விவசாயிகளுக்கான நிவாரண ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் – தளபதி மு.க.ஸ்டாலின்சென்னை | 08/01/2017


தமிழகம் இதுவரை கண்டிராத அளவுக்கு வறட்சியின் கொடுமையால் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளாக ஏறத்தாழ 125 விவசாயிகள் தற்கொலையாலும் அதிர்ச்சியாலும் உயிர்ப்பலியாகியுள்ளனர். அதிமுக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 2,500 விவசாயிகள் இந்த பாதிப்பினால் மரணமடைந்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், விவசாயிகளின் தற்கொலைகளையும் அதிர்ச்சி மரணங்களையும் முதுமையினால் ஏற்பட்ட மரணங்கள் என்றும், சொந்தப் பிரச்சினையால் ஏற்பட்டவை மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் தற்கொலை எனவும் இழிவுபடுத்தும் போக்கை இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து கூறிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதாவின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தார்கள் என கூறப்படும் 400-க்கும் மேற்பட்டவர்களில், வயது முதிர்ச்சியானவர்களே கிடையாதா? அவர்களுக்கு உடல் உபாதைகளே ஏற்படவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.  
மேலும், “தமிழகத்தில் தொடர்ந்து பெருகி வரும் விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் குறித்த உண்மை விவரத்தை முழுமையாக வெளியிடுவதுடன், இனியும் மரணங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும், நிவாரண ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் முதல்வர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று தளபதி மு.க.ஸ்டாலின் கூறினார். 


Share this News: