New - DetailPage - DMK
header_right
“பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்து என்ன செய்தோம் என்பதைக் கூறி பரப்புரை செய்ய முடியாத அ.தி.மு.க.வினர், தி.மு.க.வைத் திட்டியும், விமர்சித்தும் கொடுத்துள்ள விளம்பரங்களை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்"

பதிவு: 04 Apr 2021, 15:13:27 மணி

“பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்து என்ன செய்தோம் என்பதைக் கூறி பரப்புரை செய்ய முடியாத அ.தி.மு.க.வினர், தி.மு.க.வைத் திட்டியும், விமர்சித்தும் கொடுத்துள்ள விளம்பரங்களை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள்"
- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.
இன்று (04-04-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, சென்னையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு வருமாறு:
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி
சட்டமன்ற பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய கழகத்தின் சார்பில் போட்டியிடும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை நீங்களெல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமென்று கேட்க வந்திருக்கிறேன்.
தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கு நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இப்போது என் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்றால், நான் முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நின்றபோது தலைவர் கலைஞர் எனக்காக வாக்குக் கேட்டார். அது என் நினைவிற்கு வருகிறது. அவ்வாறு அவர் ஓட்டு கேட்கும்போது, “தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். கடைசியாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். இங்கே இருக்கும் மக்கள் ஊர் ஊராக சென்று வாக்கு கேட்கிறாய். உன் பிள்ளைக்கு வாக்கு கேட்க மாட்டாயா? என்று கேட்டு விடக்கூடாது என்பதற்காக நான் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்” என்று சொன்னார்.
அதேபோல நான் தமிழ்நாடு முழுவதும் வாக்கு கேட்டு விட்டேன். இவர் தமிழ்நாடு முழுதும் சுற்றுகிறார். ஆனால் அவரது பிள்ளைக்கு வாக்கு கேட்கவில்லையே என்று நீங்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இப்போது உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நம்முடைய வேட்பாளர் தம்பி உதயநிதி, “நீங்கள் மற்ற இடங்களுக்கு செல்லுங்கள். இங்கு வர வேண்டிய அவசியம் இல்லை. இங்கு வெற்றி உறுதியாகிவிட்டது” என்று சொன்னார்.
ஆனால் “நீ சொல்லலாம், ஆனால் அந்த தொகுதியில் இருக்கும் மக்கள் என்னை சும்மா விடமாட்டார்கள். அதனால் நிச்சயம் நான் வந்து வாக்கு கேட்பேன்” என்று முடிவு செய்து இதற்காக தேதி குறித்து, நேரத்தை குறித்து, நானே வந்து இருக்கிறேன்.
இந்த தொகுதிக்கு ஒரு பெரிய சிறப்பு உண்டு. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் இந்தத் தொகுதியில் மூன்று முறை நின்று மூன்று முறையும் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவ்வாறு வரலாற்றில் இடம்பெற்ற இந்த தொகுதியில் இன்றைக்கு தலைவர் கலைஞருடைய பேரனாக இருக்கும் என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிற்கிறார். அவரைச் சிறப்பான வகையில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வரும் ஆறாம் தேதி மறந்துவிடாமல் நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்.
இன்று பிரச்சாரத்தின் நிறைவு நாள், 7 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய இருக்கிறது. ஊடகங்களில் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வது நமக்கு வழக்கமல்ல, பழக்கமல்ல. நாம் நம்முடைய பணியைத்தான் செய்ய வேண்டும். அதுதான் கலைஞர் அவர்கள் நமக்கு தொடர்ந்து சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதைத்தான் இப்போது நாம் கடைப்பிடிக்கிறோம். அதைப் பார்த்து ஏமாந்து விட மாட்டோம்.
ஆனால் அந்த கருத்துக் கணிப்புகள் ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே அந்த அச்சத்தின் காரணமாக தோல்வி பயத்தின் காரணமாக ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு காலையில் இந்து, தினமணி, தினமலர், தினத்தந்தி என எல்லா பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது திராவிட முன்னேற்றக் கழகம் செய்த தவறுகள் என்று தலைப்புச் செய்திகளாக போட்டு இன்றைக்கு தி.மு.க. பெறவிருக்கும் வெற்றியை எப்படியாவது தடுத்திட வேண்டும் என்று அந்த முயற்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் கேட்கிற ஒரே கேள்வி, கடந்த பத்து வருடங்களாக தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்? அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருக்கிறது. நம் மீது ஏதாவது தவறு இருந்திருந்தால், அவர்கள் விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள் அல்லவா, அதை உண்மை என்று நிரூபித்து, அது சம்பந்தமாக இதுவரை நம் மீது ஏதாவது வழக்கு போட்டு இருக்கிறார்களா? ஒரு வழக்கு உண்டா? அவ்வாறு வழக்கு போட்டாலும் அவை நிரூபிக்கப்பட்டிருக்கிறதா?
கடந்த பத்து ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை. அவர்கள் போட்டிருக்கும் செய்தி உண்மையாக இருந்திருந்தால் நம் மீது வழக்குப் போட்டு இருக்க வேண்டும். நம்மை கைது செய்திருக்க வேண்டும். அதற்கு உரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. ஆனால் நேர்மாறாக நடந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கட்சியின் யோக்கியதை என்னவென்று கேட்டீர்கள் என்றால் ஜெயலலிதா அவர்களின் முதலமைச்சரின் பதவியே பறிபோனது உங்களுக்கு தெரியும். அவர் சிறைக்குப் போன கதை உங்களுக்குத் தெரியும். எனவே ஒரு ஆட்சியில் முதலமைச்சராக இருப்பவர் ஊழல் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்ற வரலாறு தான் அ.தி.மு.க.வின் வரலாறு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
கடந்த பத்து ஆண்டுகாலம் நீங்கள் ஆட்சியில் இருந்தபோது அதைப் பற்றி சிந்திக்காதவர்கள், நினைக்காதவர்கள். இன்றைக்கு தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன்பு இப்படி ஒரு விளம்பரத்தை கொடுத்து மக்களை திசை திருப்ப நினைக்கிறீர்கள். அது ஒருக்காலும் நடக்காது. உங்களுக்கு தக்க பதிலடியை வரும் ஆறாம் தேதி மக்கள் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை நான் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய மகள் வீட்டில் சோதனை செய்தார்கள். அங்கு வந்து காலையிலிருந்து இரவு வரைக்கும் உட்கார்ந்து டிவி பார்த்தார்கள். டீ குடித்தார்கள். பிரியாணி வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டார்கள். அவ்வாறு செய்துவிட்டு, “இன்னும் உங்களுக்கு 25 சீட்டு அதிகமாக கிடைக்கும்” என்று சொல்லிவிட்டு சென்றார்கள். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.
எதற்காக அந்த சோதனை என்றால் நம்மை மிரட்டுவதற்கு, நம்மை தேர்தல் வேலையை செய்யாமல் வீட்டில் முடக்கி வைப்பதற்கு, ஆனால் இதுபோல 1000 பேரை பார்த்த கட்சிதான் தி.மு.க. மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் தி.மு.க.விடம் பலிக்காது. தி.மு.க. பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சி விட மாட்டோம்.
என்னுடைய பெண் வீட்டில் மட்டுமல்ல, ஒரு வாரத்திற்கு முன்பு திருவண்ணாமலை வேட்பாளர் வேலு அவர்கள் வீட்டில் நான் பிரச்சாரத்துக்கு சென்றிருந்தபோது சோதனை செய்தார்கள். அவர் வீட்டில் இரண்டு நாட்கள் சோதனை செய்தார்கள். அதேபோல கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில், அவருடைய நண்பர்கள் வீட்டில், உறவினர்கள் வீட்டில் சோதனை செய்தார்கள்.
எனவே தி.மு.க. தோழர்களை மிரட்டி அச்சுறுத்தி எப்படியாவது இந்தத் தேர்தலில் அவர்களை மூலையில் முடக்கி அதை வைத்து ஒன்றிரண்டு இடங்களில் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாது. 
இன்றைக்கு பொய்யான செய்திகளை எடுத்து உண்மையாக நடந்து இருப்பதைப்போல அந்த விளம்பரம் கொடுத்து இருக்கிறீர்கள்.
அந்த விளம்பரத்தை பார்த்தீர்கள் என்றால் அதை விளம்பரம் போல அமைக்கவில்லை. அதை இன்றைக்கு நேற்று நடந்த செய்தியை போல தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். விவரம் தெரியாதவர்கள் படித்து பார்த்தால் அதை செய்தியாக தான் படிப்பார்கள். அதை விளம்பரமாக பார்க்கமாட்டார்கள். நமக்கு அது தெரிந்ததால் விளம்பரம் என்று நினைக்கிறோம்.
கடந்த பத்து வருடங்களில் இந்த ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் நடந்து இருக்கிறது? அதைத் தமிழ்நாடு மறந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?
தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது. அதேபோல பொள்ளாச்சி சம்பவம். 250க்கும் மேற்பட்ட பெண்களை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ பதிவு செய்து, அதை அவர்களுக்கு போட்டுக் காட்டி, மிரட்டி பணம் பறிக்கும் ஒரு கும்பல். அதில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவருக்கு நெருக்கமானவர்கள், அவரோடு சேர்ந்த சிலர் கூட்டு சேர்ந்து இந்த அக்கிரமத்தை செய்திருக்கிறார்கள். இன்றைக்கு விளம்பரம் கொடுக்கிறார்கள். இதைவிட கொடுமை சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு பெண் எஸ்.பி.க்கே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பாலியல் தொல்லை கொடுத்தது காவல் துறையின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஸ்பெஷல் டிஜிபி இவை எல்லாம் தவறாகத் தெரியவில்லை. இதை மக்கள் நிச்சயமாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் அதனால் நான் உங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இதற்கெல்லாம் முடிவு கட்ட வருகின்ற ஆறாம் தேதி நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று நம்முடைய வேட்பாளர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதே போல நானும் ஒரு வேட்பாளர்தான். முதலமைச்சர் வேட்பாளர். இவர் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர். எனவே தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர் என்பதை மறந்துவிடாமல் உதயசூரியனுக்கு வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
இந்தத் தேர்தல் நம்முடைய தன்மானத்தைக் காப்பாற்ற வேண்டும். சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இது தந்தை பெரியார் பிறந்த மண். அறிஞர் அண்ணா பிறந்த மண். தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். இது திராவிட மண். மறந்துவிடாதீர்கள். மாநில உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறோம். நம்முடைய தன்மானத்தை இழந்து நிற்கிறோம். கடந்த ஐம்பது வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டோம். கடந்த 10 ஆண்டுகளின் வீழ்ச்சியில் இருந்து தமிழகத்தை மீட்க நீங்கள் அத்தனை பேரும் ஆதரவு தரவேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். வணக்கம்.
துறைமுகம்
துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கும் வேட்பாளர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
நம்முடைய வேட்பாளர் சேகர்பாபு அவர்களைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே, இந்தத் தொகுதியில் உங்களிடத்தில் வேட்பாளராக நின்று உங்களால் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினராகப் பொறுப்பேற்று அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். அவர் எப்படி எல்லாம் பணியாற்றியிருக்கிறார்? எப்படி எல்லாம் தொண்டாற்றியிருக்கிறார்? என்பதைப் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.
கொரோனா காலத்தில் மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை துயரங்களைக் களைவதற்காக, வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்காக, திராவிட முன்னேற்ற கழகம் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக, வீட்டில் அடைந்திருந்த மக்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உணவு, மளிகைப் பொருட்கள், மருந்து - மாத்திரைகள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி பல வகைகளில் திராவிட முன்னேற்றக் கழகம் உதவி செய்திருக்கிறது.
அவ்வாறு உதவி செய்து இருப்பவர்கள் பட்டியலில் நம்முடைய மாவட்டச் செயலாளர் சேகர்பாபு அவர்கள்தான் முதலிடத்தில் இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், உயிரையே பணயம் வைத்துப் பணியாற்றி இருக்கும் ஒரு சிறந்த செயல் வீரர்தான் நம்முடைய சேகர்பாபு அவர்கள். அவரை மீண்டும் இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால் அதே நேரத்தில் நம்மை எப்படியாவது அழித்துவிட, ஒழித்துவிட மத்தியில் மதவெறி பிடித்திருக்கும் பாஜக அரசு எவ்வளவோ திட்டங்களை முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறது.
இந்தத் தேர்தலுக்காக பிரதமர் மோடி வருகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார். என்னதான் மோடி வந்தாலும், அமித் ஷா வந்தாலும், அது ஜீரோ தான். நாம் தான் ஹீரோ.
 கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் வந்தார்கள். என்ன ஆனது? ஒரு இடத்தில்கூட அவர்கள் வெற்றி பெற முடியவில்லை என்பது நாட்டுக்கு நன்றாகத் தெரியும். வேறு மாநிலங்களில் உங்கள் பாச்சா பலிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் பலிக்காது. அதைத்தான் இன்றைக்கு நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
 உங்கள் பாசிச அதிகாரம் தமிழ்நாட்டில் எடுபடாது. இது ‘எங்க ஏரியா, உள்ள நுழையவே முடியாது’.
இன்றைக்கு மத்திய அரசிற்கு அடிபணிந்து, கூனிக்குறுகி, சேவகனாக, அடிமையாக, எடுபிடியாக பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைத்து, நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராக வர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அதனால் அரியலூர் பகுதியில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அனிதா என்ற ஒரு மாணவி தற்கொலை செய்து மாண்டு போனார். அதைத் தொடர்ந்து பல மாணவ - மாணவியர்கள் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள்.
அதனால்தான் அனிதாவின் நினைவாக கொளத்தூர் தொகுதியில் அந்த மாணவி பெயரில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ என்ற ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கி, இதுவரை அந்தப் பயிற்சி மையத்தின் மூலமாக ஆயிரம் பேருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன் என்பதைப் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.
எப்படி கொளத்தூரில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ ஒன்றை அமைத்து அதன் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறோமோ, அதே போல தமிழ்நாடு முழுவதும் இருக்கும் எல்லா மாவட்டங்களிலும் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ தொடங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருக்கிறோம்.
அம்மையார் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தார். அவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்கின் காரணமாக அவர் பதவி விலக வேண்டிய ஒரு சூழ்நிலை வந்தது. அவர் சிறைக்குப் போனார். பிறகு வெளியில் வந்தார். அதற்குப் பிறகு அவர் உடல் நலிவுற்று இறந்து போனார்.
அவர் இறந்தது கூட ஒரு மர்ம மரணமாக இருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த விசாரணைக் கமிஷனை முறைப்படுத்தி வேகப்படுத்தி, தவறு செய்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து வெளியில் கொண்டு வருவேன். அதை இந்த ஸ்டாலின் நிச்சயமாகச் செய்வான்.
அந்த அம்மையார் இறந்ததற்குப் பிறகு, இப்போது கடந்த நான்கு வருடங்களாக பழனிசாமி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவர், நான் விருது வாங்கி விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இவர் எப்படி முதலமைச்சரானார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சரானாரா? மண்புழு போல ஊர்ந்து சென்று, தவ்வித் தவ்விச் சென்று காலில் விழுந்து முதலமைச்சரானார். இதைச் சொன்னால், நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லிக்கு விஷம் கம்மியாகத்தான் இருக்கும். இவர் செய்த துரோகத்திற்குதான் விஷம் அதிகம்.
காலில் விழுந்து பதவி வாங்கி விட்டு அந்த அம்மாவையே தூக்கி எறிந்தவர். ஜெயலலிதாவின் மரணத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறார்கள். இப்படி துரோகம் செய்து கொண்டிருப்பவர் மக்களைப் பற்றி கவலைப்படப் போகிறாரா? நிச்சயம் கவலைப்பட மாட்டார்.
எனவே இந்தத் தமிழகத்தை மீட்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு அடிமையாக இருக்கும் இந்தத் தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். அதனால்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையில் நாம் பல உறுதி மொழிகளை தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.
அதில் இந்தத் துறைமுகம் தொகுதிக்கு, ஜோத்பூருக்கு – சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் விடப்படும். இது குறித்து நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசியிருக்கிறார். ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் இருக்கின்ற யானை கவுனி மேம்பாலம் விரைந்து கட்டி முடித்து நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். வியாபாரத் தலமான குறுகிய சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வணிகத் தலங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், குப்பைகள் அதிகளவில் சேர்கின்றது. குப்பைகளை சுழற்சி முறையில் தினந்தோறும் 3 முறை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகளைச் சொல்லி இருக்கிறோம். அதையெல்லாம் விரைவில் நிறைவேற்றப் போகிறோம்.
அதற்கு, நம்முடைய சேகர்பாபு அவர்கள் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ஒரு மக்கள் தொண்டனாக, மக்கள் சேவகனாக கழகத்திற்கு மட்டுமல்ல, இந்த வட்டாரத்தில் இருக்கும் மக்களுக்கும் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் அவர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றலாளர். அவரை நீங்கள் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
ஆர்.கே.நகர்
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் சகோதரர் எபினேசர் அவர்களுக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
இன்றைக்கு ஆளும் கட்சியின் சார்பில் எப்படிப்பட்ட நிலையில் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
கடந்த பத்து வருடங்களாக அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இந்தத் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்த சென்னை மாநகர மக்களுக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்? எப்படிப்பட்ட சாதனைகளைச் செய்திருக்கிறோம்? என்பதைச் சொல்லி வாக்குக் கேட்க வேண்டும். அது அவர்களால் முடியவில்லை.
பிரதமராக இருக்கும் மோடியாக இருந்தாலும், முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியாக இருந்தாலும் நம்மைத் திட்டி விமர்சனம் செய்து பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
மோடி அவர்கள் தாராபுரத்திற்கு வந்தார். அதற்குப் பிறகு மதுரைக்கு வந்தார். அவருக்கு, எய்ம்ஸ் கட்டி முடித்து விட்டோம் என்று சொல்லும் தகுதி இல்லை. தமிழ்நாட்டுக்கு இந்தந்தத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்லும் யோக்கியதை அவருக்கு இல்லை.
தி.மு.க. – காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பேசியிருக்கிறார். அவருக்கு தமிழ்நாட்டில் யார் ஆட்சி செய்கிறார் என்று தெரியவில்லை.
நாம் கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இல்லை. அவ்வாறு ஆட்சியில் இருப்பது அவர்கள் கூட்டணிக் கட்சி அ.தி.மு.க. அதை மறந்துவிட்டுப் பேசுகிறார்.
 பொள்ளாச்சியில் நடந்த சம்பவம், ஒரு பெண் எஸ்.பி.க்கு நடந்த சம்பவம், இதைப்பற்றி எல்லாம் அவர் பேசாமல் தி.மு.க.வும் - காங்கிரசும் தான் காரணம் என்று பேசினார்.
பிரதமர் மோடி அவர்களே… தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, உங்களிடத்தில் சி.பி.ஐ. இருக்கிறது. புலனாய்வுத்துறை இருக்கிறது. அவர்களிடம் தயவு செய்து விசாரியுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் என்னென்ன கொடுமைகள் நடந்திருக்கின்றது என்பதை விசாரியுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள்.
பழனிசாமியை பொறுத்தவரையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், அதுவும் அரசாங்கத்தின் வரிப்பணத்தைப் பயன்படுத்திக் கொடுத்தார். இன்றைக்கு எல்லாப் பத்திரிகைகளிலும் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்திருக்கிறார். நம்மைத் திட்டி விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் என்ன சாதனை செய்திருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்தால் பரவாயில்லை. நம்மை விமர்சனம் செய்து   - அதாவது நில அபகரிப்புக்கு தி.மு.க.தான் காரணம். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாததற்கு காரணம் தி.மு.க.தான். என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். நாம் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எங்கள் மீது வழக்குப் போட்டிருக்க வேண்டும். அவ்வாறு வழக்கு நிரூபிக்கப்பட்டு நம்மைச் சிறையில் தள்ளியிருக்க வேண்டும். அதைச் செய்தார்களா? இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்ல, அவர்கள் கடந்த பத்து வருடங்களில் இந்த ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்ளைதான் அடித்திருக்கிறார்கள். லஞ்சம், ஊழல், கரப்ஷன் - கமிஷன் - கலெக்சன் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
தி.மு.க.வின் சார்பில் ஒரு பெரிய ஊழல் பட்டியலைத் தயாரித்து பழனிசாமி முதல், ஓ.பன்னீர்செல்வம் முதல், அங்கிருக்கும் எல்லா அமைச்சர்களும் என்னென்ன ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு புள்ளி விவரங்களோடு சேகரித்து ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம். ஏற்கனவே சில பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்கு இதுவரையில் பழனிசாமி பதில் சொல்லவில்லை.
ஆனால் இன்றைக்கு நம்மை விமர்சனம் செய்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.
நாங்கள் குற்றம் செய்யவில்லை, ஊழல் செய்யவில்லை என்பதை ஆதாரத்தோடு அவர்கள் விளம்பரம் செய்து இருந்தால் உள்ளபடியே நாம் பாராட்டி இருக்கலாம். அதை விட்டுவிட்டு, இன்றைக்கு நம்மை விமர்சனம் செய்வதற்காகவே அவர்கள் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அது மக்களிடத்தில் எடுபடப் போவதில்லை. அதற்குச் சரியான பாடத்தை வரும் 6ஆம் தேதி அவர்களுக்கு வழங்கிட வேண்டும். இதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.
பெரம்பூர்
வருகின்ற 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் உதயசூரியனுக்கு வாக்களித்து, நம்முடைய வேட்பாளர் ஆர்.டி.சேகர் அவர்களை  இந்தப் பெரம்பூர் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களைத் தேடி, நாடி வந்திருக்கிறேன்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஜீரோ கொடுத்தீர்கள். அதேபோல இந்தச் சட்டமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.விற்கும் நீங்கள் ஜீரோதான் கொடுக்க வேண்டும். இரண்டு பேருக்கும் நீங்கள் ஜீரோ கொடுத்தால், நாம் ஹீரோவாகி விடுவோம். 234 இடங்களிலும் தி.மு.க. அணிதான் வெற்றி பெறப்போகிறது. அதனால்தான் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை வாக்குறுதிகளாக, உறுதிமொழிகளாகக் கொடுத்திருக்கிறோம். மொத்தம் 505 வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம்.
அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கு தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அவ்வாறு ஆட்சிக்கு வருவதற்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஆ.டி.சேகர் அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.
நான் அவருக்கு மட்டும் இங்கு வாக்கு கேட்க வரவில்லை. நான் எனக்கும் உங்களிடத்தில் வாக்கு கேட்கதான் வந்திருக்கிறேன். ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். எனவே உதயசூரியனுக்கு ஆதரவு தந்து ஆர்.டி.சேகர் அவர்களை வெற்றி பெற வையுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
மாதவரம்
சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இந்த மாதவரம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பளர் சுதர்சனம் அவர்களுக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன்.
தமிழ்நாடு கடந்த பத்து ஆண்டுகளில் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது. அவ்வாறு ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிருக்கும் சூழ்நிலையில் நாம் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம்.
குறிப்பாக கடந்த நான்கு வருடங்களில் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த அ.தி.மு.க. ஆட்சி, துரோகம் செய்து, அடிமையாக இருந்து, உரிமைகளை இழந்து இருக்கிறது. அப்படிப்பட்ட அந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல்தான்.
இதில், 234 தொகுதிகளில் பாஜக-வைப் பொறுத்தவரையில் ஜீரோதான். அதேபோல அ.தி.மு.க.வும் ஜீரோ தான். தி.மு.க. தான் ஹீரோ.
பாஜக நிச்சயமாக ஜீரோதான். அதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பார்த்து விட்டோம். ஆனால் அ.தி.மு.க.வையும் ஏன் ஜீரோவாக்க வேண்டும் என்று சொல்கிறேன் என்றால், தப்பித்தவறி ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக அல்லாமல் பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார்.
அதற்கு உதாரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் அ.தி.மு.க.வின் சார்பில் வெற்றி பெற்ற ஓ.பி.எஸ். மகன், தற்போது பாஜக எம்.பி.யாகச் செயல்பட்டு வருவதுதான். 
தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஐந்து முறை ஆட்சியில் இருந்தபோது பெண்களுக்காகப் பல அற்புதமான திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். அதே வழியில் அவருடைய மகன் ஸ்டாலினும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளேன்.
குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், நாம் ஆட்சிக்கு வரவேண்டும். நாம் ஆட்சிக்கு வரவேண்டுமென்றால் சுதர்சனம் அவர்கள் வெற்றி பெற வேண்டும். அவர் வெற்றி பெற உதயசூரியனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.