New - DetailPage - DMK
header_right
“மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகின்றனர்; இதனுடைய முடிவு மே 2 –ஆம் தேதி சிறப்பாக இருக்கும்” கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி

பதிவு: 07 Apr 2021, 14:38:38 மணி

“மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருகின்றனர்; இதனுடைய முடிவு மே 2 –ஆம் தேதி சிறப்பாக இருக்கும்”
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டி
இன்று (06.04.2021) கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:
கழகத் தலைவர்: எங்களது ஜனநாயகக் கடமையை நாங்கள் ஆற்றி இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் மக்கள், அமைதியாக, ஆர்வத்துடன் வாக்களித்துக் கொண்டிருப்பதாக எனக்குச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகக் கடமையை மக்கள் முறையாக ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2 ஆம் தேதி சிறப்பாக இருக்கும். அது உறுதி.
செய்தியாளர்: மக்கள் எழுச்சியுடன் வாக்களித்து வருவதாகக் கருதுகிறீர்கள்?
கழகத் தலைவர்: ஆளும் கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை நான் தெளிவாக உணர்கிறேன்.
செய்தியாளர்: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை திருப்தியாக இருக்கிறதா?
கழகத் தலைவர்: திருப்தி என்றும் சொல்ல முடியாது. அதிருப்தி என்றும் சொல்ல முடியாது.
செய்தியாளர்: தி.மு.க. கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறீர்கள்
கழகத் தலைவர்: என்னைவிட ஊடகங்களில் இருக்கும் உங்களுக்குத்தான் அதிகமாகத் தெரியும். நீங்களே சொன்னால் மகிழ்ச்சியடைவேன்.
செய்தியாளர்: உங்கள் தொகுதி உட்பட முக்கியத் தொகுதிகளில் தேர்தலை நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதே
கழகத் தலைவர்: அது ஆளும்கட்சியின் தூண்டுதல். தோல்வி பயம் வந்துவிட்டதால், எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள். அதற்குத் தேர்தல் ஆணையம் சம்மதிக்கவில்லை என்ற செய்தியும் தொடர்ந்து கிடைத்தது.
செய்தியாளர்: பல இடங்களில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார்கள் வருகின்றதே?
கழகத் தலைவர்: தேர்தல் ஆணையம்தான் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
செய்தியாளர்: அதையும் மீறி முறியடித்து நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என நினைக்கிறீர்களா?
கழகத் தலைவர்: நிச்சயமாக.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் பேட்டியளித்தார்.