New - DetailPage - DMK
header_right
newimg
பட்டப் படிப்பு படித்தவர்கள் துப்புரவுப் பணிகளுக்கு விண்ணப்பமா? பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, எம்.பி., கேள்வி

பதிவு: 04 Dec 2019, 15:46:32 மணி

முன்னாள் மத்திய அமைச்சரும் - தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவரும் - திருபெரும்புதூர் மக்களவை தொகுதி கழக உறுப்பினருமான டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்கள் இன்று (3.12.2019) ஆற்றிய மக்களவையில் ஆற்றிய உரை பின்ருமாறு :-
ஒரு சில நாட்களுக்கு முன்னால் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்த அறிவிப்பில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலைகளை ஆராய்ந்து பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறிந்து உடனடியாக அந்தத் துறையை பாதுகாத்திட முன் வரவேண்டும் என மந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் கோவை மாநகராட்சிக்கான துப்புரவுத் தொழில் ஊழியர்களுக்கான வேலை வாய்ப்பிற்காக அறிவியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் படித்த பட்டதாரிகள் 549 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர் என்பதை மனவேதனையுடன் வெளிப்படுத்தியிருந்த எங்கள் தலைவர் அவர்கள் இந்த மோசமான நிலையிலிருந்து வருங்கால இந்தியாவை வழிநடத்தவிருக்கும் இளைஞர்களை காப்பாற்றிட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரிடையாக பணியாற்றுவோரின் எண்ணிக்கை 40 லட்சம் பேர். மறைமுகமாக பணியாற்றுவோரின் எண்ணிக்கை 100 லட்சம் பேர் என்பதை நாம் உணர்ந்து இந்நாட்டில் மிக அதிக அளவில் வேலைவாய்ப்பினை வழங்கிடும் தகவல் தொழில்நுட்பத் துறையை பாதுகாக்க முன்வரவேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறை 1918-19ல் 18 ஆயிரத்து 100 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய நாட்டின் 2017-18க்கான தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி அளவு 12 ஆயிரத்து 600 கோடி அமெரிக்க டாலர் என்றும், 2018-19 ஆண்டிற்கான ஏற்றுமதி அளவு 13 ஆயிரத்து 700 அமெரிக்க டாலர் எனவும் உயர்ந்துள்ளது. 
ஆனால் இத்துறையின் பெரிய நிறுவனங்கள் ஆண்டிற்கு 10  சதவீத ஊழியர்களை வேலையிலிருந்து வெளியே அனுப்பிக் கொண்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் இந்த ஆண்டில் காக்னிசென்ட் டெக்னாலஜி நிறுவனம் 13,000 ஊழியர்களையும், இன்போசிஸ் நிறுவனம் 12,000 பேரையும் வெளியே அனுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது தொடர்கதையாகும் நிலையில் மொத்தமாக எல்லா நிறுவனங்களும் சுமார் 40,000 பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியே அனுப்ப முடிவெடுத்துள்ளது என்பது உறுதி.
நமது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள இந்த மோசமான நிலை ஏன் வந்தது? என்ன காரணம்? ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் 8 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (G.D.P) இன்றைக்கு 4.5 சதவீதமாக குறைந்துள்ள இந்த நிலையில், உடனடியாக பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு வெள்ளை அறிக்கை ஒன்றினை வெளியிட வேண்டுமென அவைத்தலைவர் அவர்கள் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும், இந்த பாராளுமன்றம் அதுபற்றி விவாதங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் டி.ஆர்.பாலு, எம்.பி. கோரிக்கை விடுத்தார்.