New - DetailPage - DMK
header_right
newimg
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்து கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பேட்டி

பதிவு: 25 Jan 2020, 14:56:58 மணி

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 24ம் தேதி திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும்

கழகத் தலைவரும்,   சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தின் பின்னர், கழகத் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:

செய்தியாளர்:   இந்த செயற்குழுக் கூட்டத்தில் எவை பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டது?

கழகத் தலைவர்: இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முதலாவது, உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைத் தேடித் தந்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம். இரண்டாவதாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம். மூன்றாவதாக, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்க மாட்டோம் என்ற அறிவிப்பை அதிமுக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம்.

நான்காவதாக, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கச் செய்வோம் எனக் கூறி அதிமுக அரசு நடத்தும் நயவஞ்சக நாடகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம். ஐந்தாவதாக, இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வலியுறுத்தும் தீர்மானம். ஆறாவதாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் நடைபெறும் கொள்ளைகள், கொலைகள், அக்கிரமங்கள் இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களது முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டும் என உறுதியேற்கும் தீர்மானம் என ஆறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம். அத்துடன் வரும் 24ஆம் தேதி தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, முடிவெடுத்து அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தியாளர்:  உறுப்பினர்களுக்கு ஏதாவது முக்கிய அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டதா? ஏன் என்றால் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க ஏதுவாக கட்சியில் சிலருக்கு பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என செய்திகள் வருகின்றனவே?

கழகத் தலைவர்:   உங்கள் யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. செயற்குழுவில் இயற்றிய தீர்மானத்தைத்தான் சொல்ல முடியும். 

செய்தியாளர்:  ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதி உள்ளாரே?

கழகத் தலைவர்: சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், இந்த திட்டத்திற்கு மக்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருப்பதாக அவரே சொல்லி இருக்கிறார். ஆனால் நேற்று திடீரென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அந்த திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறதே தவிர, தைரியத்துடன் கேட்கக்கூடிய தெம்பு இந்த அரசுக்கு இல்லை என்பதைத்தான்  இது எடுத்துக்காட்டுகிறது.

செய்தியாளர்:  1971ல் நடைபெற்ற திக பேரணி நிகழ்வு குறித்தும், பெரியார் குறித்தும் தெரிவித்த கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாரே? 

கழகத் தலைவர்:   நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். தமது 94 வயது வரை  இந்தத் தமிழ் இனத்திற்காகவே வாழ்ந்து, போராடி இந்தச் சமுதாயத்திற்காகவே வாழ்ந்த பெரியார் அவர்களைப் பற்றிப் பேசும் போது சற்று யோசித்து, சிந்தித்துப் பேசவேண்டும் என்பதுதான் நண்பர் ரஜினிக்கு நான் வைக்கும் அன்பான வேண்டுகோள்.

 

இவ்வாறு அவர்  பேட்டியளித்தார்.