக் கொண்டு வந்தேன். ஆனால், கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. பல விருதுகளை வாங்கி இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வார். கமிஷன்- கரப்சன் – கலெக்சனுக்கு வேண்டுமானால் அவர் நம்பர் ஒன் என்று விருது வாங்கலாம். இரண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி உள்ளார்கள். அதில் வந்த முதலீடு, வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு, மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் பலமுறை கேட்டேன். அதை வெளியிடவில்லை.
எனவே, தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி பெற, தமிழகத்தின் சுயமரியாதை காப்பாற்றப்பட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரிய அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
வேளச்சேரி
இந்த திருவான்மியூர் வடக்கு மாடவீதிக்கு நான் ஒன்றும் புதிதல்ல. எனக்கு 20 வயது இருந்தபோது 1973-ஆம் ஆண்டு இதே திருவான்மியூர் மாடவீதியில் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பின் சார்பில் அறிஞர் அண்ணாவின் சிலையை அமைத்தோம். அந்த இளைஞர் தி.மு.க. அமைப்பின் சார்பில் அண்ணா சிலை அமைப்பதற்கு ஒரு அறக்கட்டளையை அமைத்தோம். அந்த அறக்கட்டளைக்கு நான்தான் தலைவர். அதில் உறுப்பினராக இருந்த பெயர்களை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். லட்சுமணன், கோதண்டம், கபிலனுடைய அப்பா துரை சண்முகம். நம்முடைய தலைவரை அழைத்து சிலையைத் திறந்து வைத்தோம். அந்த கல்வெட்டு இப்போதும் இருக்கிறது. எனவே நான் வளர்வதற்கு, என்னை இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டுவதற்குக் காரணமாக இருந்த ஊர் இந்த திருவான்மியூர். அந்த திருவான்மியூர் பகுதிக்கு வந்திருக்கிறேன்.
வருகின்ற ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் ஹசன் மௌலானா அவர்கள், அவர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய தந்தை தான் இதோ இங்கு நின்று கொண்டிருக்கும் ஆருன். அவருடைய தந்தையார் என்மேல் அளவுகடந்த அன்பு கொண்டவர். அவர் கட்சிக்கு அப்பாற்பட்டு என்னிடத்தில் அன்பு செலுத்துபவர். கட்சி பாகுபாடு பார்க்க மாட்டார். அரசியல் பார்க்க மாட்டார். என்னுடைய வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டவர். அதேபோல தலைவர் கலைஞர் இடத்திலும் அன்பு கொண்டவர். எனவே அப்படிப்பட்ட அவர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கிக் கொண்டிருப்பவர். அவருடைய மகன் ஹசன் மௌலானா அவர்கள் தான் இன்றைக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அதற்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.
வேளச்சேரிக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. அது உங்களுக்குத் தெரியும். நான் மேயராக இருந்த வரையில் இந்த வேளச்சேரியில் தான் இருந்தேன். நான் இரண்டு முறை மேயராக இருந்தேன்.
நான் 1996-இல் முதல் முறை மேயருக்கு போட்டி போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் நான் தான். இப்போது மேயர்கள் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நான் 1996-இலிருந்து 2001 வரைக்கும் 5 வருடம் இருந்தேன்.
அதற்கு பிறகு 2001-இல் மீண்டும் தேர்தல் வந்தது. நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் கூட்டணி கட்சி தலைவர்கள், நீங்கள் ஐந்து வருடம் சிறப்பாக செய்திருக்கிறீர்கள். நீங்களே தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சொல்லி கட்டாயப்படுத்தி என்னை நிற்க வைத்தார்கள். அப்போது அ.தி.மு.க. ஆட்சி. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்.
என்னை தோற்கடிப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள். அம்மையார் ஜெயலலிதா அவர்களே நேரடியாக அதில் ஈடுபட்டார்.
ஒழுங்காக தேர்தல் நடந்திருந்தால் நான் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பேன். அவர்களது அராஜகத்தையும் மீறி 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.
முதல் முறை 5 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய காரணத்தினால் தான் இரண்டாவது முறை என்னை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். எனவே அந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் நான் பணியாற்றி இருக்கிறேன்.
இப்போதும் சொல்கிறேன், இந்த தேர்தலில் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அந்த வெற்றியை பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதைத் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம்.
அந்த உறுதிமொழிகள் வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் கை சின்னத்தில் ஆதரித்து நம்முடைய ஹஸன் மௌலானா அவர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மதுரவாயல்
மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்வதற்காக வந்திருக்கிறேன்.
இன்றைக்கு காரம்பாக்கம் கணபதி அவர்களை எதிர்த்து இந்த தொகுதியில் ஒருவர் போட்டியிடுகிறார். அவர் அமைச்சராகவும் இருக்கிறார். அவரால் இந்த தொகுதிக்கு ஏதாவது பயன் உண்டா? தொகுதிக்கே வருவது இல்லை. ஆனால் இப்போது தேர்தல் வரும் காரணத்தினால் வருகிறார்.
இந்த தொகுதி முழுவதும் குண்டும், குழியுமாக சாலைகள் இருக்கிறது. அதை என்றைக்காவது கண்டிருக்கிறாரா? அப்படிப்பட்டவரை நீங்களெல்லாம் புறக்கணிக்க வேண்டுமா? வேண்டாமா?
மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் - 1,815 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 கிலோ மீட்டர் அளவிற்கு அமையும் அந்த பாலம், இந்தியாவிலேயே மிக நீண்ட பறக்கும் சாலை. ஆனால் அந்த சாலை இப்போது என்ன நிலையில் இருக்கிறது? நாம் மத்தியில் ஆட்சியில் கூட்டணியில் இருந்தபோது அதற்காகப் போராடி வாதாடி அந்த பறக்கும் சாலை திட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுகிற முயற்சியில் இறங்கினோம். ஆனால் நம்முடைய ஆட்சி போன காரணத்தினால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்றைக்கு அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
அண்மையில் அதற்காக நம்முடைய மா.சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நம்முடைய எம்.பி.க்கள் – எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் துரிதப்படுத்தி வேகமாக அந்தப் பறக்கும் சாலைத் திட்டத்தை முழுமை பெற எல்லாவித முயற்சிகளிலும் இறங்குவோம் என உறுதியளிக்கிறேன்.
ஏதோ நம்முடைய கணபதி அவர்கள் வெற்றி பெற வேண்டும், நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மட்டும் நடக்கின்ற தேர்தல் அல்ல.
இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய தன் மானம் காப்பாற்றப்பட வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்க வேண்டும். அதற்காக நடக்கின்ற தேர்தல் தான் இந்த தேர்தல்.
நம்முடைய தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகளை வழங்கி உள்ளோம். அதில் குறிப்பாக காவல்துறையினருக்காக, அனைத்துக் காவலர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பணியின்போது காயமடையும் காவலர்களுக்கு இலவச மருத்துவச் சிகிச்சை வழங்குவதுடன், இழப்பீட்டுத் தொகை உயர்த்தி வழங்கப்படும். உயிர் நீத்தவர்கள் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் ஆறுதல் தொகை வழங்கப்படும்.
மீண்டும் கழக அரசு அமைந்ததும், போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு ஒரு கால வரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
காவலர் குறைகளைக் கேட்டறிந்து, பரிசீலித்து அவற்றைச் சரி செய்வதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் குறை தீர்க்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும்.
காவலர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறை ரீதியான சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் உரிய காலத்தில் பதவி உயர்வுகள் பெறவும் வழி வகுக்கப்படும்.
காவலர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படும். கருணை அடிப்படையிலான பணியிடங்கள் கால தாமதமின்றி வழங்கப்படும்.
காவலர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப் படி, இடர்காலப் படி உள்ளிட்ட சலுகைகள் உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாம் நிலைக் காவலர்களாகப் பணியில் சேருபவர்களும் ஏழு ஆண்டுகள் முதல்நிலைக் காவலராகப் பணிபுரிந்தவர்களும், பத்து ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், இருபது ஆண்டுகளில் எஸ்.எஸ்.ஐ என பதவி உயர்வும் வழங்கப்படும்.
இதுபோன்ற 505 உறுதிமொழிகளைச் சொல்லி இருக்கிறோம். அந்த உறுதி மொழிகள் அனைத்தும் நிச்சயமாக உறுதியாக நிறைவேற்றப்படும்.
எனவே அந்த உறுதிமொழிகள் அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நம்முடைய காரம்பாக்கம் கணபதி அவர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
விருகம்பாக்கம்
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பிரபாகர் ராஜா அவர்கள். நம்முடைய கழக வேட்பாளர்களில் மிகக் குறைந்த வயதுடைய வேட்பாளர். 35 வயதானவர். அதாவது இளைஞர்களுக்கு எவ்வாறு திராவிட முன்னேற்ற கழகம் முன்னுரிமை தரும் என்பதற்கு அடையாளமாக, எடுத்துக் காட்டாக இந்த விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜா அவர்கள் உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
கோயம்பேடு மார்க்கெட்டை உருவாக்கி தந்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அது ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்கெட். அங்கிருக்கும் பேருந்து நிலையத்தை அமைத்து கொடுத்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
இவை அனைத்தையும் தாண்டி பெருமையாகச் சொல்ல வேண்டுமென்றால் வணிகர்களுக்கு என்றைக்கும் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான். எனவே அவர்களுக்கென்று தனி அமைப்பை தனது ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதுமட்டுமல்ல வருடத்திற்கு ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னர், தலைவர் கலைஞர் அவர்கள், தான் நினைத்ததை, தான் எண்ணியதை, தான் விரும்பியதை மட்டும் அந்த பட்ஜெட்டில் சேர்க்க மாட்டார்.
அனைத்துத் தரப்பு மக்களுடைய உணர்வுகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக விவசாயிகளை, நெசவாளர்களை, தொழிலதிபர்களை, சிறு - குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த அதிபர்களை, வணிக பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவது உண்டு.
எனவே ஒவ்வொரு ஆண்டும் அவர்களை அழைத்து பேசி எந்த பொருளுக்கு வரிபோடலாம், எதற்கு வரியை நீக்கலாம், நிதி ஆதாரம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் தெரிந்துகொண்டுதான் தலைவர் கலைஞர் அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்வார்.
ஆனால் இந்த ஆட்சியில் அது பற்றி கண்டுகொள்வதே இல்லை. அண்மையில் நம்முடைய மாவட்ட கழகத்தின் சார்பில் பட்டா வழங்க கோரி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். அதைத் தேர்தல் அறிக்கையிலும் சொல்லி இருக்கிறோம். ஆட்சேபணை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு நிச்சயமாக நமது ஆட்சிக் காலத்தில் பட்டா வழங்கப்படும்.
எனவே அனைத்து தரப்பு மக்களின் உரிமையை மீட்க நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்க, சுயமரியாதையைக் காக்க, நம்முடைய விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் தம்பி பிரபாகர் ராஜா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரிய அளவிலான வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
தியாகராயநகர்
தியாகராயநகர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ஜெ.கருணாநிதி அவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மறைந்த நம்முடைய தியாகச் செம்மல் - செயல் வீரர் - மாவட்டச் செயலாளர் - மாவட்டச் செயலாளர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய என்னுடைய இனிய நண்பர் ஜெ.அன்பழகன் அவர்களுடைய அருமைத் தம்பிதான் ஜெ.கருணாநிதி.
அண்ணன் தம்பி அன்பழகன். தம்பி பெயர் கருணாநிதி. இந்த பெயர்களை வைத்தது அவருடைய அப்பா மறைந்த பழக்கடை ஜெயராமன் அவர்கள்.
ஓராண்டுகாலம் அவரோடு நான் மிசாவில் இருந்தவன். கொடுமையான கஷ்டங்களை, தடியடிகளை நாங்கள் தாங்கியவர்கள்.
தலைவர் கலைஞர் இடத்தில் உரிமையோடு, தலைவரிடத்தில் ‘நீ – வா‘ என்று பேசுக்கூடியவர் ஜெயராமன் அவர்கள் மட்டும்தான். அவ்வளவு உரிமையாக பேசுவார். என்னை ‘வாடா – போடா‘ என்றுதான் பேசுவார். அந்த அளவிற்கு என்னிடத்தில் உரிமையை வைத்திருந்தார். என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்.
அவர் இந்த தியாகராயநகர் பகுதிக்கு மட்டுமல்ல, சென்னைக்கே பெருமை தேடித்தந்தார். கலைஞரிடத்தில் மிகவும் அன்பாகப் பண்பாகப் பாசத்தோடு பழகுபவர்.
அவர் மறைந்த பிறகு, அவருடைய அருமை மகனாக நம்முடைய அன்பழகன் அவர்கள் உருவானார். அவர் சட்டமன்ற உறுப்பினராக - மாவட்டச் செயலாளராக இருந்து பணியாற்றினார்.
அவர் நம்மையெல்லாம் விட்டு மறைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு மறைவாக இருந்து விட்டது. காரணம் கொரோனா வந்தபோது எல்லோரும் ஜாக்கிரதையாக இருந்தோம். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த காரணத்தினால் அவரை காப்பாற்ற முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தோம். மருத்துவமனையில் அனுமதித்தோம். வெளிநாட்டில் இருந்து மருந்துகளை வரவழைத்தோம். காப்பாற்றிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் முடியாமல் போய் விட்டது. அது உள்ளபடியே இன்றைக்கும் வேதனையாக இருக்கிறது.
எனவே அவர் விட்டுச் சென்றிருக்கும் பணிகளை இந்த தொகுதியில் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவருடைய தம்பி ஜெ.கருணாநிதி அவர்களை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். இதற்கு மேல் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இதே சென்னையில் நான் இரண்டுமுறை மேயராக இருந்து இந்த சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற வேண்டும் என்று பாடுபட்டு அதில் ஓரளவிற்கு வெற்றி கண்டேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
ஆனால் இன்றைக்கு அந்த சிங்கார சென்னையைச் சீரழிந்த சென்னையாக இந்த அரசு மாற்றி விட்டது.
நம்முடைய தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைச் சொல்லி இருக்கிறோம். சென்னைக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வரப் போகிறோம் என்பதை அதில் கூறியுள்ளோம். எனவே சீரழிந்து இருக்கும் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற, உங்களது அருமையான வாக்குகளை ஜெ.கருணாநிதி அவர்களுக்கு உதயசூரியனில் அளித்து, அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
ஆயிரம் விளக்கு
வரும் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழகத்தின் வேட்பாளர் டாக்டர் எழிலன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்துச் சிறப்பான வெற்றியைத் தேடித்தர வேண்டும். அதற்காகத்தான் உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்தாலும், இந்த ஆயிரம் விளக்கு தொகுதிக்கு வரும்போது எனக்கு ஒரு வேகம், புத்துணர்ச்சி வந்து விடும். அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்த தொகுதியில் எனக்குத் தெரியாத தெருக்களே இருக்காது. என்னுடைய கால்படாத வீடுகளே இருக்காது. எனக்குத் தெரியாத நம்முடைய கழகத் தோழர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த தொகுதிக்கும் எனக்கும் என்ன உறவு என்பது உங்களுக்குத் தெரியும். முதன்முதலில் என்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த தொகுதிதான் இந்த ஆயிரம் விளக்கு தொகுதி.
எனவே அப்படிப்பட்ட தொகுதியில் நம்முடைய டாக்டர் எழிலன் அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
நான் இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக மட்டுமல்ல, இந்த மாநகரத்திற்கு இரண்டு முறை மேயராக இருந்து என்னென்ன பணிகளை ஆற்றினேன் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த மாநகராட்சியில் பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்தினேன், பள்ளிகளில் கணினி பயிற்சியைக் கொண்டுவந்தேன், பூங்காக்கள் கொண்டு வந்தேன், தெருக்களை சிமெண்ட் சாலைகளாக மாற்றினேன், சோடியம் விளக்குகளைக் கொண்டு வந்தேன்.
அதுமட்டுமல்ல போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 10 மேம்பாலங்கள் கட்டினேன். இவ்வாறு பல பணிகளைச் செய்திருக்கிறேன். எனவே அந்த உரிமையோடுதான் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
எனவே நான் மீண்டும் சொல்கிறேன். என்னதான் நான் தி.மு.க.வின் தலைவராக இருந்தாலும், என்னதான் தமிழ்நாட்டைச் சுற்றி விட்டு வந்தாலும் இதுதான் என்னுடைய சொந்தத் தொகுதி. நான் உங்களுக்குச் செல்லப்பிள்ளை என்பது நன்றாகத் தெரியும். எனவே அந்த உணர்வோடு உங்களிடத்தில் வாக்கு கேட்கிறேன். எனவே டாக்டர் எழிலனை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார்.