New - DetailPage - DMK
header_right
newimg
காஷ்மீருக்கு செல்ல ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி தருகிறீர்கள்! இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி இல்லையா? பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு, எம்.பி., கேள்வி?

பதிவு: 04 Dec 2019, 15:49:46 மணி

முன்னாள் மத்திய அமைச்சரும் - தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவரும் - திருபெரும்புதூர் மக்களவை தொகுதி கழக உறுப்பினருமான டி.ஆர்.பாலு, எம்.பி., அவர்கள் இன்று (3.12.2019) கேள்வி நேரத்தின்போது, மாண்புமிகு மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி அவர்களிடம், ஐரோப்பிய நாடாளுமன்றக்குழுவின் ஜம்மு - காஷ்மீர் பயணத்தை பற்றிய கேள்வி எழுப்பினார். அதன் பின்விவரம் வருமாறு :-
 
23 உறுப்பினர்கள் அடங்கிய ஐரோப்பிய நாடாளுமன்றக்குழு, ஜம்மு-காஷ்மீருக்கு பயணம் செய்து, அரசியல் தலைவர்களுடன் பேச்சு நடத்தியதா? எனவும், இந்திய அரசின் அழைப்பின்பேரில், அக்குழு பயணம் மேற்கொண்டதா? எனவும், கிரிஸ் டேவிஸ் போன்ற உறுப்பினர்கள் மக்களாட்சியின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளதாக கூறியது உண்மையா? எனவும்,  இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி, வெளிநாட்டு நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டியதன் காரணம் என்ன? என்றும், தி.மு.க. நாடாளுமன்றகுழுத் தலைவரும் - திருபெரும்புதூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு, எம்.பி., கேள்வி எழுப்பினார்.
தில்லியில் உள்ள அணிசேரா நாடுகளின் சர்வதேச நிறுவனத்தின் அழைப்பின் பேரில், 27 ஐரோப்பிய நாடாளுமன்றக்குழு உறுப்பினர்கள், அவர்கள் சொந்தப் பயணமாக, ஜம்மு-காஷ்மீருக்கு 28 அக்டோபர் முதலாக 1ம் தேதி நவம்பர் வரை பயணம் மேற்கொண்டிருந்தனர் என ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது என மாண்புமிகு மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்தால் எவ்வாறு ஜம்மு-காஷ்மீர் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய ஐரோப்பிய நாடாளுமன்றக்குழு உறுப்பினர்கள் அறிய விரும்பியதால், அவர்களுக்கு தேவையான உதவிகளை ஜம்மு-காஷ்மீர் அரசு செய்து உதவியது எனவும்,  ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்திய மக்களுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவுகளை பற்றி அறிய ஐரோப்பிய நாடாளுமன்றக்குழுவின் பயணம் உதவியது எனவும், தீவிரவாதத்திலிருந்து ஜம்மு-காஷ்மீர் பகுதி எவ்வாறு மீண்டு வருகிறது என்பதை அறியவும் இப்பயணம் உதவியதாக அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாகவே, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜம்மு-காஷ்மீர் பயணத்திற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று, கடந்த 22 ஆகஸ்ட் 2019 அன்று புதுதில்லி ஜந்தர்மந்தரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றதை தி.மு.க. நாடாளுமன்றகுழுத் தலைவரும் - திருபெரும்புதூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு, எம்.பி., நினைவு கூர்ந்தார்.